பாரம்பரியத்தையும் நவீனத்தையும் போற்றும் தமிழ் இளையர் விழா 2024

பாரம்பரியத்தையும் நவீனத்தையும் போற்றும் தமிழ் இளையர் விழா 2024

3 mins read
03d89a91-6fb2-4ea4-9758-91133baca637
‘ஆற்றல்’ எனும் கருப்பொருள் அடிப்படையில் இளையர்களின் திறமைகளைக் கண்டறிவதை இவ்வாண்டின் தமிழ் இளையர் விழா அதன் நோக்கமாகக் கொண்டுள்ளது.   - படம்: தமிழ் இளையர் விழா 2024

வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் இளையர் விழா 2024 ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

‘ஆற்றல்’ எனும் கருப்பொருளின் அடிப்படையில் இளையர்களின் திறமைகளைக் கண்டறிவதை இவ்வாண்டின் தமிழ் இளையர் விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.  

தமிழ் இளையர் விழா 2024ல் இவ்வாண்டு மொத்தம் 10 நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. 

பாரம்பரியத்தைப் போற்ற...

இவ்வாண்டு முதல்முறையாக தமிழ் இளையர் விழாவில் பங்காளி அமைப்பாக ‘அகம் நாடகக் குழு’ இணைந்துள்ளது.

‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ என்ற பிரபல கிரேக்க அரசர் மிடாஸ் புராணக் கதையை ஒட்டி மாணவர்களுக்கு செப்டம்பர் 4 முதல் 7 வரை நான்கு நாள் நாடகப் பயிலரங்கு நடைபெறும். 

ஐந்து வயது முதல் ஒன்பது வயது வரையிலான சிறுவர்களுக்கென நடைபெறும் இந்தப் பயிலரங்கு ஆடல், பாடல், கவிதை, கதை மூலம் தமிழ்மொழிப் பற்றை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பயிலரங்கின் இறுதியில் சிறுவர்கள் ஒரு மேடை நாடகத்தைப் படைப்பார்கள். அதைக் காண்பதற்கு பெற்றோர்களுக்கு அழைப்பும் விடுக்கப்படும்.  

அதேபோல, ஐந்து வயது முதல் எட்டு வயது வரையிலான மாணவர்கள் இயல், இசை நாடகம் என முத்தமிழையும் பாராட்டும் முயற்சியாக “கேம்ப் வெற்றி 2024” சிறுவர் முகாம் ஒன்று, செப்டம்பர் 8ஆம் தேதி ‘ஒன் பீப்பள் எஸ்.ஜி’ வளாகத்தில் இடம்பெறும். பாரம்பரியக் கலை அம்சங்களைச் சிறுவர்கள் கற்றறிந்து, கதை, இசை நாடகம் என முகாம் இறுதியில் ஒரு கலை நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கின்றனர். 

முகாமில் மாணவர்களுக்குப் பாரம்பரிய வாழை இலை உணவும் பரிமாறப்படும். 

‘சக்தி நுண்கலைக் கூடம்’ சங்க இலக்கிய காலத்தில் தமிழர்கள் அணிந்திருந்த நகைகளையும் உடைகளையும் பற்றி இளையர்களுக்கு எடுத்துரைக்க ‘கலிங்கம் - ஆற்றல்மிகு பேச்சும் அழகு நடையும்’ என்ற பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. 

சங்க இலக்கிய கால சாயலில் இளையர்கள் தங்கள் சொந்த ஆடைகளை வடிவமைத்து, அவற்றைக் காட்சிப்படுத்தலாம். மேலும், சங்க இலக்கியத்தில் இடம்பெறும் புகழ்பெற்ற கதாபாத்திரங்கள், அவற்றின் வரலாற்றுத் தோற்றம் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ய வாய்ப்பும் வழங்கப்படும்.

தொழில்நுட்பத் தமிழ்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘சொற்கனல் 2024’ விவாதப் போட்டி சிங்கைத் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் செப்டம்பர் 8ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. 

மாணவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தங்களின் பகுப்பாய்வு, விவாதத் திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.  

‘செந்தமிழ் உலகில் செயற்கை நுண்ணறிவு’ பயிலரங்கு, செப்டம்பர் 7ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

சாதாரண தொழில்நுட்ப நுணுக்கங்களைத் தவிர, செயற்கை நுண்ணறிவால் தமிழ் கற்றல் சாத்தியம் என்பதை வலியுறுத்தி, ஒன்பது வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இப்பயிலரங்கு நடத்தப்படுகிறது.  

இந்தப் பயிலரங்கில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கலை, ஒளி-ஒலி உருவாக்கம், மின்னாக்கப் பதிப்பு, புத்தாக்கம் போன்ற கூறுகளைக் கற்றுக் கொண்டு தமிழில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தைக் குழுக்களாகப் படைப்பர். 

இந்தப் பயிலரங்கு ‘கெட்டபுள்ட்’ கற்றல் வளாகத்தில் இடம்பெறும். 

‘அனிமேஷன்’ எனப்படும் இயங்கு படங்களை உருவாக்கி 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் 7ஆம் தேதி செப்டம்பர், தேசிய நூலகக் கட்டடத்தில் தங்களது படைப்பைப் படைக்கவிருக்கின்றனர். 

“கதை நேரம் 2024” நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாணவர் குழுக்களின் இயங்கு படங்கள், அதன் கதைக் கருத்தாக்கம், கதாபாத்திரங்கள், தயாரிப்புச் செயல்முறை, எழுதும் திறன் என்று தமது இயங்கு படத் தயாரிப்பின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். 

மாணவர்கள் தங்கள் தோழர்களுடன் தமிழில் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் உரையாடி ஒரு வலையொளியை உருவாக்கலாம் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ‘தமிழ் அருவி - பேசலாமா!’ பயிலரங்கு.

இந்தப் பயிலரங்கு செப்டம்பர் 8ஆம் தேதி, காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை தேசிய நூலகக் கட்டடத்தில் இடம்பெறும். 

இதைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் வலையொளிகளை ஒரு குழுவாகச் சமூக வலைத்தளங்களிலும் ‘ஸ்பாட்டிஃபை’ இசைத் தளத்திலும் பதிவு செய்வார்கள்.

மாணவர்கள் தொடர்ந்து தமிழில் உரையாட இந்த முயற்சி உதவுகிறது.

தமிழ் இளையர் விழா குறித்த மேல்விவரம் பெற, www.tamil.org.sg என்ற இணையத்தளம் அல்லது வளர்தமிழ் இயக்கத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களை நாடலாம். 

குறிப்புச் சொற்கள்