தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகை வடிவமைப்பை மாற்றவிருக்கும் ‘ஏஐ’ தொழில்நுட்பம்

3 mins read
9107fa45-3f9d-4b09-a9e0-a3f86554e3ab
(வலமிருந்து) ‘ஸென்னா’ குழுவினர் ஹர்ஜீத் செந்தில் குமார், 25, மானவ் விரன் அம்ருதியா, 19, சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் (எஸ்யுடிடி) தொழில்முனைப்புப் பிரிவின் மூத்த மேலாளர் நிக் சங். - படம்: ரவி சிங்காரம்

நீங்கள் அணிய அல்லது விற்க விரும்பும் நகைகளை நீங்களே நொடிப்பொழுதில் வடிவமைக்க விரும்புகிறீர்களா?

‘ஸென்னா’ (https://www.zennahjewel.com/) எனப்படும் ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவுத் (GenAI) தளத்தின் மூலம் அது சாத்தியமாகும்.

இத்தளத்தைத் தம் குழுவினருடன் உருவாக்கியுள்ளார் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் (எஸ்யுடிடி) மாணவர் ஹர்ஜீத் செந்தில் குமார், 25. தற்போது அவர் வடிவமைப்புமூலம் புத்தாக்கத்தில் முதுநிலைப் பட்டம் படித்துவருகிறார்.

‘ஸென்னா’ தளத்தில், உங்கள் நகைகளில் இருக்கவேண்டிய அம்சங்களை நீங்கள் சொற்களாக உட்புகுத்தினால், அதற்கேற்ப அது சில நகைவடிவங்களை முப்பரிமாணத்தில் காட்டும். அதன்பின் நீங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துப் பதிவிறக்கி, நகை தயாரிப்பாளரிடம் கொடுத்து உருவாக்கலாம்.

இத்தளம் நகைக்கடைகளுக்குப் போட்டியன்று, கைகொடுக்கும் கருவி என்கிறார் ஹர்ஜீத்.

“நகைக் கடைகளில் சில வாடிக்கையாளர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் செலவிட்டபின் அவர்களின் விருப்பத்திற்கிணங்க எந்த நகைவடிவங்களும் கிடைக்காமல் ஏமாற்றத்தோடு வீடு திரும்புவதாக வணிகர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்,” என்றார் ஹர்ஜீத்.

“ஆனால், இதையே கணினியில் நகைக் கடைக்காரர்கள் எங்கள் தளத்தைக் காண்பித்தால் வாடிக்கையாளர் விரும்பும் வடிவமைப்பை உருவாக்கலாம். பின்பு அதற்கேற்ப நகையை உருவாக்கி அவர்களிடம் விற்கலாம்,” என்றார் ஹர்ஜீத்.

‘ஸென்னா’ தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவில் நிறுவனமாகத் தொடங்கி, இனி சிங்கப்பூரிலும் நிறுவனமாகவுள்ளது.

புதிய துறையில் அடியெடுத்துவைத்த மாணவர்

நகைத்துறைசார்ந்த எந்தப் பின்னணியும் இல்லாமல் இத்தொழிலைத் தொடங்கினார் ஹர்ஜீத்.

வெவ்வேறு நகை வடிவங்களை நொடிப்பொழுதில் வழங்கும் ‘ஸென்னா’ தளத்தை நிறுவியுள்ள எஸ்யுடிடி ஆராய்ச்சி ஃபெலோ‌ஷிப் மாணவர் ஹர்ஜீத் செந்தில் குமார், 25.
வெவ்வேறு நகை வடிவங்களை நொடிப்பொழுதில் வழங்கும் ‘ஸென்னா’ தளத்தை நிறுவியுள்ள எஸ்யுடிடி ஆராய்ச்சி ஃபெலோ‌ஷிப் மாணவர் ஹர்ஜீத் செந்தில் குமார், 25. - படம்: ரவி சிங்காரம்

“இந்தியாவில் நான் நகை வணிகர்கள் பலரைச் சந்தித்தேன். மும்பைக்குச் சென்று ரத்தினக் கற்களைப் பற்றிக் கற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

“இந்தியாவில் நான் 100 வாடிக்கையாளர்களுடனும் 80 வர்த்தகர்களுடனும் பேசினேன். வாடிக்கையாளர்களில் 80 விழுக்காட்டினர், குறிப்பாக இளையர்கள், தனிப்பயனாக்கப்பட்ட நகைகளைத் தேர்ந்தெடுக்கத் தயாராக உள்ளனர்,” என்றார் ஹர்ஜீத்.

தனிப்பயனாக்கப்பட்ட (Personalized) வடிவமைப்பில் ஹர்ஜீத்துக்கு முதன்முதலில் நாட்டம் வந்தது, அவருடைய பாட்டிக்குக் காலணி வடிவமைத்தபோதுதான்.

“என் பாட்டி துடிப்பானவர். ஆனால், தன் வாழ்நாளின் கடைசி பத்து ஆண்டுகளில் அவரின் வலப்புறம் செயலற்றுப்போனது. அவர் சுயமாகச் செயல்பட வேண்டும் என்பதால் காலை மடக்காமலேயே அணியும் காலணியைத் தயாரிக்க விரும்பினேன்.

“ஆனால், ஒரு காலணியில் எத்தனையோ வி‌‌ஷயங்கள் மாறக்கூடும் - ஒவ்வொருவரின் கால் அமைப்பும் வெவ்வேறு; பலவகை மூலப்பொருள்கள் தேவைப்படும். தானியக்க முறையில் வடிவமைப்பது கடினம். நகைகளில் குறிப்பிட்ட மூலப்பொருள்களே பயன்படுத்தப்படுவதால் தானியக்க முறைக்கு நகைத்துறை இன்னும் ஏற்புடையது எனக் கருதினேன்,” என்றார் ஹர்ஜீத்.

பல்கலைக்கழகத்தால் உந்துதல்

எஸ்யுடிடிவழி ‘டிசைன் ஆர்ச்சர்ட்’டுக்குச் சென்று பத்து தனிப்பயனாக்கப்பட்ட நகை வடிவமைப்பாளர்களுடன் உரையாடினார் ஹர்ஜீத். இதுவரை ஒரு வடிவமைப்பாளர் ‘ஸென்னா’வைப் பயன்படுத்த உறுதியளித்துள்ளார்.

எஸ்யுடிடியின் ‘எதையேனும் தொடங்குங்கள்’ (Start Something) திட்டம் மூலம் எஸ்யுடிடி இளநிலை மாணவர் மானவ் விரன் அம்ருதியா, 19, ஹர்ஜீத்துக்கு அறிமுகமாகி, குழுவில் இணைந்தார். ‘ஸென்னா’ தளத்தின் முகப்பை அவர்தான் வடிவமைத்தார். ஜென்ஏஐ தொழில்நுட்ப நிபுணராக டெல்லியைச் சார்ந்த சந்தீப் குமார் பத்ரா குழுவில் இணைந்தார்.

‘ஸென்னா’ தளத்தின் முகப்பை வடிவமைத்த மானவ் விரன் அம்ருதியா.
‘ஸென்னா’ தளத்தின் முகப்பை வடிவமைத்த மானவ் விரன் அம்ருதியா. - படம்: ரவி சிங்காரம்

எஸ்யுடிடியின் ‘பேபி ‌‌‌ஷார்க்’ நிதி மூலம் $6,000 நிதியையும் இந்த வணிகம் பெற்றுள்ளது. அவர்களுக்காக முதலீட்டாளர்களுடன் அறிமுகங்களையும் எஸ்யுடிடி ஏற்படுத்திவருகிறது. குழுவினர் தொடர்ந்து முதலீடு நாடிவருகின்றனர்.

இதையடுத்து, நகை வடிவமைப்பாளர்களுடன் செய்த ஒப்பந்தங்கள்மூலம் பெற்ற கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வடிவங்களைத் தளத்தில் உட்புகுத்தி பயிற்சி கொடுத்து, ஹர்ஜீத் அதை மேம்படுத்தவுள்ளார்.

இதுவே ஹர்ஜீத்துக்கு ஆகப் பிடித்த மோதிர வடிவம். இதை அணிவதால் யாருடன் கைகுலுக்கும்போதும் ‘ஸென்னா’வை எளிதாக அவரால் அறிமுகப்படுத்த முடிகிறது.
இதுவே ஹர்ஜீத்துக்கு ஆகப் பிடித்த மோதிர வடிவம். இதை அணிவதால் யாருடன் கைகுலுக்கும்போதும் ‘ஸென்னா’வை எளிதாக அவரால் அறிமுகப்படுத்த முடிகிறது. - படம்: ரவி சிங்காரம்

மேலும், நகை வடிவமைப்பாளர்கள் தங்களின் வடிவமைப்புகளை புகைப்படங்களாகத் தளத்தினுள் உட்புகுத்தினால் அதே பாணி வடிவங்களை வழங்கும் அம்சத்தையும் தளத்தில் அவர் சேர்க்கவுள்ளார்.

எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பியதைக் குரல் மூலமாகப் பதிவுசெய்யலாம் என்கிறார் ஹர்ஜீத். தம் சிறந்த நினைவுகளை ‘ஸென்னா’வுடன் பகிர்ந்து, அவற்றைப் பிரதிபலிக்கும் நகைகளையும் உருவாக்கலாம் என்கிறார் அவர்.

நகைகளை, கணினியில் வடிவமைப்பது முதற்கட்டமே. அதையடுத்து, அவற்றை உருவாக்க வேண்டும்.

ஒரு வடிவமைப்பாளராக எனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வெகுமதி, நான் வடிவமைத்தது பல்லாண்டுகாலம் மக்களின் மனங்களில் நீடிப்பதே.
‘ஸென்னா’ நிறுவனர் ஹர்ஜீத் செந்தில் குமார், 25

“சில சமயம் அழகான வடிவங்களைக் கணினியில் உருவாக்கியபின் தயாரிக்கும்போது சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அதனால், தயாரிக்கும் வகையிலான வடிவங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம்,” என்று ஹர்ஜீத் விளக்கினார்.

“ஒரு வடிவமைப்பாளராக எனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வெகுமதி, நான் வடிவமைத்தது பல்லாண்டுகாலம் மக்களின் மனங்களில் நீடிப்பதுதான். அதுவே, இந்தத் தொழிலின் நோக்கம்,” என்கிறார் இந்த இளையர்.

‘ஸென்னா’வால் வடிவமைக்கப்பட்ட மோதிரங்களில் சில. சென்னையிலுள்ள தமது சிப்பிப்பாறை நாயின் முகத்தைக் கொண்டு மோதிரத்தை வடிவமைத்துள்ளார் ஹர்ஜீத்.
‘ஸென்னா’வால் வடிவமைக்கப்பட்ட மோதிரங்களில் சில. சென்னையிலுள்ள தமது சிப்பிப்பாறை நாயின் முகத்தைக் கொண்டு மோதிரத்தை வடிவமைத்துள்ளார் ஹர்ஜீத். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்