ஒருவரது முகத்தைத் தவறான முறையில் பயன்படுத்தும் வன்போலி (deepfake) படங்களைக் கண்டறியும் தளம், நோயாளிக்கு எந்நேரத்தில் எந்த மாத்திரையை வழங்குவது என நினைவுபடுத்தும் செயலி, விளையாட்டுகள்மூலம் வேலையிடத்தை சுவாரசியமாக்கும் ‘சேட்பாட்’ எனப் புத்தாக்கத்தை மையமாகக் கொண்டு பல தொழில்நுட்பப் படைப்புகளைத் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஜனவரி 23ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரித் தகவல் தொழில்நுட்ப நாளில் கிட்டத்தட்ட 30 மாணவ அணிகளின் இறுதியாண்டுப் படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. அவற்றைக் காணத் தொழில்துறைத் தலைவர்களும் சக மாணவர்களும் வந்திருந்தனர்.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை மூன்றே மாதங்களில் மாணவர்கள் இத்திட்டங்களை உருவாக்கியிருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வெளிநிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட்டு உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு என்பது மாணவர்களின் படைப்புகளில் பொதுவாகக் காணப்பட்ட ஒன்று.
“செயற்கை நுண்ணறிவை எவ்வாறு நம் செயல்பாடுகளில் புகுத்துவது எனப் பல நிறுவனங்கள் தங்களையே கேட்டுக்கொள்கின்றன. ஆனால், செயற்கை நுண்ணறிவில் நாட்டம் இருந்தாலும் அதைப் பயன்படுத்துவதில் உதவி தேவைப்படுகிறது,” என்றார் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரித் தகவல் தொழில்நுட்பப் பள்ளியின் தொழில்துறை மேம்பாடு, திறன்களுக்கான உதவி இயக்குநர் சதீஷ் ஸ்ரீதரன்.
மாணவர்களின் புத்தாக்கத் திட்டங்கள் சில, நிறுவனங்களின் சொந்தப் பயன்பாட்டிற்கு அல்லது விற்பனைக்குத் தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.
சட்ட உதவித் தளம்
சிங்கப்பூரில் சிறிய சட்ட நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களைச் சமாளிக்கத் துணைபுரிய ‘ஜூரிஸ்ஏஐ’ (JurisAI) எனும் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை ஒரு குழு உருவாக்கியுள்ளது
“சிங்கப்பூரிலுள்ள 1,000க்கும் மேற்பட்ட சட்ட நிறுவனங்களில் 82 விழுக்காடு சிறிய நிறுவனங்களே. அதாவது, ஒன்று முதல் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டவை. அதனால், பல ஆவணங்களைப் படித்துப் பார்க்கும் அளவிற்கு அவர்களுக்கு நேரமும் தொழிலாளர்களும் கிடையாது. உதவிக்கு மென்பொருள்களை நாடினாலும் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு தளங்களுக்குச் செல்லவேண்டியுள்ளது,” என விவரித்தார் குழு உறுப்பினர் ஆறுமுகம் சங்கரபாண்டி.
தொடர்புடைய செய்திகள்
அதனால், சிறிய சட்ட நிறுவனங்களுக்குத் தேவைப்படும் முக்கியச் சட்ட சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும் ‘ஜூரிஸ்ஏஐ’யை அவர்கள் உருவாக்கினர். பல ஆவணங்களை நிர்வகித்தல், சுருக்குதல், வாக்குமூலம் (Affidavit) உருவாக்குதல் தொடர்பான வழக்குகளைப் பட்டியலிடல் போன்ற சேவைகளோடு ஆலோசனைகளைப் பரிந்துரைக்கும் ‘சேட்போட்’டும் இத்தளத்தில் உள்ளடங்குகிறது.
‘பிஸிபோடி டெக்னாலஜி’ எனும் சட்டத் தொழில்நுட்ப நிறுவனத்துடனும் ‘இன்டெலைஜென் லீகல் எல்எல்சி’ எனும் சட்ட நிறுவனத்துடனும் இணைந்து மாணவர்கள் இத்தளத்தை உருவாக்கியுள்ளனர். தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வணிகப் பள்ளியில் சட்டம் பயிலும் மாணவர்களும் தளத்தை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கினர்.
இதையடுத்து, இத்தளத்தை இரண்டாம் பருவத்திற்குக் கொண்டுசெல்ல கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
“உச்ச நீதிமன்றத்திடமும் இத்தளத்தைக் காட்டினோம். இது பயனுள்ளது என்றும் சில அம்சங்கள் மேம்படுத்தப்படலாம் என்றும் நீதிமன்றம் கூறியது,” என்றார் மாணவர்களின் மேற்பார்வையாளரும் மூத்த ஆராய்ச்சியாளருமான டாக்டர் சியா சாவ் போ.