தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
திடல்தடத்தில் ஓடத் தொடங்கிய முதல் ஆண்டில் தங்கப் பதக்கம்

800 மீட்டர் ஓட்டத்தில் திருபன் சாதனை

2 mins read
8016d2c9-b125-41c4-bad8-afad49dd662d
தேசியக் கொடியின் முன் நிற்கும் 24 வயது திருபன் தனராஜன். - படம்: திருபன் தனராஜன்

தென்கொரியாவின் தென்றல் வீசும் மாலை நேர அமைதிக்கிடையே திடல்தடத் துறையில் சிங்கப்பூருக்கு மற்றொரு சாதனை பதிந்தது.

ஆசிய வெற்றியாளர் கிண்ணத்தில் மே 30ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை சிங்கப்பூர் திடல்தட வீரர் திருபன் தனராஜன், 1 நிமிடம் 49.94 வினாடிகளில் நிறைவேற்றினார்.

1987ஆம் ஆண்டில் அந்தச் சாதனையை நிகழ்த்த திடல்தட வீரர் சின்னதம்பி பாண்டியன் எடுத்துக்கொண்ட 1 நிமிடம் 50.56 வினாடிகளைவிட குறைந்த நேரத்தில் ஓடி திருபன் சாதனை படைத்துள்ளார். ஏறத்தாழ 40 ஆண்டுகள் நீடித்த அந்தச் சாதனையை முறியடித்த முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மே 30ஆம் தேதியன்று தென்கொரியாவில் 24 வயது திருபன் தனராஜன், 38 ஆண்டுகள் நீடித்த ஆண்களுக்கான 800 மீட்டர் தேசிய சாதனையை முறியடிக்கவிருந்த தருணம்.
மே 30ஆம் தேதியன்று தென்கொரியாவில் 24 வயது திருபன் தனராஜன், 38 ஆண்டுகள் நீடித்த ஆண்களுக்கான 800 மீட்டர் தேசிய சாதனையை முறியடிக்கவிருந்த தருணம். - படம் சிங்கப்பூர் திடல்தட, விளையாட்டுச் சங்கம்

வெற்றிக்கனியை எட்டிப் பறித்தபின் நிகழ்ந்த அழகிய தருணத்தைத் திருபன் பகிர்ந்தார்.

“என் பயிற்றுவிப்பாளர்களும் குடும்பத்தினரும் ஆனந்தக்கண்ணீர் சிந்தியதைக் கண்டேன்,” என்றார் 24 வயது திருபன்.

அந்தச் சாதனை நிகழ்த்துவதற்கான அவரது பாதை, காற்பந்துத் திடலில் தொடங்கியது.

“தொடக்கப்பள்ளிப் பருவத்தில் நான் பெரும்பாலும் காற்பந்துதான் விளையாடினேன்,” என்று திருபன் நினைவுகூர்ந்தார். 

ஆயினும், தேசியத் தொடக்கக் கல்லூரியில் உயர்நிலை 2ல் பயின்றுகொண்டிருந்தபோது காற்பந்து விளையாட்டு இல்லாததால் மற்றோர் இணைப்பாட நடவடிக்கையை அவர் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

திடல்தட விளையாட்டைத் தெரிவுசெய்த திருபன், ஓடத் தொடங்கிய ஒரே ஆண்டில் சிங்கப்பூர்ப் பள்ளிகள் குழுவைப் பிரதிநிதித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.

“தேசிய அளவில் சாதிக்கவேண்டும் என்ற வேட்கைச் சுடரை, இந்தப் பதக்கம் என் மனத்தில் ஏற்றியது,” என்று அவர் கூறினார்.

இந்தப் பந்தயத்திற்காக திருபன் பயிற்சி எடுத்துப் பல்வேறு வழிகளில் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டார். 

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் நடந்த பந்தயங்களில் போட்டியிட்டார்.

இருந்தபோதும், ஜப்பானின் வசேடா பல்கலைக்கழத்தில் மத்திம தொலைவு ஓட்டப்பந்தயக் குழுவினருடன் பயிற்சி செய்தது திருபனுக்குக் கூடுதல் உறுதியைத் தந்தது. 

சிங்கப்பூர் திடல்தடச் சங்கத்தில் முழு நேரமாகச் செயல்படும் இவர், காற்பந்துமீது அதீத ஆர்வம் கொண்டவர். எஞ்சியுள்ள நேரத்தைக் குடும்பத்தினருடனும் காதலியுடனும் செலவழிப்பதாகக் கூறினார். 

ஆறு நாள்களில் 11 முறை இவர் ஓட்டப் பயிற்சி செய்வார். பெரும்பாலான நாள்களில் இவர் இருமுறை பயிற்சி செய்வார். 

திருபனின் கடுமையான பயிற்சி, அவரது மேம்பாட்டுக்கு வித்திடுகிறது. உலகப் புகழ்பெற்ற விளையாட்டாளர்கள் ஜேக்கப் இங்கெபிரிக்ஸ்டன், மார்க்கோ அரோப் ஆகியோரை முன்மாதிரிகளாகத் திருபன் கருதுகிறார்.  

“அவர்கள் பயிற்சி செய்வதைக் காட்டும் காணொளிகளை நான் விரும்பிப் பார்ப்பேன். அவர்கள் தங்கள் பயிற்சிகளில் காட்டும் கண்ணியத்தை ரசிப்பேன்,” என்றார் திருபன்.

விளையாட்டு வீரர்களின் சுயசரிதைகளையும் இவர் விரும்பிப் படிப்பார். 

மனது வைத்தால் எதுவும் சாத்தியம் என்பது திருபனின் வழிமுறை. “குறிப்பாக, திடல்தட விளையாட்டைப் பொறுத்தவரையில் எல்லாம் மனவுறுதியில்தான் உள்ளது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்