சிங்கப்பூரில் எல்லாமே இருக்கும்போது, பணத்தைச் செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது தேவையற்ற செயல் என்று ஒரு காலத்தில் எண்ணியவர்தான் 22 வயதான சிங்கப்பூர் இளையர் திலக் தர்ஷன். ஆனால், இன்று அவரே உலகிலுள்ள 195 நாடுகளுக்கும் செல்லவேண்டும் என்ற மாபெரும் இலக்கோடு தமது பயணத்தைத் தொடர்கிறார். புதிய கலாசாரங்களைத் தேடிச் செல்லும் இளையர்களுக்குத் திலக்கின் இத்தகைய தனிப்பயண அனுபவங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைகின்றன.
தமது 20வது வயதில் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொண்ட முதல் தனிப்பயணம் உலகம் குறித்த திலக்கின் பார்வையை முழுமையாக மாற்றியது.
“முன்னர் எனக்குப் பயணங்கள்மீது பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்குத் தனிப்பயணம் மேற்கொண்டபோது அந்த அனுபவம் என்னை மிகவும் ஈர்த்தது. உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் எனக்குள் எழுந்தது,” என்று தமது பயண ஆசையின் தொடக்கத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.
தனது இலக்கின் ஒரு பகுதியாக, 18 நாள்களில் தென்னாப்பிரிக்கா, லெசோத்தோ, எஸ்வாத்தினி, மொசாம்பிக் ஆகிய நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்ல திலக் முடிவெடுத்தார். இந்தச் சவாலான பயணத்திற்கு சுமார் ஆறு மாத காலம் அவர் விரிவான திட்டமிடலை மேற்கொண்டார்.
இளையர்களுக்குப் பயணம் செய்யப் பணம் ஒரு தடையாக இருக்க வேண்டியதில்லை என்பதைத் திலக் நிரூபித்துள்ளார். விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு என அனைத்தையும் உள்ளடக்கி 3,000 வெள்ளி என இலக்கு நிர்ணயித்த அவர், இறுதியில் 2,950 வெள்ளியில் பயணத்தை முடித்து வியப்பிலாழ்த்தினார்.
இது குறித்துப் பேசிய அவர், “நிறைய செலவு செய்து யாராலும் பயணம் செய்ய முடியும். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே செலவு செய்வது கொஞ்சம் கடினம். நான் ஒரு செலவு செய்யப் போகிறேன் என்றால், இது கட்டாயம் தேவையா என்று மட்டுமே யோசிப்பேன்,” என்று தனது நிதி நிர்வாகத்தின் ரகசியத்தைக் கூறினார்.
பயணங்கள் எப்போதுமே நாம் திட்டமிட்டபடி அமைவதில்லை என்பதற்குத் திலக்கின் பயணமே சிறந்த சான்று. பயணச் செலவைக் கட்டுக்குள் வைப்பதற்காக, ஜோகன்னஸ்பர்க்கில் தங்குவதைத் தவிர்த்துவிட்டு ஒரே நாளில் மூன்று நாடுகளின் எல்லைகளைக் கடக்க வேண்டும் என்ற கடினமான முடிவை அவர் எடுத்தார்.
லெசோத்தோ செல்வதற்காகப் புறப்பட்டபோது, அவரிடமிருந்த உள்ளூர் ரொக்கப் பணம் முழுமையாகத் தீர்ந்துவிட்டது. ஜோகன்னஸ்பர்க் மையப்பகுதியில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுக்க முயன்றபோது, எவ்விதக் காரணமுமின்றி அவரது அனைத்து வங்கி அட்டைகளும் நிராகரிக்கப்பட்டன. கையில் கனமான பை, போக்குவரத்து வசதிகள் குறைவதற்குள் அதாவது மாலை 4 மணிக்குள் பேருந்தைப் பிடித்தாக வேண்டிய கட்டாயம் என மிகுந்த மன அழுத்தத்திற்கு அவர் ஆளானார்.
மாற்று வழியின்றித் துணிச்சலாகப் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றவருக்கு, அவசரத் தேவைக்காக வைத்திருந்த அமெரிக்க டாலர் அப்போது கைகொடுத்தன. பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிலர் திலக்கை ஒரு தனிமையான வாகனத்தின் அருகே அழைத்துச் சென்றபோது, தான் கடத்தப்படப் போவதாகவும் மீண்டும் சிங்கப்பூர் திரும்பப்போவதில்லை என்றும் திலக் அஞ்சினார். ஆனால், அவர்கள் அமெரிக்க டாலரைப் பெற்றுக்கொண்டு தென்னாப்பிரிக்க ரேண்டுகளை வழங்கினர். ஒருவழியாக அந்தச் சிக்கலிலிருந்து விடுபட்டுத் தமது பயணத்தைத் தொடர்ந்தார்.
இந்தச் சவால்களுக்கு மத்தியில், லெசோத்தோ நாட்டில் திலக்கிற்குக் கிடைத்த உள்ளூர் மக்களின் அன்பும் விருந்தோம்பலும் அவரது பயணத்தின் ஆகச்சிறந்த தருணமாக அமைந்தது. இரவு சுமார் 10 மணியளவில் தென்னாப்பிரிக்க எல்லையான லேடிபிராண்ட் பகுதியை அடைந்த அவர், லெசோத்தோ செல்வதற்கு அங்கிருந்த காவல்துறை அதிகாரியின் உதவியை நாடினார். அப்போது அங்கு வந்த தாபோ தம்பதியர் திலக்கைத் தங்கள் காரிலேயே லெசோத்தோ எல்லைக்குள் அழைத்துச் சென்றனர். வழியில் உரையாடியபோது, சிங்கப்பூர் என்ற ஒரு நாடு இருப்பதே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து திலக் ஆச்சரியப்பட்டார்.
தொடக்கத்தில் ஒரு நண்பரின் வீட்டில் குறைந்த வாடகைக்கு அறையை ஏற்பாடு செய்து கொடுத்த அத்தம்பதியர், திலக்கின் நிதி நெருக்கடியைப் புரிந்துகொண்டு, தங்கள் சகோதரர் வீட்டிலேயே தங்குமாறு அன்போடு அழைப்பு விடுத்தனர். அந்தச் சகோதரர் குடும்பத்தினரும் திலக்கை மனதார வரவேற்றனர்.
அடுத்த நாள் காலை, அவர்கள் வீட்டிலேயே சுட்ட சுவையான ரொட்டியுடன் காலை உணவு பரிமாறப்பட்டது. திருமதி தாபோவின் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியிலும் திலக் கலந்துகொண்டுச் சிறப்பித்தார். சுற்றுலாப் பயணிகளுக்கான இடங்களை மட்டும் பார்க்காமல், உண்மையான உள்ளூர் அனுபவத்தை வழங்கிய அக்குடும்பத்தினருடன் திலக் இன்றும் தொடர்பில் உள்ளார். அவர்கள் அடுத்த ஆண்டு சிங்கப்பூருக்கு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தனிப்பயணம் மேற்கொள்ள விரும்பும் இளையர்களுக்குத் திலக் தமது அனுபவத்திலிருந்து சில முக்கிய ஆலோசனைகளை முன்வைக்கிறார். பயணம் செய்ய விரும்புபவர்கள் எடுத்தவுடனேயே சவாலான நாடுகளுக்குச் செல்லாமல், முதலில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்குச் சென்று பயணத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
“ஆரம்பத்தில் வளர்ந்த நாடுகளுக்குச் சென்று, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது, சிம் கார்ட் வாங்குவது போன்ற பயண நடைமுறைகளைப் புரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு மற்ற இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்,” என்று அவர் அறிவுறுத்துகிறார்.
மேலும், ஆப்பிரிக்கா போன்ற புதிய இடங்களுக்குச் செல்லும்போது திறந்த மனத்துடன் செல்வது மிக அவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார். சமூக வலைத்தளங்களில் காட்டுவதற்காகப் பயணம் செய்யாமல், தமக்காகப் பயணம் செய்வதையே திலக் விரும்புகிறார். “நான் ஓர் இடத்திற்குச் செல்கிறேன் என்றால், அந்த இடத்தை முழுமையாக ரசித்துப் பார்க்க வேண்டும். எப்போதும் கேமராவைப் பிடித்துக்கொண்டே சென்றால், எல்லாமே அந்த கேமராவிற்காகச் செய்வது போலாகிவிடும். நான் எனக்காகவே பயணம் செய்யத் தொடங்கினேன்,” என்று கூறுகிறார் திலக்.
பயணம் என்பது பண விரயமன்று; அது தற்சார்பு, சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றைக் கற்றுத்தரும் மாபெரும் வாழ்க்கை அனுபவம் என்பதைத் திலக்கின் பயணம் உணர்த்துகிறது.


