இன்றைய இளையர்கள் நாளைய தலைவர்கள் என்று 1990ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலா குறிப்பிட்டிருந்தாலும், நாளைய இளையர்களை உருவாக்குவதில் இன்றைய பாலர்பள்ளிக் கல்வியாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
சிறுவர்கள்மீது அன்புடனும் கற்பித்தல்மீது வேட்கையுடனும் செயல்படும் அத்தகைய இரு பாலர்பள்ளி கல்வியாளர்கள் கடந்துவந்த பாதைகள் குறித்து நாம் அறிந்து கொள்வோம்.
கற்பித்தல் பயணம்
பெரும்பாலான பாலர்பள்ளிக் கல்வியாளர்கள், உயர்நிலைப் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு பலதுறைத் தொழிற்கல்லூரியில் பாலர்பருவக் கல்வியில் பட்டயம் பெற்று முழுநேரக் கல்வியாளர்களாகப் பணியில் இணைகின்றனர்.
ஆனால், 30 வயது கிரிஷானா தேவி நாயுடுவின் பயணம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.
தமது 16 வயதில் வழக்கநிலைத் தேர்வுகளை (என்-லெவல்) முடித்த பின்னர், அவர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் வணிகம் சார்ந்த துறையில் பயின்றார். ஆனால், ஓராண்டிற்குப் பிறகு அத்துறை தமக்குப் பிடிக்காததால் அப்பயணத்திலிருந்து விலகினார்.
அதைத் தொடர்ந்து, தமது தந்தையின் ஆதரவுடன் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உளவியல் துறையில் அவர் பட்டயம் பெற்றார். எனினும், அத்துறையில் முழுநேரமாகப் பணியாற்றுவது கடினமெனத் தோன்றியதால், அவர் பல்வேறு பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
தமது 20களின் நடுப்பகுதியில் தமது பாட்டியைப் பேணி வந்த அவருக்கு தொழில்சார் சிகிச்சையின்மீது (Occupational Therapy) ஆர்வம் பிறக்கத் தொடங்கியது. அதனால், மூன்று மாத பயிற்சி ஒன்றிற்குச் சென்ற அவர் ஈராண்டுகளுக்கு அத்துறையில் பணியாற்றினார்.
அவர் வேலைசெய்து வந்த மருத்துவமனையில் கொவிட்-19 பெருந்தொற்றின்போது தாதிகள் பற்றாக்குறை இருந்தது. அதனால், அவர்களுக்கு உதவும் வகையில் துணை தாதியராகத் திருவாட்டி கிரிஷானா செயல்பட்டார்.
அத்துறை தமக்கானதாக அக்கட்டத்தில் அவருக்குத் தோன்றியதால் அவரது 27வது வயதில் தனது சாதாரண நிலை தேர்வுகளை (ஓ லெவெல்) எடுக்க அவர் முடிவு செய்தார்.
ஏறக்குறைய பத்தாண்டுகள் முறையான கல்வி கற்காமல் மீண்டும் பாடப்புத்தகங்களின் பக்கம் திரும்பினார் கிரிஷானா. தமது பெற்றோர்களின் ஆதரவுடன் தேர்வுகளில் சிறப்பாகச் செய்து, பலதுறை தொழிற்கல்லூரியில் தாதிமை துறையில் பயில அவர் முனைந்தார்.
ஆனால், கணக்குப் பாடத்தில் நினைத்ததைவிட ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் அவர் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் ஆரம்பக்கால கல்வி துறையில் பயில நேரிட்டது.
ஆனால், அதை அவர் தோல்வியாகக் கருதாமல் முன்னேற்றத்திற்கான முதல் படியாகப் பார்த்தார்.
தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் நைடெக் சான்றிதழ் பெற்று தற்போது நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரியில் ஆரம்பக்கால கல்வியில் பட்டயம் பெற முதலாம் ஆண்டுப் பயின்று வருகிறார்.
“என் பயணம் பிற மாணவர்களைப் போலன்று. எது நடந்தாலும் எதிர்காலத்தில் பார்த்துக்கொள்வோம் என்ற மனப்பான்மையை என்னால் கொண்டிருக்க முடியாது. அதற்கான இளமை என்னிடம் இல்லை.
“நான் பகுதி நேரமாக வேலை செய்துகொண்டே படிக்கிறேன். கல்வியில் சிறக்க வேண்டுமென்ற வேட்கை எனக்கு இருக்கிறது. பிள்ளைகளின்மீது நிறைய அன்பும் உள்ளது. ஆகையால், என்னால் முடிந்தவரை முழு உழைப்பைக் கல்வியில் செலுத்துகிறேன்,” என்றார் அவர்.
தம்மைப் பொறுத்தவரை கல்வி என்பது அனைத்து மாணவர்களுக்குமானதாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணுகிறார். அத்தகைய சூழலை உருவாக்கவும் அதற்குப் பங்காளிக்கவும் அவர் ஆவலுடன் செயல்படுகிறார்.
அவரது விடாமுயற்சியையும் வேட்கையையும் சிறப்பிக்கும் வகையில் அவருக்குப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் பயிற்சி ஆசிரியர் அங்கீகார விருது வழங்கப்பட்டது.
சிறு வயது கனவு
கிரிஷானாவிற்கு அவரது கல்வியாளர் பயணம் எதிர்பாராமல் நடந்த ஒன்றாக இருந்தாலும், கந்தசாமி லோகேஷ்வரிக்குப் பாலர் பள்ளி கல்வியாளர் ஆக வேண்டுமென்ற எண்ணம் சிறு வயதிலேயே தோன்றிவிட்டது.
“எனக்கு சிறு வயதில் ஆங்கிலம் கற்பதில் நிறைய சிரமங்கள் இருந்தன. ஆனால், எனது பாலர் பள்ளி ஆசிரியர்கள் அம்மொழியைப் பொறுமையாகக் கற்பித்து எனக்கு மிகுந்த ஆதரவளித்தனர். அக்கட்டத்திலேயே எனக்கும் அவர்களைப் போன்ற கல்வியாளராக நானும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது,” என்றார் 21 வயது லோகேஷ்வரி.
அவரது கல்விப் பயணத்தில் அவரது எண்ணத்தையும் வேட்கையையும் ஆழமாக்கியது அவரது அக்காவின் தோழி. அவரது அக்காவின் தோழி பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் உபகாரச் சம்பளம் பெற்று பாலர் பள்ளி கல்வியாளராக உருவெடுத்தது அவருக்கு முனைப்பூட்டியதாக அவர் உணர்ந்தார்.
“அவரது பயணத்தைக் குறித்து கேட்டறிய முடிந்ததால் என் குறிக்கோள் எட்டக்கூடிய ஒன்றுதான் என்ற நம்பிக்கைப் பிறந்தது. நானும் அவரைப் போலவே உபகாரச் சம்பளம் பெற்று தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரியில் ஆரம்பக்கால கல்வியில் பட்டயம் பெற பயின்றேன்,” என்று அவர் கூறினார்.
பட்டயக் கல்வியின் முடிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். அவரது உழைப்பை அங்கீகரித்து அவரது விரிவுரையாளர் அவரை பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் பயிற்சி ஆசிரியர் அங்கீகார விருதிற்குப் பரிந்துரைத்தார்.
சென்ற ஆண்டு தமது பட்டயக் கல்வியை நிறைவு செய்த அவர் தற்போது இ-பிரிட்ஜ் பாலர்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் சிரிப்பைக் காண்பது முதல் பெற்றோருடன் இணக்கமான உறவுகளை ஏற்படுத்துவது வரை அனைத்தையும் விரும்பி செய்கிறார் லோகேஷ்வரி.
இனி வரும் ஆண்டுகளில் மூத்த பாலர் பள்ளி கல்வியாளராக முன்னேறுவது, கற்பித்தல் கட்டமைப்புகளின் வடிவமைப்புகளில் பங்களிப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட அவர் ஆர்வம் கொண்டுள்ளார்.
“கல்வியாளர்கள் வாழ்நாள் மாணவர்களாக இருப்பது அவசியம். ஏனெனில், பிள்ளைகள் தொடர்ந்து மாறிவருகின்றனர். அவர்களுக்கு ஆக்ககரமான முறையில் கற்பிக்க நாங்களும் எங்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம்,” என்றார் அவர்.
