தலைமைத்துவப் பாதையில் வெற்றிநடை

ராணுவத்தை வாழ்க்கைத்தொழில் பயணமாகத் தேர்ந்தெடுத்த சாதனையாளர்கள்

தலைமைத்துவப் பாதையில் வெற்றிநடை

3 mins read
db07f150-2073-4380-b702-c87526ce5bf1
தேர்ச்சி அணிவகுப்பில் மூன்றாம் நிலை சார்ஜண்டாகப் (3எஸ்ஜி) பதவி உயர்வு பெற்ற சுப்பிரமணியன் சண்முகநாதன் (வலது), சிந்து சந்திரன். -  படம்: தற்காப்பு அமைச்சு
Google News Preferred Icon

நாட்டுக்குச் சேவையாற்றத் துணிந்து முன்வந்த இளையர் இருவர், ராணுவத்தைத் தங்களின் வாழ்க்கைத்தொழிலாகத் தேர்ந்தெடுத்து, புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளனர். 

“சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று உணர்ந்தேன். அதனால், ராணுவத்தில் நிரந்தரப் பணியாளராகச் சேர்ந்தேன்,” என்றார் 25 வயது சுப்பிரமணியன் சண்முகநாதன்.

பாசிர் லாபா முகாமில் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்ற சிங்கப்பூர் ஆயுதப் படையின் 68வது நிபுணத்துவப் பயிற்சி அதிகாரி தேர்ச்சி அணிவகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் இவரும் ஒருவர்.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் நிபுணர்களாகவும் ராணுவ வல்லுநர்களாகவும் பயிற்சி அதிகாரிகள் 1,173 பேர், 22 வாரப் பயிற்சிக்குப்பின் அந்த அணிவகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற பயிற்சி அதிகாரிகளில் சிங்கப்பூர் ராணுவத்திலிருந்து 952 பேரும், கடற்படையிலிருந்து 79 பேரும், ஆகாயப்படையிலிருந்து 60 பேரும், மின்னிலக்க, உளவுத்துறைப் படையிலிருந்து 82 பேரும் அடங்குவர். 

தகவல், மின்னிலக்க மேம்பாடு மற்றும் சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் அணிவகுப்புச் சடங்கை மேற்பார்வையிட்டார்.

ராணுவக் காலாட்படையைச் சேர்ந்த  சுப்பிரமணியன் சண்முகநாதன் ‘வெள்ளிக் கத்தி’ (Silver Bayonet) விருதையும் சிறந்த அறிவாற்றல் விருதையும் பெற்றார். 

ராணுவ வீரராகத் தன் பயணத்தைத் தொடங்கி, தற்போது மூன்றாம் நிலை சார்ஜண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார் சண்முகநாதன். 

“என் அதிகாரிகள் எனக்கு ஊக்கமளித்தது போலவே, எதிர்காலத்தில் என் படைவீரர்களுக்கு நான் ஊக்கமளித்து வழிநடத்த விரும்புகிறேன்,” என்றார் சண்முகநாதன்.

நிபுணத்துவப் பயிற்சி அதிகாரிகள் பள்ளி வழங்கிய பயிற்சிகள், தமது தன்னம்பிக்கையையும், முன்மாதிரியாக நின்று வழிநடத்தும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்ததாக இவர் சொன்னார்.

“நிபுணத்துவப் பயிற்சி அதிகாரிப் பள்ளி, சிறந்த படைவீரராக இருக்க எனக்குக் கற்றுக்கொடுத்தது. துணிச்சலுடன் பேசுவதற்கும் தன்னம்பிக்கையுடன் இருப்பதற்கும் அது எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள், ராணுவத்திற்கு அப்பால் என் சொந்த வாழ்க்கையிலும் பயனளிக்கும் என நம்புகிறேன்.

“தங்களின் முழுநேர தேசியச் சேவையைக் கண்டு பயப்படுபவர்களிடம் அது ஓர் அர்த்தமுள்ள பயணம் என்றும் அவர்கள் அதை ஆவலுடன் எதிர்பார்க்க வேண்டும் என்றும் கூற விரும்புகிறேன்,” என்று சண்முகநாதன் சொன்னார். 

ராணுவத்தில் பணியாற்ற முடிவெடுப்பதற்கு முன்பு முழுநேர தேசியச் சேவையாளராக இருந்த அனுபவம், தமக்குக் கீழ் உள்ள வீரர்களைப் புரிந்துகொள்ளவும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் சரியாக வழிநடத்தவும் உதவுவதாக இவர் நம்புகிறார்.

அதே அணிவகுப்பில், சிறப்பாகச் செயல்பட்டதற்காக ‘வெள்ளிக் கத்தி’ விருதைப் பெற்ற மற்றொரு பயிற்சி அதிகாரியான 26 வயது சிந்து சந்திரனும் ராணுவத்தில் தமது வாழ்க்கைத்தொழில் பயணத்தைத் தொடங்கியுள்ளார். 

ராணுவத்தில் விநியோகப் பிரிவில் சிந்து சந்திரனும் நிபுணத்துவப் பயிற்சி அதிகாரியிலிருந்து மூன்றாம் நிலை சார்ஜண்டாகப் (3எஸ்ஜி) பதவி உயர்வு பெற்றார்.

நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற தீவிர விருப்பமும், விநியோக நிர்வாகக் துறையில் இருந்த கல்விப் பின்னணியும் இவர் ராணுவத்தில் விநியோகப் பிரிவு நிபுணராகப் பணியாற்ற ஊக்கமளித்தன.

“என் குடும்பத்தில் பலரும் அரசாங்க ஊழியர்களாக இருப்பதால், நான் ராணுவத்தில் சேர்வதற்கு அவர்கள் ஆதரவளித்தனர். அதைவிட முக்கியமாக, மனஉறுதியும் திறனும் கொண்ட ஒரு பெண்ணாக இந்தப் பணியில் சிறப்பாக விளங்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன்,” என்றார் சிந்து.

ராணுவத்தில் தான் பங்கேற்ற வாகனம் ஓட்டும் பயிற்சியின்போது பல சவால்களை எதிர்கொண்டாலும் மனம் தளராமல் அவற்றைக் கடந்து வெற்றி பெற்றதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார் இந்த இளம்பெண்.

குறிப்புச் சொற்கள்
ராணுவம்வாழ்க்கைத்தொழில்அணிவகுப்பு