முன்னரே தன் கையில் வளமான தொழில் இருந்தாலும், கல்வியே வாழ்நாள் முழுவதும் தன்னோடு பயணம் செய்யும் எனும் நம்பிக்கையில் நிதித் துறையில் இளங்கலைப் படிப்பு படித்து, மேன்மேலும் படிக்கும் எண்ணத்துடன் இருக்கிறார் ந.ம. சோழன்.
சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பட்டம் பெற்றுள்ள 26 வயதான சோழன், ஒரு தொழில்முனைவரும்கூட.
உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே தந்தையின் உணவுக்கடைக்குச் சென்று அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார் சோழன். பின்னர், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நிதி மேலாண்மை, நிர்வாகத் துறையில் பயின்றபோதே தனியாக உணவுக்கடையைத் தொடங்கினார்.
முதலில் சிறிய அளவில் வடஇந்திய உணவுக்கடையை இவர் தொடங்கினார். தொழிலையும் கல்வியையும் ஒருசேர சமாளித்த இவர், தனது படிப்பு, தொழிலில் பலவகையிலும் உதவிபுரிவதை உணர்ந்தார்.
தொழிலில் மேம்பாடு கண்டபோதும் அதோடு நின்றுவிடாமல், இதற்கு மேலும் விரிவுபடுத்த அதிகம் படிப்பதே சரி என சோழன் முடிவெடுத்தார்.
“பெருந்தொற்றினால் வெறும் 30% ஊழியர்களுடன் செயல்பட வேண்டிய நிலையிலும், கல்வியில் என் கவனம் சிதறாமல் பார்த்துக்கொண்டேன்,” என்றார் சோழன்.
“உணவுக்கடைக்குப் பொதுவாகவே அதிக உழைப்பு தேவை. என் படிப்பு நிறைய வீட்டுப்பாடங்களையும் பயிற்சிகளையும் உள்ளடக்கியது. இரண்டையும் சமாளிப்பது மிகுந்த சிரமம்தான். ஆனால், மனம் வைத்தால் முடியாதது ஏதுமில்லை,” என்றார் இவர்.
இதற்காக பல தியாகங்கள் செய்ய வேண்டியிருந்ததாகக் கூறினார் சோழன்.
தொடர்புடைய செய்திகள்
“நண்பர்களைச் சந்தித்து உரையாடுவதற்கு, வெளியில் சென்று இளைப்பாறுவதற்கு நேரமிருக்காது. குடும்பத்துடன் நேரம் செலவிட இயலாது. குறிப்பாக, உறக்கத்தைத் தியாகம் செய்ததால் மட்டுமே இது சாத்தியமானது,” என்றார்.
முதலில் 40 இருக்கைகளுடன் தொடங்கிய உணவுக்கடைத் தொழிலை, தற்போது 150 இருக்கைகள் கொண்ட பெரிய உணவு விடுதியாக மாற்றியுள்ளார் இவர்.
நிதித்துறையில் பயின்றதால், தொழிலின் வரிக்கணக்குகள், வரவுசெலவுகளையும் இவரால் பார்த்துக்கொள்ள முடிகிறது. சமூக ஈடுபாடும் கொண்ட இவர், ‘யூத் அட் ரிஸ்க்’ உள்ளிட்ட பல திட்டங்களிலும் பங்காற்றியுள்ளார்.
கல்வி, தொழில், சமூகப்பணி எனப் பம்பரமாகச் சுழலும் சோழன், எதிர்காலத்தில் இந்தியா, இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளிலும் தமது தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற கனவுடன் உள்ளார்.
“நான் மேற்கல்வி பயில்வது உறுதி. என் கல்விப் பயணம் இப்போதைக்கு நிற்காது,” என்று சிரித்தவாறே சொன்னார் சோழன்.

