வேற்றுமையில் ஒற்றுமை கண்ட தேசிய முகாம் 2024

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட தேசிய முகாம் 2024

2 mins read
8fad4e6c-9bf1-45a7-913a-aef1933b6b5f
தேசிய முகாம் 2024 ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24 வரை நடைபெற்றது. - படம்: சாவ் பாவ்
multi-img1 of 2

ஒழுக்க நெறி, மன உறுதி, தன்னம்பிக்கை போன்ற பண்புகளை வளர்க்க ஆசைப்பட்டு தன் பள்ளி தேசிய மாணவர் காவல் படையில் சேர்ந்தார் சங்கரன் சிவ ஆதித்யா, 15. 

தற்போது யூனிட்டி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் இவர், மாணவர் சார்ஜண்டாக தம் பள்ளி தேசிய மாணவர் காவல் படையை வழிநடத்தும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார்.  

“சீருடைக் குழுக்கள் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பண்புகள் மிக முக்கியம். அது நம் தினசரி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் அவர். 

“இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மற்ற பள்ளிகளின் சீருடைக் குழுக்களுடன் தோழமை பெரிதும் வளரும்,” என்றார் சங்கரன் சிவ ஆதித்யா. 

சங்கரன் சிவ ஆதித்யாவைப் போல் பல சீருடைக் குழுக்களைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாஜு முகாமில் ஆரவாரமாகத் தொடங்கிய இவ்வாண்டின் தேசிய முகாமில் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24 வரை நடைபெற்ற இந்த முகாம், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

“வேற்றுமையில் ஒற்றுமை” (United in Diversity) எனும் கருப்பொருளுக்கு ஏற்ப சிங்கப்பூரின் ஒன்பது சீருடைக் குழுக்களைப் பிரதிநிதித்து 126 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்றனர்.  

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். 

“சீருடைக் குழுவில் பணியாற்றுவதன் மூலம் உங்கள் சக நண்பர்களைக் கவனித்துக் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவருடைய பன்முகத்தன்மையை மதித்துப் பாராட்டுங்கள். இறுதியாக, எந்நேரமும் தயாராக இருங்கள்,” என்று அறிவுறுத்தினார் அமைச்சர் சான். 

தமது பள்ளிப் பருவத்தில் சாரணராக இருந்த திரு சான், சீருடைக் குழுவில் பணியாற்றிய அனுபவத்தையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். 

தேசிய முகாமின் தொடக்க நிகழ்ச்சியில் தேசியக் கொடி, சீருடைக் குழுக்களின் கொடிகள் மற்றும் தேசிய முகாம் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

தொடர்ந்து, அமைச்சர் சானுடன் 440க்கும் மேற்பட்ட மாணவர்கள் விறுவிறுப்பான ஓர் இளையர் கருத்தரங்கில் பங்கேற்றனர். சிங்கப்பூரின் பாதுகாப்பு, அதற்கான இளையர் பங்கு, எதிர்காலத்தின் இலக்குகள் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் கேள்விகளை எழுப்பினர்.

மாற்றங்களுக்கு இடையே நாமும் நிலைக்கு ஏற்ப மாறி, நாம் பெற்ற கற்றலின் மூலம் அம்மாற்றங்களைக் கையாள்வது முக்கியம் என்று மாணவர்களுக்கு வலியுறுத்தினார் அமைச்சர் சான்.

குறிப்புச் சொற்கள்