சென்ற வார தேசிய தின அணிவகுப்பின் முன்னோட்ட நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தபோதும் வாணவேடிக்கையை முழுமையாக ரசிக்க முடியாததால், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) தஞ்சோங் ரூ பூங்காவில் திரண்ட பெருங்கூட்டத்துடன் ஒன்றுகலந்தார் திரு செழியன் வானவன், 27.
“வாணவேடிக்கை பார்ப்பதென்பது தேசிய தினத்தின்போது எப்போதுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஓர் அங்கம். அதை முழுமையாகக் கண்டுகளிக்கவே அங்குச் சென்றிருந்தேன்,” என்று இணையப் பாதுகாப்புப் பொறியாளரான திரு வானவன் கூறினார்.
சிறுவயது முதலே பல தேசிய தின அணிவகுப்புகளைத் தொலைக்காட்சியில் கண்டுகளித்துள்ள இவர், அவற்றை நேரில் கண்டு மகிழும் உணர்வுக்கு வேறு எதுவும் ஈடாகாது என்று சொன்னார்.
“தொலைக்காட்சியில் கொண்டாட்டங்களைப் பார்ப்பது சிலருக்குப் பிடித்திருக்கலாம். ஏனெனில், வெவ்வேறு கோணங்களில், வித்தியாசமான முறைகளில் காட்சிகளைக் காணும் வாய்ப்பு கிட்டும்.
“ஆனால், பலதரப்பட்ட மக்களுடன் ஒன்றாக இதுபோன்ற பரந்த புல்வெளியில், வீசும் காற்றுடன் கொண்டாட்டங்களைப் பார்க்கும் அனுபவம் என்பது என்னைப் பொறுத்தவரை எவரும் தவறவிடக் கூடாத ஒன்று என்றே கூறுவேன்,” என்றார் திரு வானவன்.
இதுபோன்று பலரும் ஒன்றுகூடி தேசிய தின பாடல்களைப் பாடுவது, கொண்டாட்டங்களின் பல்வேறு அம்சங்களை ஒன்றாகக் கண்டு ரசிப்பது போன்றவை மக்களிடையே நாட்டுப்பற்றை அதிகரிக்க உதவுவதாக அவர் கருதுகிறார்.
“சிங்கப்பூரில் மக்கள் பேரளவில் ஒன்றுதிரள்வதற்கான வாய்ப்புகளும் தேவைகளும் குறைவு. தேசிய தினம் என்பது அவ்வாறான நிகழ்வுகளில் முக்கிய ஒன்று.
“ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக நாட்டுப்பற்றுடன், உள்ளத்தில் உவகை பொங்க, பெருமிதத்துடன் பாடி, ஆரவாரம் எழுப்பிக் கொண்டாடுவதைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் திரு வானவன்.


