தம் தந்தையுடன் எவரெஸ்ட் மலையடிவார முகாமை சுபாஷினி விஜயமோகன் மே 2024ஆம் ஆண்டு சென்றடைந்தார். 65 வயதான அவரின் தந்தை திரு விஜயமோகன், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி.
எவரெஸ்ட் மலையடிவார முகாமை எட்ட வேண்டும் என திரு விஜயமோகனுக்கு ஆர்வம் ஏற்பட்டபோது அவருடைய நண்பர், மகள், மருமகன் ஆகியோரும் இணைந்தனர். கடந்த நவம்பர் மாதம் 2023ஆம் ஆண்டிலிருந்து நால்வரும் இந்தப் பயணத்துக்குத் தயாராகி வந்தனர்.
ஜோகூரின் ஓஃபிர், லும்பாக் மலைகள், இந்தோனீசியாவின் பட்டூர் மலை எனக் கடந்த சிந்துஜா நாயர், 2022ஆம் ஆண்டில் எவரெஸ்ட் மலையடிவார முகாமைக் குறிவைத்தார். அதே ஆண்டில் தம் மாமாவை இழந்த சிந்துஜா, அவரின் நினைவாக எவரெஸ்ட் மலையடிவார முகாமைக் கடக்கத் தீர்மானித்தார். அப்போது, அவருக்கு வயது 21 மட்டுமே.
சுபாஷினியும் சிந்துஜாவும் தங்களது பயண அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்கள்.
தயாராகும் பயணம்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைக் கடக்க சுமார் நான்கு மாதங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டார் சுபாஷினி. அவருடன் அவரின் கணவர், தந்தை, தந்தையின் நண்பர் ஆகியோரும் சேர்ந்து உடல் வலிமையை மேம்படுத்தும் பயிற்சிகள், நாள்தோறும் படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல், எடை சுமந்து நீண்ட தூரத்துக்கு நடை பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டனர்.
“இருந்தும், சிங்கப்பூரின் நிலப்பரப்பை எவரெஸ்ட் மலையடிவார முகாமுடன் ஒப்பிட முடியாது,” என்று ஒப்புக்கொண்டார் சுபாஷினி.
அவரைப் போலவே கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு உடற்பயிற்சி மேற்கொண்டார் சிந்துஜா. தினமும் மூன்று முதல் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓடுதல், ஒவ்வொரு சனிக்கிழமையும் புக்கிட் தீமா மலையேறுதல், மின்தூக்கிகளுக்குப் பதில் படிகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்ட சிந்துஜா, மெல்ல மெல்ல எவரெஸ்ட் மலையடிவார முகாமை எதிர்கொள்ள தயாரானார்.
“ஒரு முழுநேர நிதி ஆலோசகராகப் பணிபுரிந்தவாறு எனக்குப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சூழ்நிலை சவாலாக அமைந்தது. ஆனால் எப்படியாவது எவரெஸ்ட் மலையைக் கண்குளிரக் காண வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்,” என்றார் சிந்துஜா.
தொடர்புடைய செய்திகள்
சந்தித்த தடைகள்
ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நடந்து 12 நாள்களில் எவரெஸ்ட் மலையடிவார முகாமைக் கடந்ததாக சுபாஷினி தெரிவித்தார்.
இருப்பினும், கடுங்குளிர், ஆலங்கட்டி மழை, பனிப்புயல், அதிக உயரத்தினால் ஏற்படும் உயிர்வாயு குறைபாடு, உடலளவில் ஏற்படும் சோர்வு எனப் பல சவால்களை நால்வரும் சந்தித்தனர்.
“சில சூழ்நிலைகள் எதிர்பாராதவை. இதனால், பலரும் முகாமை அடையாமல் இருந்த கதைகள் பல. இதுபோன்ற சவால்களை மன உறுதியுடன் சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும்,” என்றார் சுபாஷினி.
இத்தகைய சவால்கள் சிந்துஜாவையும் விட்டுவைக்கவில்லை. மாறுபட்ட வானிலை நிலவரம், வெப்பநிலை மாற்றங்கள் என சிந்துஜா எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் சிரமம் நிறைந்ததாக இருந்தது.
இந்நிலையில், 14 நாள் பயணத்தின் இறுதி நாளன்று 10 மணி நேரம் கடினமான மலையேற்றத்திற்குப் பிறகு எவரெஸ்ட் மலையைக் கண்ட அவர் மகிழ்ச்சியில் கண்கலங்கினார்.
“அந்தத் தருணம் நான் என் சாதனை முழுமை பெற்றதை உணர்ந்தேன்,” என்றார் சிந்துஜா.
தெளிவான நோக்கம், வெல்லும் தைரியம்
உடலளவில் தயாரானாலும் இந்தப் பயணத்தில் மனவலிமை மிக முக்கியம் என்றார் சுபாஷினி.
“நாம் ஏன் இதைச் செய்கிறோம் என்பதை முதலில் நிர்ணயிக்க வேண்டும். எவரெஸ்ட் மலையடிவார முகாமை எட்டப் பல சவால்களைக் கடக்க வேண்டும். அவற்றை எதிர்த்துப் போராட மனவலிமையே உந்துதல்,” என்றார் சுபாஷினி.
எளிதில் சாத்தியமாகாத சவால்களை எதிர்கொள்ள துணிச்சல் வேண்டும் என்றார் சிந்துஜா.