வணிகம் செய்யத் துணியும் வெற்றியாளர்கள்

வணிகம் செய்யத் துணியும் வெற்றியாளர்கள்

4 mins read
கனவுகளை மூலதனமாக்கி, தடைகளைத் தகர்க்கும் புதிய விடிவெள்ளிகள்
444725b1-35a5-4718-bdb5-fe1a34104b87
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொருளியல், வணிகத் துறையில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயின்று வரும் 23 வயது அட்ரின் மனோகர். - படம்: விஜய் ஆனந்த் அஜய்

பாதுகாப்பான அரசு வேலை அல்லது கைநிறையச் சம்பளம் தரும் வேலை. நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்படும் எழுதப்படாத இலக்கணமாக இது இருந்து வருகிறது.

ஆனால் செயற்கை நுண்ணறிவின் பெருக்கம், நிச்சயமற்ற உலகப் பொருளியல் சூழல் ஆகியவை இந்த இலக்கணத்தை விரைவில் மாற்றி எழுதக்கூடும்.

ஆட்குறைப்பால் வேலைப் பாதுகாப்பு உலகெங்கும் அச்சுறுத்தப்படும் நிலையில் நம் பாதையை நாமே உருவாக்குவதுதான் உண்மையான பாதுகாப்பு என்ற துணிச்சல்மிகு சிந்தனையுடன் செயல்படுகிறார்கள் தொழில்முனைவர்கள் இருவர்.

நம்பிக்கை எனும் நாணயம்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொருளியல், வணிகத் துறையில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயின்று வரும் 23 வயது அட்ரின் மனோகர், ஏட்டுக் கல்விக்கும் அப்பால் கால்பதித்துள்ள திறனாளர்.

தென்கிழக்காசிய நிதிப்பரிவர்த்தனைச் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், ‘மணி பசார்’ (Money Pasar) என்ற நிதித்தொழில்நுட்ப ‘ஃபின்டெக்’ (Fintech) நிறுவனத்தின் இணை நிறுவனராகத் தனது தொழில்முனைவுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

நிதித்துறையில் நம்பிக்கை என்பதுதான் விலைமதிப்பற்ற நாணயம் என்கிறார் அட்ரின்.
நிதித்துறையில் நம்பிக்கை என்பதுதான் விலைமதிப்பற்ற நாணயம் என்கிறார் அட்ரின். - படம்: அட்ரின் மனோகர்

“நாளை நம் வேலை இருக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ள இந்த நேரத்தில்தான், நமக்கான பாதையை நாமே உருவாக்கும் துணிவு தேவைப்படுகிறது,” என அட்ரின் உறுதியாகக் கூறுகிறார்.

அட்ரின் மனோஹர், முத்து ஸ்வேதா (இடது) இருவரும் லிஷா சிங்கப்பூர் ஏற்பாடு செய்த பிஸ்ஸ்பியர் 2025 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர்.
அட்ரின் மனோஹர், முத்து ஸ்வேதா (இடது) இருவரும் லிஷா சிங்கப்பூர் ஏற்பாடு செய்த பிஸ்ஸ்பியர் 2025 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர். - படம்: லிஷா

2024ல் நண்பரோடு இணைந்து சாதாரண மக்களுக்கான பணப் பரிவர்த்தனைத் தளமாக இதனைத் தொடங்கினாலும், சந்தையின் உண்மை நிலையை நுட்பமாக உணர்ந்து, உடனடியாக அதனை வணிகர்களுக்கான தளமாக அட்ரின் உருமாற்றினார். 

“தென்கிழக்காசியாவில் சிறு நிறுவனங்கள் எல்லை தாண்டி வர்த்தகம் செய்கின்றன. ஆனால், வெளிப்படைத்தன்மையற்ற நாணய மாற்று விகிதங்களும் (Opaque Exchange Rates), சிக்கலான நடைமுறைகளும் அவர்களைப் பெரிதும் பாதிக்கின்றன. 

தோல்விகள் வரலாம், விமர்சனங்கள் எழலாம். ஆனால், எனக்கான பாதையை நானே செதுக்க விரும்புகிறேன்.
அட்ரின் மனோகர், 22.

“நிதித்துறையில் ‘நம்பிக்கை’ என்பதுதான் விலைமதிப்பற்ற நாணயம். வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளில் அந்த நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் உருவாக்குவதே எங்கள் இலக்கு,” என்று அவர் விவரிக்கிறார்.

ஃபின்டெக் உலகின் சவால்களை எதிர்கொள்ளும் அட்ரின், மறுபுறம் ஊடகத்துறையிலும் சமூக வலைத்தளங்களிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார்.

அட்ரின் மனோஹர் ரீ-இன்கார்னேஷன் ஏற்பாடு செய்த அனைத்திந்திய ‘2 ஸ்டேட்ஸ் ரீலோடெட்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
அட்ரின் மனோஹர் ரீ-இன்கார்னேஷன் ஏற்பாடு செய்த அனைத்திந்திய ‘2 ஸ்டேட்ஸ் ரீலோடெட்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். - படம்: ரீ-இன்கார்னேஷன்

எட்டு வயதில் யூடியூபராகவும், 14 வயதில் மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொடங்கிய இவரது பயணம் தொடர்கிறது.

இதுவரை 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ள இவர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் தளங்களில் கணிசமான பின்தொடர்வோர் எண்ணிக்கை கொண்ட சமூக ஊடகப் பிரபலமாகவும் தொழில்நுட்ப விமர்சகராகவும் செயல்படுகிறார்.

அட்ரின் மனோஹர், பிரபல பாடகரும் இசையமைப்பாளரும் நடிகருமான ஸ்டீஃபன் சகாரியா (இடது) இணைந்து ஸ்டீஃபன் சகாரியாவின் ஹோம்கமிங் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர்.
அட்ரின் மனோஹர், பிரபல பாடகரும் இசையமைப்பாளரும் நடிகருமான ஸ்டீஃபன் சகாரியா (இடது) இணைந்து ஸ்டீஃபன் சகாரியாவின் ஹோம்கமிங் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர். - படம்: ஒன் க்ரூ

மீடியாகார்ப் ஒலி 968 வானொலி படைத்த 2025ஆம் ஆண்டிற்கான ‘தாயே தாரகையே’ அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் திரையிடப்பட்ட ‘பேபி பாய்’ (Baby Boy) என்ற குறும்படத்தை இயக்கியதும் இவரே.

ஸ்டீஃபன் சகாரியாவின் ஹோம்கமிங் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் அட்ரின் மனோஹர் .
ஸ்டீஃபன் சகாரியாவின் ஹோம்கமிங் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் அட்ரின் மனோஹர் . - படம்: ஒன் க்ரூ

“தோல்விகள் வரலாம், விமர்சனங்கள் எழலாம். ஆனால், எனக்கான பாதையை நானே செதுக்க விரும்புகிறேன். நான் வேலை தேடுபவன் அல்லன்; எனக்கு நானே முதலாளி,” என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் இந்த இளம் தொழில்முனைவர்.

ஆவல் எனும் மூலதனம்

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் (எஸ்எம்யு) வணிகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் 21 வயது இளநிலை மாணவர் பிரியதர்ஷினி நெடுமாறன், தமது கலைத் திறனை வெற்றிகரமான தொழிலாக மாற்றியுள்ளார்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் (SMU) வணிகவியல் துறையில் இளநிலை இரண்டாம் ஆண்டு பயிலும் செல்வி பிரியதர்ஷினி நெடுமாறன் (21), சும்மாடான்ஸ் ஏற்பாடு செய்த ‘அப்படீ போடு’ நிகழ்ச்சியில் தனது ஸ்டார்ட்அப் ‘பிரிட்டி பிரிஸ்டின்’ கடையகம் நடத்தியதற்காகப் பாராட்டுச் சான்றிதழ் பெற்றார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் (SMU) வணிகவியல் துறையில் இளநிலை இரண்டாம் ஆண்டு பயிலும் செல்வி பிரியதர்ஷினி நெடுமாறன் (21), சும்மாடான்ஸ் ஏற்பாடு செய்த ‘அப்படீ போடு’ நிகழ்ச்சியில் தனது ஸ்டார்ட்அப் ‘பிரிட்டி பிரிஸ்டின்’ கடையகம் நடத்தியதற்காகப் பாராட்டுச் சான்றிதழ் பெற்றார். - படம்: சித்தார்த் பிள்ளை

கலை ஆர்வத்தின் அடையாளமாகத் துளிர்விட்ட அவரது ‘பிரிட்டி பிரிஸ்டின்’ (Pritty Pristine) நிறுவனம், சிங்கப்பூர் இளையர்களின் விருப்பத்திற்குரிய புதிய வர்த்தக அடையாளமாக உருவெடுத்துள்ளது.

“சாதா­ர­ண நி­லை (‘ஓ’ நிலை),  மேல்நிலை (’ஏ’ நிலை) கல்வியின்போது கலைப்பாடத்தைப் பயின்றேன். ஓவியங்கள்மீது எனக்குத் தீராக் காதல் இருந்தது.

பிரிட்டி பிரிஸ்டின் நிறுவனரும், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் (SMU) வணிகவியல் துறையில் இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவியுமான 21 வயது பிரியதர்ஷினி நெடுமாறன், தனது வாடிக்கையாளருக்கு ஜாகுவா டாட்டூ வரையும் காட்சி.
பிரிட்டி பிரிஸ்டின் நிறுவனரும், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் (SMU) வணிகவியல் துறையில் இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவியுமான 21 வயது பிரியதர்ஷினி நெடுமாறன், தனது வாடிக்கையாளருக்கு ஜாகுவா டாட்டூ வரையும் காட்சி. - படம்: விஜய் ஆனந்த் அஜய்

“ஆனால், நாம் தீவிரமாக நேசிக்கும் ஒன்றை, மதிப்பெண்ணுக்காகவோ கட்டாயத்தின் பேரிலோ செய்யும்போது அதன் மீதான ஈர்ப்பு குறைந்துவிடுகிறது,” என்று கூறினார் பிரியதர்ஷினி. பொழுதுபோக்காக மட்டும் இருந்த தனது ஆர்வத்தை, வணிகவியல் அறிவோடு இணைத்து ‘பிரிட்டி பிரிஸ்டின்’.நிறுவனத்தைத் தொடங்கினார்.

 பிரியதர்ஷினி நெடுமாறன் (நடுவில்) வாடிக்கையாளருக்கு ஜாகுவா டாட்டூ வரைகிறார்.
பிரியதர்ஷினி நெடுமாறன் (நடுவில்) வாடிக்கையாளருக்கு ஜாகுவா டாட்டூ வரைகிறார். - படம்: விஜய் ஆனந்த் அஜய்

தொடக்கத்தில் தனது தோழிகளுக்கு நக அலங்காரம், மருதாணி இடுதல் போன்றவற்றில் தொடங்கிய இவரது பயணம், படிப்படியாகப் பரிணாமம் கண்டு தற்போது பிரபலமாகவுள்ள ‘ஜாகுவா டாட்டூஸ்’ (Jagua Tattoos) வரை விரிவடைந்துள்ளது.

“பச்சைக்குத்துதல் என்றாலே பலருக்கும் ஒருவிதத் தயக்கமும் வலியைக் குறித்த அச்சமும் இருக்கும். ஆனால், நான் வரையும் ஜாகுவா டாட்டூக்கள் மருதாணியைப் போன்ற மூலிகைகளிலிருந்து உருவானவை.

பிரியதர்ஷினி நெடுமாறன் தனது வாடிக்கையாளருக்கு ஜாகுவா டாட்டூ வரையும் செயலில் ஈடுபட்டிருக்கும் காட்சியை ஒருவர் பதிவு செய்து கொண்டிருக்கும் தருணம்.
பிரியதர்ஷினி நெடுமாறன் தனது வாடிக்கையாளருக்கு ஜாகுவா டாட்டூ வரையும் செயலில் ஈடுபட்டிருக்கும் காட்சியை ஒருவர் பதிவு செய்து கொண்டிருக்கும் தருணம். - படம்: சித்தார்த் பிள்ளை

இவை இரண்டு வாரங்கள் மட்டுமே நிலைத்திருக்கும் என்றாலும், அச்சு அசலாக உண்மையான டாட்டூக்களின் தோற்றத்தையே அளிக்கும்,” என்று பிரியதர்ஷினி விளக்கினார்.

தனது இந்தச் சிறு முயற்சி இன்று பெரும் வர்த்தகமாக உருவெடுத்திருப்பதற்கு, தம்மைச் சுற்றியுள்ள பலமான ஆதரவு வளையமே முக்கியக் காரணம் என்கிறார் அவர்.

பெற்றோரும் நண்பர்களும் அளித்த தொடர் ஊக்கமே, எந்தவிதத் தயக்கமுமின்றி அவரைத் தொழில்முனைவுப் பாதையில் களமிறங்க வைத்துள்ளது.

மேலும், அவர் பயிலும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் தனது வளாகத்திற்குள்ளேயே பல்வேறு கண்காட்சிக் கூடங்களை அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தாராளமாக வழங்கி, பிரியதர்ஷினியின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்துள்ளது.

உளமார விரும்பும் வேலையால் அடையும் மனநிறைவுக்கு ஒப்பானது ஏதுமில்லை எனக் கூறிய இந்த இளம் தொழில்முனைவர், அத்தகைய செயலைத் தங்கள் வேலையாகத் தேர்ந்தெடுக்கும் இளையர்கள் ஏற்றமடைவார்கள் எனக் கருதுகிறார்.

21 வயது பிரியதர்ஷினி நெடுமாறன் வாடிக்கையாளருக்கு ஜாகுவா டாட்டூ வரையும் காட்சி.
21 வயது பிரியதர்ஷினி நெடுமாறன் வாடிக்கையாளருக்கு ஜாகுவா டாட்டூ வரையும் காட்சி. - படம்: சித்தார்த் பிள்ளை

வாழ்வாதாரத்திற்கான பாதுகாப்பான வேலை என்ற ஒற்றை இலக்கை மட்டுமே நோக்கிப் பயணம் செய்த காலம் மாறி, தனித்திறனும் துணிச்சலும் வர்த்தகப் பாதையின் புதிய மூலதனமாக உருவெடுத்துள்ளன என்பதை இவ்விரு இளையர்களின் பயணங்கள் உணர்த்துகின்றன.

உளமார விரும்பும் வேலையால் அடையும் மனநிறைவுக்கு ஒப்பானது ஏதுமில்லை
பிரியதர்ஷினி நெடுமாறன், 21

நிதித்தொழில்நுட்பப் பெருவெளியில் புதிய உத்திகளை உருவாக்கும் அட்ரினும் படைப்பாற்றலையே நேர்த்தியான வர்த்தகமாக்கியுள்ள பிரியதர்ஷினியும் மரபார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு அப்பால். தமக்கான தளங்களைத் தாங்களே கட்டமைக்கத் தொடங்கியுள்ளனர்.

பழக்கப்பட்ட பாதையிலேயே பாதுகாப்பைத் தேடிப் போவது ஒரு வழி. சவால்களை ஏற்று நமக்கான புதிய பாதையைச் செதுக்கப்போவது சிந்திக்கத்தக்க மாற்று வழி.

குறிப்புச் சொற்கள்