இளையர்கள் கூடி இசையில் திளைக்க இன்பக்கூடம்

இளையர்கள் கூடி இசையில் திளைக்க இன்பக்கூடம்

படம்: சாஃப்ட்பாயில்ட் ஸ்டுடியோஸ்

12 Oct 2026 - 6:00 am

2 mins read

தா‌‌‌ஷாயனி சுகேந்திரன்

இசையைத் தொழிலாக்கும் எண்ணம் அரிது. அதனினும் அரிது, அதனை வணிகமாக்கத் துணிவது.

இந்தத் துணிவு, 19 வயது மாணவர்களான அஞ்சலி குரிச், ஹரிஹரன் ரவிச்சந்திரன் ஆகியோரின் கனவை நனவாக்கியது.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பொறியியல் பட்டயம் பயிலும் இவர்கள் இருவரும் தங்களின் சொந்தச் சேமிப்பைக் கொண்டு ‘சாஃப்ட்பாயில்ட் ஸ்டுடியோஸ்’ (softboiled studios) என்ற தனிப்பட்ட இசை, ஒலிப்பதிவுக் கூடத்தை அண்மையில் தொடங்கியுள்ளனர்.

சிங்கப்பூரில் வளர்ந்துவரும் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதே இவர்களது நோக்கம்.

உள்ளூர் இசைக்கலைஞர்களின் பயன்பாட்டுக்கான இடமாக மட்டும் அல்லாமல் அவர்கள் அனைவரையும் அரவணைக்கும் சமூக இடமாகத் திகழவேண்டும் என்ற விருப்பத்தில் ‘சாஃப்ட்பாயில்ட் ஸ்டுடியோஸ்’ உருவானது. 

வழக்கமான ஒலிப்பதிவுகளைத் தாண்டி, தன்னிச்சையாகச் செயல்படும் இசைக்கலைஞர்கள் ஒருவரையொருவர் சந்தித்து இணைந்து செயல்பட உதவும் வகையில், சிற்றுண்டிகளுடன் கூடிய இரவுநேர இசை நிகழ்ச்சிகளையும் இந்த ஸ்டுடியோ ஏற்பாடு செய்கிறது.

இந்த இலக்கை அடைவது அவர்களுக்கு எளிதானதில்லை. முதலில் ஸ்டுடியோவைத் திறக்கத் திட்டமிட்டிருந்தபோது, ஒப்பந்தம் கையெழுத்தாகும் கடைசி நேரத்தில் இடத்தின் உரிமையாளர் பின்வாங்கினார். ஆனாலும், மனந்தளராத இவர்கள், விடாமுயற்சியுடன் தேடி ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடித்தனர். 

இவர்கள் இருவரும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அமைப்பின் இணையத்தளத்தையும் அலுவலக நிர்வாகப் பணிகளையும் அஞ்சலி கவனித்துக்கொள்கிறார். 

‘சாஃப்ட்பாயில்ட் எக்ஸ்’ (softboiled eggs) என்ற உள்ளூர் இசைக் குழுவில் தாளவாத்தியக் கலைஞராக இருக்கும் ஹரிஹரன், இசைக்கருவிகளையும் இசை நிகழ்ச்சிகளைச் சார்ந்த களப்பணிகளையும் கையாள்கிறார்.

தங்களின் சேமிப்பை முதலீடு செய்துள்ள துணிச்சல் குறித்துப் பேசிய அஞ்சலி குரிச், “பணம் வரும், போகும். ஆனால், இதுபோன்ற அனுபவங்கள் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும்,” என்றார்.

“இங்கு வருபவர்களின் புன்னகையையும், அவர்களின் கலந்துறவாடலால் உருவாகும் புதிய நட்புகளையும் பார்ப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. மக்கள் பாதுகாப்பாக உணர்ந்து, தங்களின் படைப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்தும் ஓர் இடத்தை உருவாக்க முடிந்ததில் எனக்குப் பெருமையாக இருக்கிறது,” என்று ஹரிஹரன் கூறினார்.

அக்டோபர் 3ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட ‘சாஃப்ட்பாயில்ட் ஸ்டுடியோஸ்’, சிங்கப்பூரின் அடுத்த தலைமுறை, தனிப்பட்ட இசைக் கலைஞர்களை வரவேற்கத் தயாராக உள்ளது.

குறிப்புச் சொற்கள்