தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தடைகளைத் தாண்டிய இளையரின் துடிப்பு

2 mins read
bf6a2f81-bafa-4fbe-834b-4b939140568e
நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்க உடல்நலத்துக்கு அப்பாற்பட்டு உறுதியான மனநிலையும் தேவை என்பதை நிரூபிக்க முனைகிறார் 26 வயதாகும் கௌசல் குணாளன். - படம்: கௌசல்

நெடுந்தொலைவோட்டம் சவால்மிக்கது என்று பலரும் கருதக்கூடும். அதில் பங்கேற்பவர்கள் வலிமையான உடல் கொண்டிருப்பவர்கள் என்ற எண்ணம் பலருக்கு உண்டு.

ஆனால் நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்க உடல்நலத்திற்கு அப்பாற்பட்டு உறுதியான மனநிலையும் தேவை என்பதை நிரூபிக்க முனைகிறார் 26 வயதாகும் கௌசல் குணாளன்.

கிட்டத்தட்ட எட்டு வயதாக இருந்தபோது கௌசலுக்கு மதியிறுக்கப் பாதிப்பு கண்டறியப்பட்டது. தாமதமாகப் பேசத் தொடங்கியது மட்டுமன்றி வழக்கமாகக் குழந்தைகள் எட்டும் மைல்கற்களைக் கௌசல் தாமதமாகவே எட்டினார்.

‘டிஸ்ப்ராக்சியா’ எனப்படும் வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கோளாறும் கௌசலுக்கு இருக்கிறது. விளையாட்டுகளில் சாதிக்க இவையெல்லாம் பொருட்டல்ல என்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறார் கௌசல்.

ஓடுவதில் மகனுக்கு இருந்த ஆர்வத்தைக் கௌசலின் பெற்றோர் அறிந்துகொண்டனர். விளையாட்டுகளில் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை நம்பும் கௌசலின் பெற்றோர் அவருக்கு ஊக்கம் அளிக்காத நாளே இல்லை.

ஆறாண்டுகளுக்கு முன்னர் கௌசலின் தாயார் சுவாதி பட்டில், 53, சிறப்பு ஒலிம்பிக்ஸ் தடகளத்தில் கௌசலை நீண்ட தூர ஓட்டத்தில் சேரவைத்தார்.

பிறகு கௌசல் படிப்படியாக நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்கத் தொடங்கினார். அவர் ஓடும் தொலைவும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

2023க்குள் கௌசல் 21 கிலோமீட்டர் ஓடுவதற்குப் பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டார். அந்த இலக்கை எட்டும் வகையில் இந்த ஆண்டு கௌசல் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் 21 கிலோமீட்டர் நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உள்ளூரில் பல அமைப்புகள் ஏற்பாடு செய்த நெடுந்தொலைவோட்டங்களில் பங்கேற்றுள்ள கௌசல் முன்னர் வியட்னாமில் நடைபெற்ற 10 கிலோமீட்டர் நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

நெடுந்தொலைவோட்டங்களில் பங்கேற்கும்போது கௌசலுடன் தொண்டூழியர் ஒருவரும் கூடவே இருப்பார்.

தாயார் எப்போதும் ஓட்டப் பயிற்சிகளுக்குக் கௌசலுடனே செல்வார். மேலும் கௌசல் 21 கிலோமீட்டர் நெடுந்தொலைவோட்டத்திற்குப் பயிற்சி செய்ய அதிகாலையில் எழுகிறார்.

இளம் வயதிலிருந்தே கௌசலையும் அவரின் தம்பியையும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கும் பெற்றோர் குடும்ப நடவடிக்கையாகப் பல விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.

உட்லண்ட்சில் இருக்கும் மைண்ட்ஸ் வட்டார மையத்தில் பணியாற்றி வரும் கௌசல் காற்பந்திலும் சிறந்து விளங்கினார்.

காற்பந்தில் அவர் வெளிக்காட்டிய ஆற்றல் சிங்கப்பூர் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுகளில் அவர் பங்கேற்கவும் வழியமைத்தது.

உட்லண்ட்சில் இருக்கும் மைண்ட்ஸ் வட்டார மையத்தில் பணியாற்றி வரும் கௌசல் காற்பந்திலும் சிறந்து விளங்கினார்.
உட்லண்ட்சில் இருக்கும் மைண்ட்ஸ் வட்டார மையத்தில் பணியாற்றி வரும் கௌசல் காற்பந்திலும் சிறந்து விளங்கினார். - படம்: கௌசல்

தாய்லாந்தில் கௌசலுடன் அவர் பெற்றோரும், தம்பியும் நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளிக்கவுள்ளனர்.

விளையாட்டுகள் மூலம் அனைவரையும் உள்ளடக்க முடியும் என்ற உன்னத நோக்கத்துடன் மைண்ட்ஸ் கலர் சாக்ஸ் பேரணி நிகழ்ச்சி அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

“சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர் அவர்களை வீட்டில் முடக்காமல் பல்வேறு விளையாட்டுகளிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வைத்தால்தான் அப்பிள்ளைகளின் திறமையை வெளிக்கொணர முடியும்,” என்றார் கௌசலின் தந்தை குணாலன், 53.

தாயாருடன் கௌசல்.
தாயாருடன் கௌசல். - படம்: கௌசல்
குறிப்புச் சொற்கள்