தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சோழர் வருகையால் ஏற்பட்ட தமிழ் மொழித் தாக்கம்

2 mins read
ba7e021f-d3f1-4e6f-a698-29688e2e5e9c
விளையாட்டுகளில் பங்கேற்ற மாணவர்கள் - படம்: ஜெசிகா ஜீவா
multi-img1 of 3

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம், கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சோழர்களின் வருகையைப் பற்றியும், அவர்களால் ஏற்பட்ட தமிழ் மொழித் தாக்கம் பற்றியும் மாணவர்கள் அறிந்துகொள்ள உதவியாக இருந்தது ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற ‘பார்வை 2025’ நிகழ்ச்சி.

பல்வேறு விளையாட்டுகள் மூலம் தென்கிழக்காசியாவில் சோழர்களின் தாக்கம் குறித்து இளையர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, ‘ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை கைப்பற்றப் போவது யார்?’ என்ற தலைப்பில் நாடகம் இடம்பெற்றது.

சோழ வரலாற்றின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றிய அந்த நாட­கத்தில் ராஜேந்திர சோழனாக 22 வயது ஹரிஷங்கர் கதிரவன் நடித்திருந்தார்.

“இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம்தான், தமிழரின் வீரத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் மாணவர்களால் அறிந்துகொள்ள முடியும்,” என்றார் அவர்.

தொடர்ந்து, மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர்.

அப்போட்டிகளில் அவர்களது தமிழ் மொழியும் அறிவுத்திறனும் சோதிக்கப்பட்டதுடன், சோழர்களின் வரலாறு, வணிகம், சங்ககாலக் கட்டடங்களின் வடிவமைப்பு தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

“எஸ்கேப் ரூம்’, பரமபதம், ‘ஜெங்கா’ போன்ற விளையாட்டுகளின் மூலம் சோழர்களின் வணிக முறை, அவர்கள் ஆட்சி செய்த நாடுகள், சிறப்புற்றிருந்த அவர்களின் கட்டடக்கலை ஆகியவற்றை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப எளிதான முறையில் அறிமுகப்படுத்தினோம்,” என்றார் நன்யாங் ­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ் இலக்­கிய மன்­றத் துணைத் தலைவர் மஹாதேவன் ஆகாஷ், 25.

பொதுமக்கள் கலந்துகொண்ட நிறைவு நிகழ்ச்சியில், போட்டியில் கலந்துகொண்ட மாணவர் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிகளில் பங்குபெற்ற உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி மாணவி மோனிஷி, 15, “புதுமையான விளையாட்டுகளின் மூலம் சோழர் வரலாறு பற்றிக் கற்றுக்கொள்வது எளிதாக இருந்தது. மற்ற பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடி விளையாடும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்