சிங்கப்பூர் இளையர்களை அவர்களின் எதிர்கால இலக்குகளை நோக்கி நம்பிக்கையுடன் வழிநடத்தும் நோக்கில் ‘வேஃபைண்டர்ஸ்’ எனும் சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) நடைபெற்றது.
‘புரொஃபெக்டஸ்’ கல்வி (Profectus Education), ‘அவர்எஸ்ஜிஸ்டோரீஸ்’ (OurSGStories) ஆகிய இளையர் தொண்டூழிய அமைப்புகள் இணைந்து, தேசிய இளையர் மன்றத்தின் ஆதரவுடன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தன.
‘ஸ்கேப்’ கட்டடத்தில் உள்ள ‘டிரம்போலின்’ அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 60 இளையர்கள் கலந்துகொண்டனர்.
இளையர்கள் தங்களைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ளவும் மென்திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் பல்வேறு தொழில் வாய்ப்புகளை ஆராயவும் நிகழ்ச்சி வாய்ப்பளித்தது.
விழிப்புணர்வை ஊக்குவிக்கும் பயிலரங்குகளோடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களுடன் ‘காபி சாட்’ என்ற பெயரில் குழுக் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனை அறிதல்
நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளர்களான மாட்டியோ வீ, லூக்கஸ் லியு ஆகியோர் அதன் நோக்கங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
“இன்றைய இளையர்கள் வாழ்க்கையில் சரியான திசையைக் கண்டறிய முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு முறையான வழிகாட்டல் கிடைப்பது அரிதாக உள்ளது. அந்த இடைவெளியை நிரப்பவே நாங்கள் முயற்சி செய்கிறோம்,” என்று ‘அவர்எஸ்ஜிஸ்டோரீஸ்’ அமைப்பின் நிறுவனரான மாட்டியோ கூறினார்.
பொதுச் சேவை, தொழில்நுட்பம், தொழில்முனைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களுடனான நேரடி உரையாடல்கள் இளையர்கள் தங்களின் உண்மையான ஆர்வத்தைக் கண்டறிய உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“இளையர்கள் தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே வடிவமைத்துக்கொள்ள அவர்களுக்கு அதிகாரமளிப்பதே எங்கள் முக்கிய நோக்கம்,” என்று ‘புரொஃபெக்டஸ்’ கல்வி அமைப்பின் இணை நிறுவனரான லூக்கஸ் கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் மென்திறன்களுக்கும் சுய புரிதலுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், பங்கேற்பாளர்கள் சுயமாகச் சிந்தித்து செயல்படும் நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழில்முறை வல்லுநர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களில் இளையர் ஒருங்கிணைப்பாளர்களும் வழிகாட்டிகளாகப் பங்கேற்றனர்.
அவர்களில் ஒருவரான, லண்டன் பொருளியல் பள்ளியில் உளவியல் பயிலும் ஜான்சன் ஏஞ்சலின், 20, விடுமுறைக்காக சிங்கப்பூருக்கு வரும்போதெல்லாம் ‘புரொஃபெக்டஸ்’ கல்வி அமைப்பில் தொண்டூழியராகச் செயல்படுவார்.
“அதிக வருமானம் தரும் தொழிலை மட்டுமே நோக்காமல், வாழ்க்கையில் உண்மையான நிறைவை அளிப்பது எது என்பதை இளையர்கள் சிந்திக்க வேண்டும்,” என்றார் அவர்.
தங்களுக்குப் பொருத்தமான வேலைச்சூழல் எது, என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை இளம் வயதிலேயே அறிந்துகொள்வது, எதிர்கால மன அழுத்தத்தைக் குறைத்து சரியான முடிவுகளை எடுக்க உதவும் என்றும், அதைத் தமது அனுபவத்தின் அடிப்படையில் உணர்ந்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
மிதிவண்டி நிறுவனத் தலைமை அதிகாரியிடம் கற்ற பாடம்
விக்டோரியா பள்ளியில் பயிலும் 16 வயது மாணவர் தயானந்த சேகர் ஜோத்திர் ஆதித்யா, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.
“எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை. அதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைக் கேட்டறிந்தது பயனுள்ளதாக இருந்தது,” என்றார் அவர்.
‘காபி சாட்’ நிகழ்வில் மிதிவண்டி நிறுவனமொன்றின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் உரையாடிய அனுபவம் தமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தாலும், மிதிவண்டியின் சில பாகங்களைத் தாமே வடிவமைத்து தயாரிப்பதாக அவர் கூறினார். அந்த உரையாடல் எனக்குள் இருந்த வடிவமைப்புத் துறை மீதான ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தியது,” என்று அவர் உற்சாகத்துடன் கூறினார்.

