நடப்பு விவகாரங்களைப் பற்றி மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டவும், அவர்களின் திறன்களைச் சோதிக்கவும் முனைந்தது அண்மையில் நடந்த ‘செய்தி என்ன’ எனும் போட்டி.
இணையம்வழி நடத்தப்பட்ட இப்போட்டியின் தகுதிநிலைச் சுற்றில், 70க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 7,400க்கும் அதிகமான மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கல்வி அமைச்சின் ஆதரவின் கீழ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த இப்போட்டியின் அரையிறுதி சுற்று வியாழக்கிழமை (மே 14) நடந்தேறியது.
உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி கழகத்தைச் (ஐடிஇ) சேர்ந்த 16 குழுக்கள் போட்டியில் களமிறங்கின.
நடப்பு விவகாரங்களைப் பற்றிய அறிவை மட்டும் சோதிக்காது, குழுவொற்றுமை, விவேகம், படைப்பாற்றல் போன்றவற்றையும் போட்டியின் நான்கு அங்கங்கள் சோதித்தன.
‘இட்ஸ் எ டாஸ் அப்’ அங்கத்தில், நடப்பு விவகாரக் கேள்விகளுக்குச் சரியாக பதிலளித்துத் தக்கவைத்துக் கொண்ட ‘பீன்பாக்ஸ்களை’, அதிக புள்ளிகள் கொண்ட துளைகளுக்குள் வீசி மாணவர்கள் புள்ளிகளைச் சேர்த்தனர்.
‘பாலிசி பிட்ச்’ எனும் அங்கத்தில் குழுக்களிடம் ஒரு சமூக பிரச்சனை பகிரப்பட்டது. அந்தப் பிரச்சினையைக் கையாள எடுக்கக்கூடிய முயற்சிகளைப் பற்றி ஒரு விரிவான செயல்திட்டத்தை ஒரு தாளில் மாணவர்கள் எழுதிப் படைத்தனர்.
மாணவர்கள் வழங்கிய ஆலோசனைகளுக்குப் புத்தாக்க சிந்தனையின் அடிப்படையிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதன் சாத்தியத்தைக் கருத்தில்கொண்டும் நடுவர்கள் புள்ளிகளை வழங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
நான்கு அங்கங்களில், அந்த அங்கமே தம்மை அதிகம் ஈர்த்ததாகப் பகிர்ந்தார், சிங்கப்பூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியில் பயிலும் 16 வயது ரம்யா தணிகை அரசு.
“சுற்றுலாத் துறையைப் பாதிக்கும் ஒரு பிரச்சனையை எங்கள் குழு கையாண்டது. குழுவோடு ஒன்றிணைந்து, எங்களுடைய தனிப்பட்டக் கருத்துகளை ஒன்றுதிரட்டி, ஒருமித்த படைப்பை வழங்கினோம். பொது அறிவை மட்டும் வளர்த்துகொள்ளாமல், இத்தகைய சூழலில் அதைப் பயன்படுத்தி, சமூக பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எனக்கு பிடித்திருந்தது,” என்றார் ரம்யா.
“இந்த போட்டியின் மூலமாக, என்னால் நடப்பு விவகாரங்களைப் பற்றி சுவாரசியமான முறையில் கற்றுகொள்ள முடிந்தது. அதோடு, குழுவின் மற்ற உறுப்பினர்களோடு உள்ள பிணைப்பை வலுப்படுத்தவும் இது ஒரு நல்ல தளமாக அமைந்தது,” என்று பகிர்ந்தார் ஈசூன் இனோவா தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் 17 வயது பாலமுருகன் நித்தீஷ்.
“இந்த போட்டிக்காக நாங்கள் கடும் முயற்சி எடுத்தோம். பள்ளி இடைவேளையின்போது, வீட்டிற்குச் செல்லும்போது என கிடைக்கும் நேரங்களைப் பயன்படுத்தி வேலை செய்தோம்,” என்று கூறினார் விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 16 வயது பாலபிரத்யூஷ் தாமோதரன்.
இதற்கு முன்பு, தமது பள்ளியில் நடப்பு விவகாரங்களில் ஆர்வமில்லாதோர் கூட, அந்த போட்டிக்குத் தயார்படுத்திக்கொள்வதற்காகவே, அவற்றைப் படித்ததாகப் பகிர்ந்தார் பாலபிரத்யூஷ்.
மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த மாற்றத்தை மெச்சினார் ஆசிரியர் திரு முகமது பிஃர்டாவுஸ் பின் சுலைமான்.
“ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் நாளிதழ்களைச் சேகரித்து மாணவர்கள் அதில் உள்ள செய்திகளைப் படித்தனர். இது போன்ற போட்டிகள் நடப்பதால், பொது அறிவை மட்டும் வளர்த்துக்கொள்ளாமல், பல மென்திறன்களையும் அறிந்துகொண்டு அவர்கள் கற்றுகொண்டதை நடைமுறையில் பயன்படுத்தவும் தெரிந்துகொள்வர்,” என்று குறிப்பிட்டார் சிங்கப்பூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியில் வரலாறு, சமூக அறிவியல் பாடங்களை வழிநடத்தும் திரு பிஃர்டாவுஸ்.
கடும் போட்டிக்கு இடையே, விக்டோரியா உயர்நிலைப்பள்ளி, சிங்கப்பூர் அறிவியல், தொழில்நுட்ப பள்ளி, செயிண்ட் கேப்ரியல்ஸ் உயர்நிலைப்பள்ளி, பிரெஸ்பெட்டெரியன் உயர்நிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகள் இறுதிச் சுற்றில் ஓர் இடத்தைப் பிடித்தன.
எஸ்பிஎச் மீடியா உள்ளரங்கத்தில், மே 26 அன்று நடக்கவுள்ள இறுதிச் சுற்றில் மொத்தம் 4 பள்ளிகள் மோதுகின்றன.
வெற்றிக்கோப்பையைத் தட்டிச் செல்லும் பள்ளிக்கு $4,000க்கான காசோலையும், வழங்கப்படும்.

