வி.கே சந்தோஷ் குமார்
தனது பள்ளி வாழ்க்கையை இன்பமாக, உல்லாசமாகக் கழித்துவந்த ஷஹிரா ஷிர்ஹான் கணே[Ϟ]சன், ஒருநாள் துன்புறுத்தலுக்கு ஆளா[Ϟ]னார்.
அவர் வளர்ந்த பின்பு மீண்டும் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
“என்னால் என்னையே தற்காத்துக்கொள்ள முடியவில்லை என்பதால் நான் எளிதில் பாதிப்படையக்கூடிய நிலையில் இருக்கிறேன் என்று அப்போதுதான் உணர்ந்தேன். இதுபோன்ற சூழல்களை மேலும் நன்கு கையாள ஒரு தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள விரும்பினேன். ஆனால், அதை எவ்வாறு தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.
“என் குடும்பத்தில் சிலர் குத்துச்சண்டையில் ஈடுபடுவது எனக்குத் தெரியவந்தது. நான் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். ஆர்வம் பிறந்தது. பின்பு குத்துச்சண்டைப் பயிற்சியில் சேர்ந்தேன்,” என்றார் 32 வயது ஷஹிரா.
இன்று நிலத்தோற்றக்கலை வடிவமைப்பாளராகப் பணியாற்றும் ஷஹிரா, கடந்த இரண்டரை ஆண்டுகளாக, வாரத்தில் நான்கு முறையாவது குத்துச்சண்டை பழகிவருகிறார்.
நம்பிக்கைக்கு விதை
“குத்துச்சண்டை எனக்கு மனக் கட்டுப்பாட்டை கற்றுக்கொடுத்துள்ளது. அதனால், என்னால் வேலையிடத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட முடிகிறது. மீண்டும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டால், என்னால் எதிர்த்துப் போராட முடியும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது. 30களில் உள்ள நான், முன்பைவிட இப்போதுதான் அதிக வலிமையாக, தன்னம்பிக்கையாக இருப்பதை உணர்[Ϟ]கிறேன்,” என்றார் ஷஹிரா.
ஷஹிராவைப் போல், சிங்கப்பூரில் அண்மைய ஆண்டுகளில் குத்துச்சண்டைப் பயிற்சி பயிலும் இளம் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலை செய்துகொண்டே இதில் ஈடுபடும் சுமார் 80 பேரில், 20 பேர் பெண்களாக இருக்கலாம் என்றார் ஷஹிரா.
தொடர்புடைய செய்திகள்
ஷஹிரா பயிற்சிசெய்யும் இடமான ஸ்பார்டன்ஸ் குத்துச்சண்டைக் கூடத்தில் மாதத்துக்கு 250 முதல் 300 வெள்ளி வரை கட்டணம் செலுத்தி உடற்பயிற்சிக்கூடத்தையும் குத்துச்சண்டை வளையத்தையும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆண்களுக்கானது மட்டுமல்ல
“வன்முறை நிறைந்த விளையாட்டு இது; பெண்களுக்குப் பொருத்தமானதல்ல எனச் சிலர் எண்ணலாம். ஆனால், குத்துச்சண்டை வளையத்தில் நான் இருக்கும்போது உண்மையில் மிக நிதானமாக இருப்பேன்,” என்றார் ஷஹிரா.
அவர் விளையாட்டில் அடைந்துள்ள தேர்ச்சிநிலையால் ஓராண்டில் குறைந்தது இரண்டு ‘வெள்ளை காலர்’ (அலுவலகத்தில் பணியாற்றுவோருக்குரியது) குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்றுவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் 18 குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
தற்போது சிங்கப்பூரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எடை சார்ந்த பிரிவுகளில் ஆண்டுக்கு நான்கு ‘வெள்ளை காலர்’ குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெறுகின்றன.
“ஒட்டுமொத்த அனுபவமே எனக்கு உணர்வுபூர்வமானது. வளையத்தில் உங்களின் பயிற்றுவிப்பாளர், அணியினரை விட்டு நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். அது சிரமமான ஒன்றுதான். ஆனால், போட்டித்தன்மையுடன் களத்தில் இறங்க எனக்குப் பிடிக்கும்,” என்றார் ஷஹிரா.
புதிய மனிதராக உருவெடுத்தல்
மற்றோர் இளம் இந்தியப் பெண்ணான 27 வயது பவித்திரா நாயுடு, போட்டிக்காகக் குத்துச்சண்டையில் ஈடுபடுவதில் அதிக ஈடுபாடு இல்லாதவர். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாகக் குத்துச்சண்டையில் ஈடுபடத் தொடங்கிய அவர், பெரிதும் பலனடைந்துள்ளார்.
“நான் பல்கலைக்கழக்கத்தில் இருந்த காலத்தில் பிறருடன் அதிகம் பழகமாட்டேன். வகுப்புக்குப்பின் வீட்டுக்குச் சென்றுவிடுவேன். உடற்பயிற்சி எதுவும் செய்யமாட்டேன்.
“ஒரு நாள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு குத்துச்சண்டைக் கூடத்தின்வழியே நடந்துசென்றபோது அதை ஒரு கைபார்க்கலாமே என எனக்குத் தோன்றியது. என் நண்பருடன் சென்றேன். எங்களுக்கு உடனே குத்துச்சண்டை பிடித்துப்போய்விட்டது,” என்றார் பவித்திரா.
தொடக்கத்தில் சவால்கள் இருக்கவே செய்தன. குத்துச்சண்டைக்கு முக்கியமாகக் கருதப்படும் கைகால் ஒருங்கிணைப்பு தனக்கு இல்லாததால் அதில் அதிகம் முன்னேற முடியாது என அவர் அஞ்சினார். ஆனால், விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தார்.
“அந்தக் காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்ததால் எனக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. குத்துச்சண்டை மீது அதீத ஆர்வம் ஏற்பட்டதால் அவ்விளையாட்டில் கூடுதல் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன்,” என்றார்.
நிறுவன வேலையோடு படித்தும் வந்ததால் மன அழுத்தத்தைத் தணிக்கவும் குத்துச்சண்டை தனக்கு உதவியதாகக் கூறினார் பவித்திரா.
“ஒருவரை அடிப்பது சட்டவிரோதம். ஆனால், குத்துச்சண்டையில் அந்த எரிச்சலை வெளிப்படுத்த முடியும். எனது மன அழுத்தத்தை வெளிப்படுத்த முடிவதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். பயிற்சிக்குப் பிறகு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்,” என்றார் அவர்.
உடற்பயிற்சிக் கூடத்தில் மற்றவர்களுடன் நட்புக் கொண்டதால் தமது கூச்ச சுபாவத்தை மெல்லக் கைவிட்டார். ஒட்டுமொத்த அனுபவமும் அவரை வெகுவாக ஈர்த்த காரணத்தால் தனது நிறுவன வேலையை விட்டு ஸ்பார்ட்டன்ஸ் குத்துச்சண்டைக் கூடத்தின் தை செங் கிளையின் மேலாளராக முழுநேரமாகச் சேர்ந்தார்.
வயது வரம்புக்கு அப்பாற்பட்டது
பவித்திரா தன்னுடைய 58 வயது தாயார் உட்பட, மேலும் அதிகமான பெண்களைக் குத்துச்சண்டையில் சேர்க்க முனைந்து வருகிறார்.
“தொடக்கத்தில் என் தாயார் குத்துச்சண்டையை ஆண்களுக்கான விளையாட்டாகத்தான் பார்த்தார். ஆனால், மூன்று மாதங்களுக்குப் பின்னர், ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஆரோக்கிய தாக்கத்தை அவர் புரிந்துகொள்ளத் தொடங்கினார். நானே நான்கு ஆண்டுகளில் குத்துச்சண்டைவழி 15 கிலோ குறைந்ததை அவர் கவனித்தார்,” என்றார் பவித்திரா.
இதே ஆரோக்கியம் சார்ந்த காரணத்துக்காகத்தான் இணையப் பாதுகாப்புப் பொறியாளர் விக்னேஷ் மணிவண்ணன், 33, குத்துச்சண்டையில் ஈடுபடத் தொடங்கினார்.
ஒரு நாள் மருத்துவச் சோதனைக்குச் சென்ற அவருக்கு, கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளுக்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
“இந்நிலையை மாற்ற ஏதே[Ϟ]னும் செய்யவேண்டும் என எண்ணிய நான், குத்துச்சண்டையை நாடினேன். பள்ளியில் நான் குத்துச்சண்டை செய்துபார்த்திருக்கிறேன். ஆனால், அதில் ஆழமாகச் செல்லவில்லை. இதுவே சரியான தருணம் என எனக்குத் தோன்றியது,” என்று முடிவெடுத்த விக்னேஷ், ஸ்பார்டன்ஸ் குத்துச்சண்டைக் கூடத்தில் சென்ற ஆகஸ்ட் மாதம் சேர்ந்தார்.
“முன்பு வேலை, வீடு என்றுதான் என் வாழ்க்கை இருந்தது. இப்பொழுது அன்றாடம் குத்துச்சண்டைக் கூடத்துக்குச் செல்வது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. தூக்கம் மேம்பட்டுள்ளது. உடற்சோர்வு குறைந்துள்ளது. கவனம் செலுத்துவதுடன் எனது மூளையும் இன்னும் துடிப்புடன் செயல்படுகிறது. நண்பர்கள் இருப்பதால் சுவாரசியமாகவும் இருக்கிறது,” என்றார் விக்னேஷ்.

