இளையர்கள் பலரிடையே அண்மைக் காலமாக, அரசியல் குறித்த கலந்துரையாடல்கள் சூடுபிடித்து வருகின்றன.
ஆனால் சில தருணங்களில், விவாதங்கள் சண்டையாக உருமாறி விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன.
அதைக் கவனித்த சிங்கப்பூர் இளையர் மன்றம், விவாதத்தைப் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே அதிகரிக்க முற்பட்டு, ‘சொற்சுடர்’ எனும் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்தது.
“இந்தப் பயிலரங்கின் அடிப்படை நோக்கமே விவாதத்தின் விதிமுறைகளைப் பற்றியும் அவற்றின் நுணுக்கங்களைப் பற்றியும் மாணவர்களுக்குத் தெரியப்படுத்துவதே ஆகும்,” என்று மன்றத்தின் துணைச் செயலாளரும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான வர்ஷா வித்யா சங்கர் கூறினார்.
பல உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 32 மாணவர்கள் இப்பயிலரங்கில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
விவாதத்தில் அனுபவம் இருந்தாலும் இல்லையென்றாலும் அனைவரும் பயனடையும் விதத்தில் அடிப்படை முதல் விரிவான நிலையில் விவாத நுணுக்கங்கள்வரை பல தகவல்கள் பகிரப்பட்டன.
விவாதம் பற்றிய சிறு விளக்கம், அதில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், நல்ல பேச்சாளர் ஒருவரிடம் இருக்க வேண்டிய சிறப்பம்சங்கள் என்று பலதரப்பட்ட தகவல்களை மாணவர்களிடம் பகிர்வதற்காக மூன்று அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குமாரி கலைவாணி இளங்கோ, முனைவர் மன்னை ராஜகோபாலன், முனைவர் மீனாட்சி சபாபதி ஆகிய அனுபவம் வாய்ந்த பேச்சாளர்கள் அந்த அமர்வுகளை வழிநடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
கற்றுக்கொடுத்ததைப் பயிற்சி செய்வதற்கான தளமாக விவாதப் போட்டி அங்கமொன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நால்வர் கொண்ட குழுக்களாக மாணவர்களைப் பிரித்து, கொடுக்கப்பட்ட தலைப்பை ஒட்டி அல்லது வெட்டிப் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
15 நிமிடத் தயாரிப்பிற்குப் பிறகு, ஒரு விவாதப் போட்டியின் அமைப்புக்கு ஏற்ப மாணவர்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
மாணவர்களுடைய கருத்துகளின் ஆழத்தைப் பொறுத்தும் படைக்கும் பாணியின் அடிப்படையிலும் நடுவர்கள் முனைவர் மீனாட்சி சபாபதியும் திருமதி மல்லிகாவும் மதிப்பீடு செய்தனர்.
“மாணவர்கள், தலைப்புக்கேற்ற கருத்துகளைத் தெரிவித்துப் பயிலரங்கில் கற்றதைச் சரியாகப் பயன்படுத்தி அழகாகப் பேசினர்,” என்றார் முனைவர் மீனாட்சி சபாபதி.
பயிலரங்கு நடக்கும்போது கருத்துகளைத் தயக்கமின்றி எடுத்துக்கூறியதையும் நிகழ்ச்சி முடிந்த பின்பு தம்மிடம் வந்து பேசி சிலவற்றுக்கு விளக்கம் கேட்டதையும் சுட்டிய அவர், மாணவர்களின் ஆர்வத்தைப் பெரிதும் மெச்சினார்.
பயிலரங்கின்போது சொல்லிக்கொடுத்ததை மாணவர்கள் எந்த அளவிற்கு உள்வாங்கிக்கொண்டனர் என்பதை சோதிக்கும் வண்ணம் ‘காஹூட்’ வினா விடை அங்கமும் நிகழ்ச்சியின் இறுதியில் இடம்பெற்றது.
அதில் முதல் பரிசை வென்ற 14 வயது ரம்யபிரபா சிவகுமார், விவாதப் போட்டியில் அவரது குழுவின் சிறந்த பேச்சாளராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
இதற்கு முன்பு, விவாதப் போட்டியில் பங்குபெற்றிருந்தாலும், பயிலரங்கில் பங்கேற்றதன்மூலம் புதிய தகவல்களை அறிந்துகொண்டதாகக் கூறினார் தேசியத் தொடக்கக்கல்லூரியைச் சேர்ந்த ரம்யபிரபா.
“ஒரு நடுவரிடம் கேள்விகளைக் கேட்கலாம் என்று நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவ்வாறு செய்வது தவறு என்றும் அதனால் அவர்கள் பதற்றம் அடைவார்கள் என்றும் நான் கற்றுக்கொண்டேன்,” என்றார் ரம்யபிரபா.
இதுவரை பேச்சுப் போட்டிகளிலேயே அதிகம் பங்குபெற்றதால், விவாதம் குறித்த புரிதல் குறைவாகவே இருந்ததாகக் குறிப்பிட்டார் சிஎச்ஐஜே செயின்ட் ஜோசப்ஸ் கான்வென்டைச் சேர்ந்த 15 வயது எனிஷ்கா ஶ்ரீ ஶ்ரீதர்.
அவ்வகையில், இந்தப் பயிலரங்கின்மூலம், சண்டை போடாமல், விவாதத்தில் எவ்வாறு கருத்துகளை முன்வைப்பது என்று கற்றுக்கொண்டதாக அவர் சொன்னார்.
விவாதப் போட்டி அங்கத்தில் கொடுக்கப்பட்ட தலைப்புகளில், ‘சிங்கப்பூரில் பொது விடுமுறைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்’ என்ற தலைப்பும் அடங்கியிருந்தது.
அவற்றை வெட்டிப் பேசிய குழுவில் ஒருவர் எனிஷ்கா. தலைப்பை வெட்டிப் பேசுகையில், குடும்பத்தோடு இருக்கும் நேரத்தை அதிகரித்தல், வேலைப் பளுவிலிருந்து சற்று நேரம் விடுபடுதல், கலாசாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் கூட்டுதல் போன்ற கருத்துகளைத் தாமும் தமது குழுவினரும் முன்வைத்ததாகக் கூறினார் எனிஷ்கா.
முதன்முறையாக விவாதத்தில் கலந்துகொள்வதாகக் குறிப்பிட்ட 16 வயது தைவிக் ரெட்டி, பயிலரங்கில் பங்கேற்றதன் காரணமாக விவாதத்தின் மீதுள்ள ஆர்வமும் தமிழின் மீதுள்ள பற்றும் மேலோங்கியதாகச் சொன்னார்.
“விவாதம் என்பது சண்டைபோடுவது இல்லை; நம்முடைய கருத்துகள் பிறருக்குப் புரியும் விதமாக முன்வைப்பதாகும். அதுமட்டுமின்றி, எதிர்த்தரப்பினர் கூறும் கருத்துகளில் பிழை ஏதும் இருந்தால், அவற்றைச் சுட்டிக்காட்டுவதும் ஒருவித விவாதப் பாணி என்று நான் புரிந்துகொண்டேன்,” என்று தைவிக் தெரிவித்தார்.
சரளமாகவும் தன்னம்பிக்கையோடும் பேசுதல், மக்களை ஈர்க்கும் வண்ணம் பேசுதல் - இவை ஒரு நல்ல பேச்சாளருக்கு அழகு என்பதைப் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார் தைவிக்.
“இதுபோன்ற பயிலரங்குகள் மாணவர்களின் பேச்சுத் தமிழையும் சொல்வளத்தையும் மட்டும் மேம்படுத்தவில்லை. மேடையில் பேச முன்வருவதன்மூலம் அவர்கள் தன்னம்பிக்கையையும் தலைமைத்துவத்தையும்கூட வளர்த்துக்கொள்கின்றனர்,” என எடுத்துரைத்தார் முனைவர் மீனாட்சி சபாபதி.
“தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக இருப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இதனை விரிவுபடுத்தி ஒரு தொகுப்பாக நடத்தும்போது விவாதம் செய்வதற்கான ஆற்றல் மாணவர்களிடையே பெருகும்,” என்று குமாரி கலைவாணி இளங்கோ நம்பிக்கை தெரிவித்தார்.

