தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாற்றங்களின் 2024, புதிய நம்பிக்கைகளின் 2025

2 mins read
942d2da4-5785-4bc5-b0ca-a8307d47b347
புதிய ஆண்டு புது நம்பிக்கைகளின் தொடக்கம் என்றே பலரும் கருதுகின்றனர். - படம்: இணையம்

இந்த ஆண்டு எப்படிச் சென்றது என்று என்னிடம் கேட்டால், புயல் வேகத்தில் என்றுதான் சொல்வேன்.

இன்னும் சில நாள்களில் புத்தாண்டு வரவிருக்கும் வேளையில், 2024ஆம் ஆண்டானது இந்த உலகிலும் என்னிலும் மின்னல் வேகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது என்பேன்.

உலகம் பல வண்ணமயமான நிகழ்வுகளைக் கண்டபோதிலும், சவால்களும் இருந்தன. கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிறகு இந்த ஆண்டு, நிச்சயமற்ற நிலைகளை எதிர்கொள்வதற்கான உறுதியை நமக்குக் கற்றுத்தந்துள்ளது.

தனிப்பட்ட வகையிலும் 2024 எனக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. திருமணம், புதிய வாழ்க்கை, புதிய சவால்கள், புதிய குடும்பம் எனப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லும் அளவிற்கு இந்த ஆண்டு என்னை ஒரு சுவாரசியமான பயணத்தில் இட்டுச்சென்றது.

திருமண வாழ்க்கையில் அடியெடுத்துவைத்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் பல. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், புரிந்துகொள்ளுதல், சேர்ந்து வாழும்போது எழும் சவால்களைச் சமாளித்தல் என இந்த ஆண்டில் எனது வாழ்க்கைச் சக்கரம் விரைவாகவே ஓடியது.

ஆறு மாதங்கள் கடந்தும் இன்னும் நாங்கள் தேனிலவுப் பயணத்தை மேற்கொள்ளாமல் இருப்பது பலருக்கும் வியப்பை அளித்தாலும் இந்த ஆறு மாதங்களில் கணவன் - மனைவி உறவு திருமண வாழ்வில் எவ்வாறு இருக்கும் என்று நான் ஓரளவிற்குக் கற்றுக்கொண்டது மனநிறைவு அளிக்கிறது.

ஒரு நாளிதழ் செய்தியாளராக, என் திருமண வாழ்வையும் பணியிடப் பொறுப்புகளையும் கையாளும் விதத்தை 2024 எனக்குக் கற்றுத்தந்துள்ளது. நேரத்தை நன்கு வகுத்துக்கொள்வது, வேலை - வாழ்க்கைச் சமநிலையைப் பேணுவது போன்றவை அதில் அடங்கும்.

மேலும், செய்தியாளராக எனது பணியின்போது சில நேரங்களில் எதிர்பாரா வேலைகள் தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிட்டாலும், அதைப் புரிந்துகொள்ளும் மனப்பான்மை என் கணவருக்கு உள்ளது என்பதை நினைக்கும்போது நிம்மதியாக இருக்கிறது.

குடும்பத்தினருக்கு அப்பாற்பட்டு, அலுவலகத்திலும் அதை நன்கு புரிந்துகொள்ளும் சக ஊழியர்களும் மேலதிகாரிகளும் கிடைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்.

அடுத்த ஆண்டைக் கூடிய விரைவில் எதிர்நோக்கவுள்ளோம். ஆண்டு தொடங்கிய சில வாரங்களிலேயே நான் எனது தேனிலவுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறேன்.

புத்துணர்ச்சியூட்டும் தொடக்கமாக எனக்கு 2025 இருந்தாலும் புத்தாண்டில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதை இப்போதே எதிர்பார்க்க முடிகிறது. காலந்தான் அதற்கு விடை சொல்லும்.

சவால்கள், கற்றுக்கொள்ள வேண்டிய புதிய பாடங்கள், பணியிடத்தில் அதிக பொறுப்புகள் ஆகியவற்றுக்கு அப்பால், புதிய வாய்ப்புகளையும் பற்றிக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

குறிப்புச் சொற்கள்