பிடித்த வழியில் துணிந்து நடைபோடும் இளந்தொழில்முனைவர்

பிடித்த வழியில் துணிந்து நடைபோடும் இளந்தொழில்முனைவர்

4 mins read
ce3c7094-a721-4d60-afdc-30f406c62ce4
‘தி சாய் டப்ரீ’ கடையை 2025ஆம் ஆண்டு தொடங்கினார் மகிஷா ராமலிங்கம், 26. - படம்: மகிஷா ராமலிங்கம்

‘தேநீர் அருந்தச் செல்லலாமா?’ என்ற ஒற்றைக் கேள்வியே 26 வயது மகிஷா ராமலிங்கத்தின் தொழில்முனைப்புப் பயணத்திற்கு வித்திட்டது.

பெர்க்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகம் பயின்றுவந்த வேளையில், அடிக்கடி தமது பல்கலைக்கழகத்தின் அருகிலிருந்த கடையில் தேநீர் வாங்கிப் பருகும் வழக்கம் மகிஷாவிடம் இருந்தது.

வகுப்புகள் முடிந்தபின் நண்பர்களுடன் மனந்திறந்து பேசவும் இளைப்பாறவும் அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

“அந்த உணர்வே தனி,” என ஏக்கத்துடன் நினைவுகூர்ந்தார் மகிஷா.

இளங்கலைப் படிப்பு முடித்து சிங்கப்பூர் திரும்பிய இவர், அத்தகைய சூழல் சிங்கப்பூரில் இல்லை என வருந்தினார். அந்த வருத்தமே தொழில் தொடங்குவதற்கான விதையாக அமைந்தது.

2025ஆம் ஆண்டில் மகிஷா ‘தி சாய் டப்ரீ’ எனும் பெயரில் கடையைத் தொடங்கினார்.

“இந்தி மொழியில் சாய்’ என்பது தேநீர் என்றும் ‘டப்ரீ’ என்பது தேநீர்க் கடை என்றும் பொருள்படும். ஆகவே, இந்தியர்களும் மற்ற இனத்தவரும் சேர்ந்து இந்தக் கடைக்கு வரலாம் என்று நோக்கில் இவ்வாறு பெயர் வைத்தேன்,” என்று மகிஷா கூறினார்.

வழக்கமான இந்திய உணவுகளுக்கு அப்பாற்பட்டு, தனித்துவமிக்க உணவுகளை தமது கடையில் இவர் விற்பனை செய்து வருகிறார்.

“இளையர்களுக்குப் புதுப் புது உணவுகளை உண்டு ரசிக்க வேண்டும். மாச்சா, ஹொஜிச்சா போன்ற பானங்கள் புகழ்பெற்ற வருகின்றன. அவை அனைத்தையும் இளையர்கள் விரும்பி வாங்குகின்றனர்,” என்றார் மகிஷா.

இளையர்களின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி நன்கு ஆராய்ந்தபின், குளிர்ந்த மாச்சா செம்புற்றுத் தேநீர், குளிர்ந்த திராமிசு தேநீர் போன்ற பானங்களை விற்கிறார்.

இவரது கடை முதன்மையில் ஒரு தேநீர்க் கடையாக இருந்தாலும், அங்குப் பலவகை உணவுகளும் விற்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, ‘சாட்’ வகைகளில் ‘பானி பூரி’, ‘பேல் பூரி’ பற்றி பலர் அறிந்திருந்தாலும், ஒரு சில ‘சாட்’ வகைகள் பற்றிப் பலரும் அறிந்திருக்காததை மகிஷா கவனித்தார்.

மக்களுக்குப் பல ‘சாட்’ வகைகளைப் புதிய பரிமாணத்துடன் பகிர விரும்பி, ‘பாலக் பட்டா சாட்’ போன்ற அரிய ‘சாட்’ வகைகளை விற்கின்றனர்.

“நவீன பாணியில் உணவு படைக்கப்பட்டாலும், ஒரு தேநீர்க் கடையில் இருப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம்,” என்கிறார் இந்த இளம்பெண்.

பிஞ்சிலேயே துளிர்த்த கனவு

சொந்த காலில் நின்று, தொழில் தொடங்குவது என்பது சிறு வயதிலிருந்தே மகிஷாவிற்கு ஒரு கனவாக இருந்தது.

குழந்தையாக இருந்தபோதே தம் பெற்றோரின் கடையில் உதவி செய்யும பழக்கம் மகிஷாவிற்கு இருந்தது. அப்போதே அவருக்கு வணிகத்தின் மீதான ஆர்வம் துளிர்விட்டது.

தமக்கு 15 வயதாக இருந்தபோது, ஃபேஸ்புக்வழி சிறு கேளிக்கைப் பொருள்களை இவர் விற்றார்.

“அதில் அதிக லாபத்தை ஈட்டவில்லை என்றாலும், அந்த வயதில் நான் துணிச்சலுடன் செயல்பட்டு அதைத் தொடங்கியதே இப்போது தொழில் தொடங்கும் துணிவைக் கொடுத்தது,” என மகிஷா கூறினார்.

உணவுத் துறையைப் பொறுத்தவரையில், வணிகம் நிலைபெறவும் நல்ல வருமானம் ஈட்டவும் குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளாகும் என பலர் கூறியிருந்ததால், தொழிலில் உடனே வெற்றிபெற வேண்டுமென்ற எண்ணம் மகிஷாவிடம் இல்லை.

ஆனாலும், இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளேயே பலர் தம் கடைக்கு வந்தது இவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

இன்னொரு பக்கம், கடை பற்றிய எதிர்மறைக் கருத்துகள் இவரது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தன.

“எதிர்மறைக் கருத்துகள் எந்தவொரு தொழிலிலும் இயல்புதான். அனைவரையும் மனநிறைவடையச் செய்வது என்பது எளிதன்று. ஆயினும், மனத்தளவில் பாதிப்படையாமலும் இல்லை,” என்றார் மகிஷா.

வருந்துவதால் பயனில்லை என்று வெகு விரைவில் உணர்ந்த இவர் செயலில் இறங்கினார். கிடைத்த கருத்துகளைத் திரட்டி, தமது வணிகத்தை மேம்படுத்தத் தொடங்கினார்.

உழைப்பு தந்த உயர்வு

சீமெய்யில் அமைந்திருக்கும் ஈஸ்ட்பாயிண்ட் கடைத்தொகுதியில் ஓராண்டுகாலமாக வணிகம் நன்றாகச் சென்றாலும் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அவற்றைச் சமாளித்து, கடையில் வேலைகள் அனைத்தும் சீராக நடப்பதை உறுதிப்படுத்த இவர் ஓய்வின்றி வேலை செய்ய வேண்டியிருந்தது.

“தொடக்கக் காலத்தில், கடை திறப்பதற்குமுன்பு வந்துவிடுவேன், கடை மூடிய பிறகே வீட்டிற்குச் செல்வேன்,” என அவர் குறிப்பிட்டார்.

இவரது உழைப்பு தொழிலை அடுத்த நிலைக்கு உயர்த்தியது.

முன்னணி நிறுவனமான ‘மெட்டா’ சிங்கப்பூர் கிளையின் அலுவலகத்தில் தீபாவளி நிகழ்ச்சிக்காக ‘தி சாய் டப்ரீ’யை உணவு பரிமாற அழைப்பு விடுத்திருந்தது. வந்திருந்த ஏறத்தாழ 300 பேரின் கோரிக்கைக்கு இணங்க, உடனுக்குடன் தேநீர் செய்து பரிமாறினர்.

அந்நிகழ்ச்சியில் உணவு பரிமாறப்பட்டதைக் கவனித்த பிரபல நகை வடிவமைப்பு நிறுவனமான டிஃபனி அண்ட் கோ, தங்களுக்கும் தேநீர் பரிமாற அழைப்பு விடுத்தது.

“டிஃபனி அண்ட் கோவிற்கு நான் தேநீர், வடை, போன்டா போன்ற நமது பாரம்பரிய இந்திய உணவுகளைப் பரிமாறுவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நம்மை அழைப்பதால், இந்தியச் சமூகத்தினரைத் தாண்டி, மற்றச் சமூகங்களும் நம் உணவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது,” என மகிஷா குறிப்பிட்டார்.

இவற்றையெல்லாம் தாண்டி, ஓராண்டுகாலமாக தமது கடை நீடித்திருப்பதிலேயே மிகுந்த பெருமை அடைவதாக இவர் சொன்னார்.

இந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்துவரும் தம் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் மகிஷா நன்றி தெரிவித்துக்கொண்டார்.

விரிவாக்கத்தில் அவசரமில்லை

தீவு முழுதும் தம் தொழிலை விரிவுபடுத்த விரும்பும் மகிஷா, அதை நோக்கி மெதுவாக நகர்கிறார்.

“இந்தத் துறையில் பலர் விரைந்து செயல்பட்டு, குறுகிய காலத்தில் பல கிளைகளைத் திறப்பர். ஆனால், நான் தெளிவான முடிவுகளை எடுக்க விரும்புகிறேன். இந்தக் கடையை நிலைநாட்டிய பின்னரே வேறு கிளைகளைத் திறப்பதில் கவனம் செலுத்துவேன்,” என்று இவர் உறுதியாகக் கூறினார்.

பிறர் அமைத்த பாதையில்தான் செல்லவேண்டுமென்ற அவசியம் இல்லை எனக் கூறும் மகிஷா, மனத்திற்குப் பிடித்தவாறு செயல்படும்படி சொல்கிறார்.

“இன்று, நடைமுறை உலகில் வாழ்வதைவிட சமூக ஊடகங்களிலேயே நாம் அதிகம் வாழ்கிறோம். அதனால், ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். பிறர் கூறும் அறிவுரையை உள்வாங்கி, அதன்படி செயல்படுகிறோம்.

“ஆனால், நாம் என்ன செய்யவேண்டும் என்று நம் ஆழ்மனமே கூறும். நம் எண்ணம்போல் நம் வாழ்க்கையை வாழ வேண்டும்,” என்கிறார் இந்த இளந்தொழில்முனைவர்.

குறிப்புச் சொற்கள்