வர்த்தகமும் புத்தாக்கமும் இருகண்கள்
தொழில்நுட்பத்தில் புத்தாக்கம், தொழில்முனைப்பு இவ்விரண்டும் கண்களெனப் பயணித்து வரும் மாணவி இவர்.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பொறியியல் வடிவமைப்பு, வர்த்தகத் துறையில் பட்டயப் படிப்பில் இவ்வாண்டு உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ள காவ்யா நல்லத்தம்பி, 20, ‘கிரிப் பாக்ஸ்’ எனும் பெட்டியை வடிவமைத்து உள்ளார்.
‘கிரிப் பாக்ஸ்’ எனும் அவரது கண்டுபிடிப்பு விநியோக ஊழியர்கள் கடைகளிலிருந்து உணவைப் பெற்று உரிய இடங்களில் கொண்டு சேர்க்கும் வழியில் உணவு சிந்தி வீணாவதையும் அதனால் ஊழியர்களுக்கு ஏற்படும் இழப்புகளையும் தடுக்கும் நோக்கில் அமைந்த ‘ஸ்மார்ட் ஸ்டோரேஜ்’ பெட்டியாகும்.
இதனை வடிவமைத்ததுடன் உரிய தொழில்துறை நிபுணர்களுடன் இணைந்து உரியவரிடம் இதனைக் கொண்டுசேர்க்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார் காவ்யா.
இவரது தொழில் பயணத்துக்குத் தொடக்கத்திலேயே முட்டுக்கட்டைகள் விழுந்தன. பொதுவாக சிறந்த மாணவியான இவருக்குக் கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட தடைகளினால் கணிதப்பாடத்தில் மதிப்பெண்கள் மிகவும் குறைந்தன.
பொறியியல் படிப்பு மேற்கொள்ளும் விருப்பத்துக்கு அது தடையானது. ஆனால், மதிப்பெண்கள் தமது வாழ்வைத் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது எனும் உறுதியோடு ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பொதுப் பொறியியல் துறையில் சேர்ந்தார்.
முதலாமாண்டு கடின உழைப்பைச் சிந்தி தனது கனவுக்குத் தீனி போடும் பொறியியல் வடிவமைப்பு, வர்த்தகத் துறைக்கு மாறினார். தமது இறுதியாண்டுத் திட்டத்திற்காகப் பொதுவாகக் கவனிக்கப்படாத பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் சிந்திக்கத் தொடங்கினார்.
இதற்காகப் பல விநியோக ஊழியர்களிடம் கலந்துரையாடிய இவர், இருபுறம் திறக்கக்கூடிய, இரு நிலைகள் கொண்ட புதிய வடிவப் பெட்டியை வடிவமைத்துள்ளார். ‘ஜிபிஎஸ்’ கண்காணிப்பு, திறன்பேசி மூலம் திறக்கக்கூடிய வகையில் இப்பெட்டி அமைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இவரது கண்டுபிடிப்பு ‘ஐ-டேர்’ எனும் போட்டியில் இரண்டாமிடமும், ‘பிட்ச் இட் டூ தி வோர்ல்ட்’ எனும் தளத்தில் ‘சேம்பியன்’ பட்டமும் பெற்றுத் தந்துள்ளது.
“தொழில்முனைவோரான எனது தாத்தா, கடற்பொறியியல்துறை இயக்குநரான தந்தை ஆகியோர் தன் மனத்தில் மீள்திறன், ஆர்வம், சேவை ஆகிய மனப்பான்மைகளை விதைத்தனர். இயந்திரவியல் பொறியியல் துறை வல்லுநரான என் தாய் முன்னோக்கிச் சிந்திப்பதற்கும், தொழில்நுட்பத்தை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கும் ஊக்குவித்தார்,” என்றார் காவ்யா.
இவ்விரு மதிப்புகளும் இருந்ததால் தொழில்முனைவோர் ஈடுபாட்டுத் திட்டம், பகுதிநேரப் பணி, வகுப்புகள் எனப் பம்பரமாகச் சுற்றித் தனது சிந்தனைக்கு உயிர்கொடுக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார்.
தமது நிறுவனத்தை வளர்ப்பதுடன், எதிர்காலத்தில் நிதி, உத்திப்பூர்வ நுண்ணறிவை வளர்த்துக்கொள்வதற்காக வணிக நிர்வாகத் துறையில் மேற்படிப்புக்குச் செல்வதை இலக்காகக் கொண்டுள்ளார்.
காற்பந்தாட்டப் பயிற்சியாளராவது ஹரிணியின் இலக்கு
சிங்கப்பூரில் பெண்கள் காற்பந்தாட்டச் சமூகத்தை மேம்படுத்தும் கனவுடன் பயணித்து வருகிறார் மாணவி கே ஹரிணி, 21.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பெண்கள் காற்பந்தாட்ட அணியின் தலைவராக இருந்த இவர், தனது சிறப்பான பங்களிப்பின் மூலம் பல்வேறு போட்டிகளில் அணியை வெற்றிக்கோப்பையை நோக்கிப் பயணிக்க வைத்தவர்.
உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே காற்பந்தாட்டத்தில் துடிப்புடன் ஈடுபட்டு வரும் இவருக்குத் தன்னைப் போன்ற இளம் பெண்களுக்கு இவ்விளையாட்டைக் கற்க வாய்ப்பளிக்கும் ஆர்வம் எழுந்தது. இதனால் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் விளையாட்டுப் பயிற்சித் துறையில் பட்டயக்கல்வியில் சேர்ந்தார் ஹரிணி.
பயிற்சியுடன், விளையாட்டுக்கான உடற்தகுதி உட்பட பலவற்றையும் கற்றுத் தேர்ந்துவரும் இவர் ‘பிரெஞ்சு காற்பந்து அகாடமியில்’ பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.
“அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர நிர்வாகம் ஆகியவற்றின் பலனாக, வகுப்புகள், வாரயிறுதிகளில் 8 மணி நேரம் பகுதிநேரப் பணி, வெளி அணிகளுக்காகக் காற்பந்து விளையாடுதல் என அனைத்திலும் சிறந்து விளங்க முடிந்தது,” என்றார் ஹரிணி.
பட்டயக் கல்வியின்போது தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் ஆறு மாதம் வேலைப் பயிற்சியில் ஈடுபட்ட இவர், தாய்லாந்து அனைத்துலக இளையர் கிண்ணம் எனும் போட்டியைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினார்.
செயிண்ட் ஆண்ட்ரூஸ் அனைத்துலகப் பள்ளி அணியில் 10 முதல் 12 மாணவிகளுக்குப் பயிற்சியளித்து அனைத்துப்பள்ளிப் போட்டிகளில் நான்காமிடம் பெற வழிகாட்டியாகவும் அமைந்தார்.
நான்கு முதல் எட்டு வயதுடைய மாணவர்களுக்குத் தற்போது பயிற்சியளித்து வரும் இவர், பல்வேறு பள்ளி அணிகளுக்கும் பயிற்சியாளராக வேண்டும் எனும் கனவைக் கொண்டுள்ளார்.
பிறர் வலி போக்கும் ஃபஹிமாவின் அரும்பணி
கைவிடப்பட்ட பூனைகள்மீது கனிவு, செவித்திறன் குறைபாடுள்ளோர்க்கான குழுவுடன் பயணம், சுற்றுப்புறத் தூய்மை எனப் பல வகைகளிலும் சமூகத்திற்கு தன்னால் இயன்றதைத் செய்து வருபவர் ஃபஹிமா அப்துல் கரீம், 20. உடல்நலப் பிரச்சினைகள் அழுத்தினாலும் விடாமுயற்சியுடன் கல்வியிலும், சமூகப்பணியிலும் சிறந்து விளங்குகிறார் இவர்.
புற்றுநோய்க்கான மருந்துகள் தொடர்பான ஆய்வுகள்குறித்து உயிரியல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் தமது தந்தை மூலம் அறிந்ததால் அதே துறையில் நுழைய முடிவெடுத்தவர் ஃபஹிமா.
பள்ளியிலும், சமூகத்திலும் தொண்டூழியம் செய்யப் பேரார்வத்துடன் இருந்த அவருக்குப் பெருந்தடையாக வந்தது முதுகுத் தண்டுவடப் பிரச்சினை. அறுவை சிகிச்சை, அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வாசம், வலி, எனப் பல்வேறு காரணங்களினால் வகுப்புகளுக்குச் சரிவரச் செல்ல முடியாமல் போனது.
“என் ஆசிரியர்கள், சக மாணவர்கள், நண்பர்களின் உதவியுடன் தவறவிட்ட வகுப்புகள்குறித்து அறிந்து கொள்வேன்,” என்ற அவர், “தொடர்ந்து வலி இருந்தாலும் வலி சற்றுக் குறைந்தவுடன் படிக்கத் தொடங்கிவிடுவேன்,” என்றார்.
சமூகப்பணி மீதான ஆர்வம் காரணமாக 2021ஆம் ஆண்டிலிருந்து ‘லவ் குச்சிங்’ எனும் நோயுற்ற, கைவிடப்பட்ட பூனைகளைப் பாதுகாக்கும் திட்டத்தில் தொண்டூழியப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.
தனது பூனை நோயுற்றபோது கவனித்துக் கொண்ட அவர், கைவிடப்பட்ட பூனைகளின் நோய்குறித்து பெரிதாக யாரும் அக்கறை கொள்வதில்லை என்பதை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
தொண்டூழியத்தில் முழுவீச்சில் ஈடுபடத் தொடங்கிய அவர் ஆஸ்துமா, சிறுநீரகப் பிரச்சினைகளினால் அவதிப்படும் கைவிடப்பட்ட பூனைகளைக் கவனித்துக் கொண்டார்.
“உரிய கவனிப்பும், மருத்துவ உதவியும் பெற்ற பின்னர் பூனைகள் துள்ளி ஓடுவதைப் பார்ப்பது விருது பெற்றதைப் போன்ற மகிழ்ச்சியைத் தரும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மனிதர்களின் சவால்களும், இயற்கைப் பிரச்சினைகளும் இவரது கவனத்திற்கு வராமல் இல்லை. ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ‘டெஃபைனிங்’ எனும் தன்னார்வக் குழுவின் தலைவரான ஃபஹிமா, ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா, சிங்கப்பூர் செவித்திறன் குறைபாடுள்ளோர் சங்கத்துடன் இணைந்து கடற்கரைத் தூய்மைத் திட்டத்திலும் பங்கேற்றார்.
இவர் பங்காற்றிய குழுவினர் செவித்திறன் குறைபாடுள்ளோரையும், சமூகத்தில் உள்ள பிறரையும் இணைக்கும் நோக்கில் சைகை மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டனர். அனைவரும் இணைந்து கடலில் கலக்க வாய்ப்புள்ள 126 கிலோ குப்பைகளை அகற்றியதாகவும் குறிப்பிட்டார் அவர்.
இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் நோக்கில் கல்லூரியின் சார்பில் உள்ளூரிலும் அனைத்துலக அளவிலும் ‘மாற்றத்தை ஏற்படுத்தும்’ மாணவர்களுக்குத் தரப்படும் சேவைக் கற்றல் விருது வழங்கப்பட்டது.
சமூகப்பணியுடன் ஓர் உயிரியல் தொழில்நுட்ப மாணவராக மக்களிடம் நேர்மறைத்தாக்கம் ஏற்படுத்தும் வகையில் மருந்துக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட விழைகிறார் ஃபஹிமா.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி விளையாட்டு, சுகாதாரத் துறைப் பட்டமளிப்பு
விளையாட்டு, சுகாதாரத் துறை சார்ந்த பட்டயப் படிப்புகளில் பயின்ற ஏறத்தாழ 600 மாணவர்கள் இவ்வாண்டு பட்டம் பெற்றனர்.
அக்கல்லூரியின் 20வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 79 பட்டயப் படிப்புகளைச் சேர்ந்த 4,567 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
அதன் புதிய படிப்புகளான ஆரோக்கியம், உடல்நலப் பயிற்சி, மனிதவளப் பகுப்பாய்வு, தொழில்நுட்பம், கற்றலுக்கான தொழில்நுட்ப வடிவமைப்பு ஆகிய ஓராண்டுப் படிப்பை முடித்த மாணவர்களும் பட்டம் பெற்றுள்ளனர். மேலும் ஏழு மாணவர்கள் கல்வி, இணைப்பாட நடவடிக்கைகளுக்கான சிறப்பு விருதுகளையும் பெற்றனர்.