நாட்டுப்பற்றை மெல்ல வளர்க்கும் சமூகத் தொண்டு

நாட்டுப்பற்றை மெல்ல வளர்க்கும் சமூகத் தொண்டு

3 mins read
e751b7fe-7af9-42ae-a023-63d4f9d55e9f
சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு ஜூலை 8ல் நடத்தப்பட்ட ‘இளைய தலைமுறை’ தள வலையொளிக் கலந்துரையாடலில் தொண்டூழியம் ஆற்றும் இளையர்கள் பங்கேற்றனர். - படம்: காமாட்சி சந்திரசேகர்

சிங்கப்பூரின் இளம் சமூக மாற்றத்தைப் பற்றிக் கனவு காண்பதோடு நின்றுவிடாமல் இளையர்கள் களத்தில் இறங்கிச் செயல்படுகின்றனர். அவ்வாறு தொண்டாற்றுவதால் ஏற்படும் மனநிறைவு ஈடு இணையற்றது என அவர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் வளர்ந்து, சவால்களைக் கடந்து, சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வரும் இளையர்கள் மூவர், தமிழ் முரசின் இளைய தலைமுறை கடந்த புதன்கிழமை (ஜூலை 8) நடத்திய வலையொளிக் கலந்துரையாடலில் நாட்டைப் பற்றிய கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் ஒருவரோடு ஒருவர் பரிமாறினர்.

சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு தங்களது ஊக்கமளிக்கும் பயணத்தையும் அவர்கள் தாய்நாட்டின் மீது கொண்டுள்ள பார்வையைப் பற்றியும் பகிர்ந்தனர்.

சிங்கப்பூரின் கொள்கை ஆய்வுக் கழகம் (Institute of Policy Studies - IPS) நடத்திய ‘எஸ். ஆர். நாதன் பெல்லோஷிப்’ இளம் தலைவர்கள் கருத்தரங்கில்  நிஷாந்த்  உரையாற்றுகிறார்.
சிங்கப்பூரின் கொள்கை ஆய்வுக் கழகம் (Institute of Policy Studies - IPS) நடத்திய ‘எஸ். ஆர். நாதன் பெல்லோஷிப்’ இளம் தலைவர்கள் கருத்தரங்கில் நிஷாந்த் உரையாற்றுகிறார். - படம்: சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் கொள்கை ஆய்வு நிலையம்

21 வயதான துரை மாணிக்கம் நிஷாந்த் சமூகத்தில் நல்லிணக்கத்திற்குக் குரல்கொடுத்து வருகிறார். அண்மையில் ‘ஹே‌ஷ்பீஸ்’ என்ற அமைப்பில் இணைந்து நல்லிணக்கத் தூதுவராகச் செயல்படுகிறார்.

இளையர் மாநாடுகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்கும் இவர், நடப்பு விவகாரங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்.

இவரைப் போல 24 வயது ஹரிணி பார்த்திபன், இந்நாட்டின் நல்லிணக்கத்திற்கு இயன்றவரை பங்காற்றி வருகிறார்.

‘வீ ஃபர்ஸ்ட்: ஹார்மனி ஹப்’ என்ற அமைப்பில் ஹரிணி, தம் குடும்பத்தினருடன் செயலாற்றி வருகிறார்.

தன் குடும்பத்துடன் தொண்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார் ஹரிணி
தன் குடும்பத்துடன் தொண்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார் ஹரிணி - படம் : ஹரிணி பார்த்திபன்

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் தலைமுறையினருக்கிடையே பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி ஒரு மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவிருக்கிறது.

மூன்று ஆண்டுகள் தேசிய தின அனிவகுப்பில் நடனமாடியுள்ளார் ரக்‌ஷனா 
மூன்று ஆண்டுகள் தேசிய தின அனிவகுப்பில் நடனமாடியுள்ளார் ரக்‌ஷனா  - படம்: ரக்‌ஷனா பாண்டியன்

சிண்டாவில் தொண்டாற்றும் 21 வயதான ரக்‌ஷனா பாண்டியன், பண்டிகைக் காலங்களில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி சமூகச் சேவையாற்றி வருகிறார்.

வெவ்வேறு பாதைகளில் செல்லும் இம்மூவர், பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களது அனுபவக் கதைகளைக் கேட்டுப் பயனடைந்தனர்.

பல்லினச் சமுதாயத்தில் வளர்ந்து, பல இன மொழி சமயங்களைப் பற்றி இள வயதிலிருந்தே கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பைச் சிங்கப்பூர் வழங்கியதைப் பெருமிதத்துடன் கூறினார் ரக்‌ஷனா.

சிங்கப்பூரர் என்ற அடையாளம், பல இனத்தவர்களையும் மதித்து ஒற்றுமையுடன் வாழும் பொன்னான பண்பை விதைக்கும் என்று அவர் நம்புகிறார்.

“ஒரு சிங்கப்பூரராக, நாம் மற்றவர்களுடைய கதையின்படி வாழ்வதில்லை; மாறாக, நமக்கான சொந்தக் கதையை நாமே உருவாக்குகிறோம். ‘இந்த நாட்டில் என்ன இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பியோர் இன்று நம் முன்னேற்றத்தைக் கண்டு அண்ணாந்து பார்க்கிறார்கள்,” என்று நிஷாந்த் கூறினார்.

சவால்கள் படிக்கற்களே

தொண்டூழியத்தின்போது பிறர்க்கு உதவிக்கரம் நீட்ட முற்பட்டாலும் எல்லோரும் அதனைச் சரியாகப் புரிந்துகொள்வதில்லை என்று ஹரிணி கலந்துரையாடலில் பகிர்ந்தார்.

“நெருக்கடியான நேரங்களில் பல்வேறு பொறுப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்ததால் மன உளைச்சலில் தவித்திருந்தேன்,” என்று கூறினார்.

இந்நிலை தமக்கும் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய நிஷாந்த், சில நேரங்களில் இழிவான பேச்சுகளுக்கு ஆளாவதாகவும் கூறினார்.

“சந்தேகத்தின்பேரில் நம்மீது வீசப்படும் சுடுசொற்கள் பேரளவில் நம்மைப் புண்படுத்தக்கூடும். இருப்பினும் நம்மை ஊக்குவிப்பதற்கும் பலர் இருக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது,” என்றார் நிஷாந்த்.

“பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளின் கனவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை. அந்நிலையில் பிள்ளைகளே அவர்களுடன் கலந்துரையாடி பொறுப்புகளை முறையே சுமக்கும் தன்மை தமக்கு இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறார் ரக்‌ஷனா.

பொருளியல் உயர்வுடன் மக்களிடையே இருக்கும் ஒற்றுமை குன்றாமலும் சிங்கப்பூர் முன்னேற்றம் காண வேண்டும் என்று ஹரிணி விரும்புகிறார்.

“மனிதர்களுடன் உணர்வு வழியாக இணைக்கும் தொண்டூழியம், சிங்கப்பூரை எங்களுடன் மேலும் இணைக்கிறது,” என்றார் ஹரிணி.

“இளையர்கள் தங்களின் வசதியான சூழலைத் தாண்டி வெளியே வந்து, நாட்டின் சமூகத் தேவைகளுக்காகத் தங்களின் பங்களிப்பைத் துடிப்புடன் வழங்குவதற்கு முன்வரத் தூண்டும் சமுதாயதமாக இந்நாடு வளரவேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் ரக்‌ஷனா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்