சிங்கப்பூரின் பரபரப்பான சட்டத்துறையில் பணியாற்றி வரும் 28 வயது ஸ்ரேஷ்யா காமாக்ஷி விஸ்வநாதன், தனது வசீகரமான குரலால் இசைத் துறையிலும் தமக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.
பிரபலமான தேசிய தினப் பாடலான ‘ஹோம்’ ஆங்கிலப் பாடலை நான்கு அதிகாரபூர்வ மொழிகளிலும் பாடிய ‘நியூ ரெக்கார்டிங் 47’ (New Recording 47) அக்கபெல்லா பாடல் குழுவினர், அண்மையில் அதனைக் காணொளியாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அக்குழுவின் உறுப்பினரான ஸ்ரேஷ்யா, அதில் தமிழ்ப் பகுதிகளைச் சிறப்பாகப் பாடி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இசையோடு இணைந்த பயணம்
வீட்டில் அவரது பெற்றோர் பாடுவதைக் கேட்டு வளர்ந்த ஸ்ரேஷ்யாவிற்குச் சிறு வயதிலிருந்தே பாடல்கள்மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
“என் பெற்றோர் பாடுவதைக் கேட்டு வளர்ந்ததால் எனக்கு இசையின்மீது இயல்பாகவே ஆர்வம் உண்டானது. பாடுவதும், சொந்தமாகப் பாடல்களை உருவாக்குவதும் எனக்குப் பிடிக்கும்,” என்றார் ஸ்ரேஷ்யா.
கீபோர்டு, பியானோ போன்ற இசைக்கருவிகளை முறையாகக் கற்றுக்கொண்ட அவர், பள்ளிக்காலம் முதல் தொடக்கக் கல்லூரி வரை அக்கருவிகளை வாசிப்பதிலும் வாய்ப்பாட்டுக் குழுவிலும் கலைநிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
மேடையில் பாடுவது அவருக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவே பாடல் எழுதுவதைக் கருதும் இவர், தனது 23வது வயதில் ‘பேப்’ என்ற முதல் சொந்தப் பாடலைத் தயாரித்து ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிட்டார்.
அக்கபெல்லா கலைமீது ஈர்ப்பு
பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அக்கபெல்லா குழுவில் இணைந்த ஸ்ரேஷ்யாவிற்கு, எவ்வித வாத்தியக் கருவியும் இன்றிப் பல மனிதக் குரல்கள் இணைந்து உருவாக்கும் இசையின்மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டது.
2021ஆம் ஆண்டின் இறுதியில் ‘நியூ ரெக்கார்டிங் 47’ என்ற இசைக்குழுவில் குரல்தெரிவு வழியாக இவர் இணைந்தார். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவினர் ஆங்கிலப் ‘பாப்’ பாடல்கள் மட்டுமன்றிப் பல்வேறு மொழிகளிலும் புதுமையான இசையை வழங்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு எஸ்பிளனேடில் நடைபெற்ற ‘ரெட் டாட் ஆகஸ்ட்’ (Red Dot August) நிகழ்ச்சியில் இவர்கள் பாடிய ‘ஹோம்’ தேசிய தினப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
குறிப்பாக, ஸ்ரேஷ்யா பாடிய தமிழ் வரிகளுக்குப் பாராட்டுகள் குவியவே, அத்தகு பேராதரவே இப்பாடலை ஒரு சிறப்புக் காணொளியாகப் பதிவு செய்து வெளியிடுவதற்கான முக்கியத் தூண்டுகோலாக அமைந்ததாக அவர் கூறினார்.
தாய்மொழிப் பற்று
ஸ்ரேஷ்யாவின் குடும்பப் பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும், அவரது பெற்றோர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்கள். இதனால், அவர்கள் வீட்டில் பேசும் தமிழ் மொழியில் இயல்பாகவே மலையாளச் சொற்களும் கலந்திருக்கும் என்றார் அவர்.
சிங்கப்பூர்ப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் முறையான தமிழ் வகுப்புகளுக்குத் தங்களால் கல்வி ரீதியாகப் பாட உதவி செய்ய இயலாது என்ற நடைமுறைச் சூழலைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் அவரை இந்தி வகுப்பில் சேர்த்தனர். 11 ஆண்டுகள் பள்ளியில் இந்தியை இரண்டாம் மொழியாகப் பயின்றபோதிலும், தாய்மொழியின் மீதான பற்றால் வீட்டில் தொடர்ந்து தமிழிலேயே பேசி, மொழியை அவர் மிகச் சிறப்பாகத் தக்கவைத்துக் கொண்டார்.
இந்த ‘ஹோம்’ பாடலின் தமிழ் உருவாக்கத்திற்குப் பின்னால் இவரது கடுமையான உழைப்பு அடங்கியுள்ளது. பாடலின் தாளத்திற்கும் மெட்டுக்கும் ஏற்ப தமிழ் வரிகளைச் சரியாக மொழிபெயர்ப்பது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. இதற்கு அவரது தோழி தேவிகா பணிக்கர் பெரிதும் உதவினார்.
தமிழுக்கே உரித்தான சிறப்பு எழுத்துகளையும் உச்சரிப்புகளையும் சரியாகப் பாடிவிட வேண்டும் என்பதில் ஸ்ரேஷ்யா மிகவும் உறுதியாக இருந்தார். இதற்காகப் பல வாரங்கள் தொடர்ந்து பயிற்சி செய்தார். “எனது உச்சரிப்பில் ஏதேனும் பிழை உள்ளதா என்பதை என் அப்பாவிடம் அடிக்கடி கேட்டுச் சரிசெய்துகொண்டேன்,” என்றார் அவர்.
அவரது இந்த விடாமுயற்சி வீண்போகவில்லை. இந்த அக்கபெல்லா காணொளியில் அவர் பாடிய தமிழ்ப் பகுதிக்கு இணையத்தில் பேராதரவு கிடைத்துள்ளது.
“இப்பாடலைக் கேட்ட சிங்கப்பூர்த் தமிழர்கள் பலரும், தங்கள் தாய்மொழியில் ‘ஹோம்’ பாடலைக் கேட்பது மிகுந்த நெகிழ்ச்சியைத் தருவதாகக் கூறிப் பாராட்டினர். எனக்கும் எனது தாய்மொழியில் இப்பாடலைப் பாடும் வாய்ப்புக் கிடைத்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பணிக்கு நடுவே கலைப் பயணம்
வழக்கறிஞர் பணி என்பது நீண்ட வேலை நேரத்தைக் கொண்டது என்றாலும், இசையின் மீதான அளவற்ற காதலால் அதற்கான நேரத்தை அவர் தவறாமல் ஒதுக்கி விடுகிறார். இவரது இசை ஆர்வத்திற்கு அலுவலக மேலதிகாரிகளும் முழு ஆதரவு தருகின்றனர்.
இசையில்தான் முழுமையான அர்த்தத்தைத் தான் காண்பதாகக் கூறும் இவர், நண்பர்களுடன் இணைந்து புதுமையான இசையை உருவாக்கும்போது வேறோர் உலகில் நுழைவதுபோல் உணர்வதாகக் குறிப்பிட்டார்.
2023ஆம் ஆண்டு வியட்னாமில் நடந்த இருதரப்பு உறவுகள் சார்ந்த நிகழ்ச்சியில் சைகோன் ஓப்பரா ஹவுஸில் பாடியதும் 2024 டிசம்பரில் சிங்கப்பூரின் புகழ்பெற்ற உள்ளூர்க் கலைஞர் பெஞ்சமின் கெங்குடன் இணைந்து இசை நிகழ்ச்சியில் பாடல்கள் படைத்ததும் தனது கலைப் பயணத்தில் மறக்க முடியாத தருணங்களாக அவர் கருதுகிறார்.
சிங்கப்பூரின் கலைச் சூழல் குறித்துப் பேசிய ஸ்ரேஷ்யா, உள்ளூர் இளங் கலைஞர்களுக்குச் சிங்கப்பூர் அளித்து வரும் ஆதரவையும் மேடைகளையும் பெரிதும் பாராட்டுகிறார்.
“பாதுகாப்பும் தூய்மையுமே சிங்கப்பூரின் மிகச் சிறந்த அடையாளங்கள். சிங்கப்பூர் என் வீடு என்று சொல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்,” என்றார் ஸ்ரேஷ்யா.
‘ஹோம்’ பாடலுக்குத் தமிழ் வடிவம் கொடுத்த இந்த இளம் கலைஞர், வருங்காலத்தில் அந்த முழுப் பாடலையும் தமிழில் வெளியிடும் எண்ணம் இருப்பதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


