தனது குடும்ப மரபு சிங்கப்பூரின் பிரதிபலிப்பு எனக் கருதும் 28 வயது ரஸ்தம் ஷாரிக் முஜ்தபா, தனது குடும்ப வேர்களைக் கண்டறிய மரபுடைமைத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
அவரது தந்தைவழித் தாத்தா வட இந்தியாவை சேர்ந்தவர். தந்தைவழிப் பாட்டி சீனாவிலிருந்து வந்தவர். ரஸ்தமின் தாய்வழிப் பாட்டி மலாக்காவைச் சேர்ந்தவர்.
தாய்வழி தாத்தா சிங்கப்பூரராக இருந்தாலும் அவர் எந்த இடத்தில் வளர்ந்து வந்தார் என்ற தகவல் ரஸ்தமுக்குத் தெரியாமல் இருந்தது.
இதை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் தரவு ஆய்வாளராகப் பணியாற்றி வரும் ரஸ்தம், மூலங்களைத் தேடிப் பயணிக்கத் தொடங்கினார்.
தூரத்து உறவினர்கள் மூலம் ரஸ்தம் தனது தாய்வழி தாத்தா சிலேத்தாரில் இருக்கும் ‘கம்போங் போஸ்’ எனும் கம்பத்திலிருந்து வந்தவர் என்று அறிந்துகொண்டார்.
அங்கு வசித்து வந்த குடியிருப்பாளர்கள் பின்னர் டோங்காங் பச்சா எனும் கம்பத்துக்கு இடமாறியதாகவும் அந்த இடம் தற்போது செங்காங்கில் இருக்கும் ஃபெர்ன்வேல் குடியிருப்புப் பேட்டை என்றும் ரஸ்தமின் ஆய்வு மூலம் அறியப்படுகிறது.
சுங்கை பொங்கோலில் காணப்பட்ட உடைந்த கப்பலின் பெயரால் அந்தக் கிராமம் பெயரிடப்பட்டதாக நம்பும் ரஸ்தம், அதை மையமாக வைத்துத் தனது மரபுடைமைத் திட்டத்துக்கு ‘புராஜெக்ட் புரோக்கன் பர்ஜஸ்’ என்று பெயரிட்டுள்ளார்.
டோங்காங் பச்சா கம்பத்தை பற்றி அறிந்துகொள்ள அப்பகுதியில் முன்னர் குடியிருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கதைகளைக் கேட்டு, 2023ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை ரஸ்தமும் அவருடன் திட்டத்துக்கு உதவி வரும் தொண்டூழியர்களும் இயோ சூ காங், சிலேத்தார் ஹில்ஸ், ஜாலான் காயு ஆகிய இடங்களை மையமாக வைத்து பத்துக் கதைகளை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
வீவக வீட்டில் வளர்ந்து வந்த ரஸ்தம் சிங்கப்பூரில் அதுதான் வழக்கம் என்று நினைத்தார். “என் தாயார் கம்பத்து வாழ்க்கை பற்றி என்னிடம் பல கதைகளைச் சொல்வார். அதைக் காதால் கேட்டபோதும், அந்த அனுபவத்தை நேரடியாக உணர வேண்டும்,” என்றார் ரஸ்தம்.
பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரின் கம்பத்து வாழ்க்கை கதைகளைக் கேட்டு வந்த ரஸ்தமுக்கு அந்தக் கதைகளை ஆவணப்படுத்த வேண்டுமென்ற ஆசை பிறந்தது.
“வேகமாக நகர்ந்து செல்லும் இந்தக் காலகட்டத்தில் இத்தகைய கதைகள் எளிதில் மறந்துவிடக்கூடும்,” என்று ரஸ்தம் கூறினார்.
இதில் முன் அனுபவம் இல்லாத ரஸ்தமுக்கு சவால்கள் எழத்தான் செய்தன. சமூகத்தைச் சென்றடைவது, ஆராய்ச்சிக்குத் தேவையான வளங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஹம்சா முசைனி, ரஸ்தமுக்கு வழிகாட்டி வருகிறார். தேசிய மரபுடைமைக் கழகம், தேசிய இளையர் மன்றத்தோடு இணைந்து ரஸ்தமின் திட்டத்துக்கு மானியம் வழங்கி உள்ளது.
மானியத்தின் ஒரு பகுதி ஏப்ரல் 26ஆம் தேதியன்று ஃபெர்ன்வேல் சமூக மன்றத்தில் ரஸ்தம் நடத்தும் சமூக மரபுடைமை குறித்த குழுக் கலந்துரையாடலை ஆதரிக்கும்.
“எவருக்கும் டோங்காங் பச்சா கம்பம் பற்றித் தெரியாது. ஆனால் என் திட்டம் மூலம் பலருக்கு அதன் வரலாறு சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்றார் ரஸ்தம்.
டோங்காங் பச்சா கம்பம் பற்றிய கதைகளை ரஸ்தமிடம் பகிர்ந்துகொள்ள அவரை kgtongkangpechah2024@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.

