இளையர்கள் பலர் வாழ்க்கைத் தொழிலைத் தனித்துவமான வகைகளில் தேர்ந்தெடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் பி கிஷன்.
விளையாட்டுகளுக்குச் சிங்கப்பூரில் இப்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தாலும் அதை ஒரு முழு நேரத் தொழிலாகப் பார்க்கப் பலரும் இன்னும் தயங்குகின்றனர்.
ஆனால் 29 வயதாகும் கிஷன் இளம் வயதிலேயே மோட்டார் வண்டிப் பந்தயத்தைத் தனது வாழ்க்கைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்த துணிச்சல்காரர்.
மோட்டார் வாகனப் பந்தயத்தில் பல வகைகள் உண்டு. கிஷன் விறுவிறுப்புடன் ஈடுபடுவது ‘டுவேரிங் கார்’ பந்தயத்தில்.
இது எஃப்1 கார் பந்தயத்திலிருந்து மாறுபட்டது. ‘டுவேரிங் கார்’ பந்தயம் சிறிய தடத்தில் இடம்பெறும்.
எஃப்1 காரைவிட அது எடையில் அதிகமாக இருந்தாலும் இந்த கார்கள் மிக நெருக்கமாகக் கிட்டத்தட்ட ஒன்றுக்கொன்று தொட்டுக்கொள்ளும் அளவுக்குத் தடத்தில் பயணம் செய்வதைக் காணலாம்.
கிஷன் 14 வயதுச் சிறுவனாக இருந்தபோது குடும்பத்தோடு தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு எதேச்சையாக அவர் கார் பந்தயத்தில் கலந்துகொண்டார். ஆனால் அதில் வெற்றி கிட்டும் என்று கிஷன் எதிர்பார்க்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“அந்த இடத்தின் உரிமையாளர் என் பெற்றோரிடம் நான் கார் பந்தயத்தில் தொழில்முறையாக ஈடுபடலாம் என்று பரிந்துரைத்தார். என் பெற்றோர் அதற்குச் செவிமடுத்தனர்,” என்றார் கிஷன்.
கிஷனுக்கு அப்போதே கார் பந்தயம் மீது ஆர்வம் தலைதூக்கத் தொடங்கியது.
இன்று அவரின் அறையெங்கும் வெற்றிக் கோப்பைகள், கார் மாதிரிகள் போன்றவை நிறைந்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற சிங்கப்பூர் ‘டுவேரிங் கார்’ பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் கிஷன்.
சிங்கப்பூரில் கார் பந்தயத்தில் ஈடுபடுவதை வாழ்க்கைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்த ஒரே இந்தியர் தான்மட்டுமே என்று நம்பும் கிஷன், இதர இந்தியர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்க விரும்புகிறார்.
“12 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூர் மீண்டும் அந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது. சிங்கப்பூரில் பலர் இதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதால் இந்தப் போட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடந்தேறியது,” என்றார் கிஷன்.
16 வயதாக இருந்தபோது தொழில்முறைப் பந்தயத்தைத் தொடங்கிய கிஷன், 2021ல் சிங்கப்பூர் கார் பந்தயத்தில் வெற்றி கண்டார். மலேசியாவில் பந்தயங்களில் கலந்துகொள்ள அவருக்கு ஆதரவு அளிக்கப்பட்டது.
கார் பந்தயத்தில் சகிப்புத்தன்மையும், நேரத்தை நன்கு வகுக்கும் திறனும் முக்கிய அங்கங்களாக உள்ளன.
16 வயதில் தொடங்கியபோது கிஷனுக்கு ‘ஓ’ நிலைத் தேர்வுகள் இருந்தன.
“தேர்வு நேரத்தில் நான் இதில் ஈடுபடத் தொடங்கியது பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது என் வெற்றியைக் கண்டு அவர்கள் பக்கபலமாக இருக்கத் தொடங்கியுள்ளனர்,” என்று கிஷன் கூறினார்.
பந்தயத்துக்குப் பயிற்சி மேற்கொள்ள கிஷன் வீட்டில் பாவனைக் கருவி வைத்துள்ளார்.
மேலும், இதில் திறம்பட விளங்க உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதால் கிஷன் உடற்பயிற்சிக்கும் முன்னுரிமை தருகிறார்.
தனக்குப் பிடித்த பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன் என்று கூறிய கிஷன், கிராஞ்சியில் உள்ள பந்தயத் தடம் அல்லது மலேசியாவுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்கிறார்.
இதில் ஈடுபட ஆர்வமுள்ள இளையர்கள் இதற்குச் செலவு செய்யத் தயாராக இருக்க வேண்டுமென்று அவர் சொன்னார்.
பகுதிநேர வேலை பார்த்து அதிலிருந்து சேமித்த கிட்டத்தட்ட 15,000 வெள்ளியைச் செலவு செய்துள்ள கிஷன், கார்களின் ‘டயர்’ மாற்றுவதற்கும் காரைப் பழுது பார்ப்பதற்கும் செலவு அதிகமாகும் என்றார்.
விளையாட்டை ஒருவர் வாழ்க்கைத் தொழிலாக்க முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறார் கிஷன். எதிர்காலத்தில் ஐரோப்பியப் பந்தயத்தில் கலந்துகொள்வது இவரது கனவு.
தனக்குப் பிடித்த பந்தயத் தடம் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருப்பதாகச் சொன்ன அவர், இதைத் தவிர்த்து வேறெந்தப் பணியிலும் தம்மால் ஈடுபட முடியாது என்றார்.
இதற்கு அப்பாற்பட்டு சுய தொழில் செய்துவரும் கிஷன், கார் வர்த்தகத்திலும் கார்களைச் சீர்படுத்தும் தொழிலிலும் ஈடுபடுகிறார்.