ஏஐ துணையுடன் தமிழ் வளர்ச்சி; இளையரின் பெருமுயற்சி

ஏஐ துணையுடன் தமிழ் வளர்ச்சி; இளையரின் பெருமுயற்சி

படம்: கணேஷ் ஹரிஹரசுதன்

05 Oct 2026 - 5:30 am

2 mins read

சிங்கப்பூரில் தமிழ்மொழியின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள மான்ட்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளி மாணவரான 16 வயது கணேஷ் ஹரிஹரசுதன் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுத் தளம் அண்மையில் கூடுதல் அங்கீகாரம் பெற்றுள்ளது.

அவர் இவ்வாண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்திய ‘ஹரி தமிழ் நிலா’ (Hari Tamil Neural Intelligence Language Assistant) தளம், செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் மாநாட்டில் குறிப்பிடப்பட்டது.

மாநாட்டில் பேசிய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதாரத் துணை அமைச்சரும் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தலைவருமான திரு டான் கியட் ஹாவ், மொழிபெயர்ப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து உரையாற்றியபோது ஹரிஹரசுதனின் முயற்சியையும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் மரபுடைமைத் தளங்கள் தொடர்பான தகவல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, அவற்றைத் தமிழ் நிலா தளத்தில் இணைத்துள்ள ஹரியின் பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

ஜூன் மாதத்தில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் தலைமையகத்தில் ஹரிஹரசுதன் ‘ஹரி தமிழ் நிலா’ பற்றிப் பகிர்ந்திருந்தார். 

அப்போது சிங்கப்பூரின் நினைவுச் சின்னங்கள், மரபுடைமைத் தளங்கள் தொடர்பான தகவல்களை உள்ளூர் மொழிச் சூழலுக்கு ஏற்றவாறு தமிழில் வழங்குவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. 

“செயற்கை நுண்ணறிவும் தொழில்நுட்பமும் இன்று நாம் கற்கும், வேலை செய்யும், தொடர்புகொள்ளும் முறைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த மாற்றத்துக்கு ஏற்ப மொழிகளைக் கற்கும் முறைகளும் வளர்ச்சியடைய வேண்டும் என நம்புகிறேன்,” என்றார் ஹரிஹரசுதன்.

உயர்நிலைப் பள்ளியில் கீழ்நிலை வகுப்புகளில் பயின்றபோது, பேச்சுப் போட்டி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த தமிழ்ப் போட்டி போன்றவற்றில் பங்கேற்ற ஹரிஹரசுதனுக்கு அவை தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்பளித்தன.

அதன் தொடர்ச்சியாக, தமிழ் நிலா தளத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கிய அவர், அதற்காக ஏறத்தாழ ஈராண்டுகள் உழைத்தார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இத்தளம், தற்போது கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் 50 பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 3,000 பயனர்களைச் சென்றடைந்துள்ளது.

“மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, மக்கள் தமிழைக் கற்கவும், அதனுடன் தொடர்புகொள்ளவும், மொழியைப் புதிய வழிகளில் அனுபவிக்கவும் வாய்ப்புகளை உருவாக்குவதே என் குறிக்கோள்,” என்றார் இந்த நம்பிக்கைமிகு இளையர்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுமாணவன்மொழிபெயர்ப்பு