எஸ்ஜி பாதுகாப்பிற்கு மாணவர் ஆதரவுவழி உதவும் இளையர்கள்

எஸ்ஜி பாதுகாப்பிற்கு மாணவர் ஆதரவுவழி உதவும் இளையர்கள்

படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி

21 Sep 2026 - 6:00 am

2 mins read

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மனிதவளம், உளவியல் துறையில் பயின்றுவரும் இரண்டாம் ஆண்டு மாணவிகளான தனிஷா கவுர் ஹர்பான் சிங்கும் மஹிமா ரெட்டியும் நெருக்கடி காலங்களில் சக மாணவர்களுக்கு உதவும் திறன்களைக் கற்றறிந்தனர்.

சிங்கப்பூர்க் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் ஜூன் மாதம் அந்தக் கல்வி நிலையத்தில் இணைந்து நடத்திய நெருக்கடிகாலப் பயிற்சியில் இவ்விருவரும் பங்கேற்றனர்.

பலதுறைத் தொழிற்கல்லூரி நூலகத்தில் சந்தேகப்படும்படியான ஒருவர் கறுப்பு நிற ஆடை அணிந்துகொண்டு அங்கும் இங்கும் நடந்த வகையில் பயிற்சி தொடங்கியது.

பின்னர், அவர் நூலகத்தின் நாற்காலிகளைத் தட்டி ஓசை எழுப்பியதால் பாதுகாவல் அதிகாரிகள் அவரை நூலகத்திலிருந்து வெளியேற்ற முயன்றனர்.

அப்போது, தலைமையாசிரியரைப் பார்க்க வேண்டுமெனக் கோபத்துடன் கத்திய அந்த ஆடவர், பிறகு பாதுகாவலர் ஒருவரைக் கத்தியால் குத்தும் வகையில் பயிற்சி அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, அந்த ஆடவர் துப்பாக்கியால் மாணவர்களை நோக்கிச் சுடத் தொடங்கியதும் மற்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் வேறு திசையில் தாம் ஓட வேண்டி இருந்ததாக மாணவியர் இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

“அத்தகைய சூழலை நான் இதற்குமுன் எதிர்கொண்டதில்லை. முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக அது அமைந்தது,” என்று பலதுறைத் தொழிற்கல்லூரியின் மாணவர் ஆதரவுக் குழுத் தலைவருமான தனிஷா கூறினார்.

நெருக்கடி காலங்களில் நிதானமாக இருப்பதன் அவசியத்தைப் பயிற்சியின்வழி உணர்ந்ததாகக் கூறினார் தனிஷா கவுர் ஹர்பான் சிங்.
நெருக்கடி காலங்களில் நிதானமாக இருப்பதன் அவசியத்தைப் பயிற்சியின்வழி உணர்ந்ததாகக் கூறினார் தனிஷா கவுர் ஹர்பான் சிங். - படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி

மாணவர்களுக்கு முறையான ஆதரவு வழங்க தாம் அத்தகைய சூழல்களில் நிதானமாகச் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டதாகவும் அவர் சொன்னார்.

முதலுதவியில் தேர்ச்சி பெற்ற மஹிமாவிற்கு இதுவரை தமது திறன்களைப் பயன்படுத்தும் தேவை ஏற்படவில்லையெனினும் இத்தகைய சம்பவங்களின்போது உதவி வழங்க அவர் தயாராக உள்ளார்.

“பயிற்சிச் சூழலுக்கும் உண்மையான நெருக்கடி காலங்களுக்கும் நிச்சயம் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கும். இருப்பினும், அத்தகைய நிலைமைகளிலும் என்னால் என் சக மாணவர்களுக்கும் சமூகத்தினருக்கும் உதவ முடியுமென நம்புகிறேன்,” என்றார் அவர்.

முதலுதவியில் தேர்ச்சிபெற்ற மஹிமா ரெட்டி நெருக்கடி காலங்களில் அத்திறன் தமக்கு பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறார்.
முதலுதவியில் தேர்ச்சிபெற்ற மஹிமா ரெட்டி நெருக்கடி காலங்களில் அத்திறன் தமக்கு பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறார். - படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி

நெருக்கடி காலங்களில் அச்சம் ஏற்படுவது இயல்பாக இருந்தாலும் அவ்வேளையில் தங்களைக் காத்துக்கொள்வதோடு பிறரையும் பாதுகாக்க வேண்டும் என்பதே இவர்களின் நிலைப்பாடு.

அந்த மனநிலையை அடைய தங்களது கல்வி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி தங்களுக்கு உதவியாக இருந்ததென இருவரும் குறிப்பிட்டனர்.

எஸ்ஜி பாதுகாப்புத் திட்டத்திற்குப் பங்களிக்க விரும்பும் இளையர்கள் எஸ்ஜி பாதுகாப்புத் தூதர்கள் திட்டம் (SGSecure Advocates Programme), நெருக்கடியான சூழல்களில் உதவும் திறன்களை வளர்த்துக்கொள்ளுதல், எஸ்ஜி பாதுகாப்பு அவசர உதவியாளராகப் பதிவுசெய்தல், மக்கள் கழகத்தின் சமூக அவசரகாலச் செயற்குழுக்களுடன் தொண்டூழியம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடலாம் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், எஸ்ஜி பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்கள் கழகத்தின் சமூக அவசர உதவி வட்டமேசை (CRRT), கலாசார, சமூக, இளையர் அமைச்சின் சமய அமைப்புகளுக்கான அவசரகாலத் தயார்நிலைத் திட்டம் (CPRO) போன்ற தளங்களில் பங்கேற்பதன்மூலம் சமய, சமூக அமைப்புகளால் பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற நெருக்கடிகளைச் எதிர்கொள்வதற்கான ஆயத்தநிலையை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
மாணவர்பயிற்சிநெருக்கடி