குறும்படங்களாக மலர்ந்த உள்ளூர்ச் சிறுகதைகள்

குறும்படங்களாக மலர்ந்த உள்ளூர்ச் சிறுகதைகள்

1 of 2
படம்: தாஷாயனி சுகேந்திரன்
படம்: தாஷாயனி சுகேந்திரன்

23 Nov 2026 - 6:00 am

2 mins read

இளையர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, உள்ளூர்த் தமிழ் இலக்கியத்தைத் திரையிலும் மலரச் செய்யும் நோக்குடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் இளையர் பிரிவு ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு, ‘இயக்குநர் பார்வை: திரைப்படமாகும் உள்ளூர்ப் படைப்புகள்’ என்ற அந்த நிகழ்ச்சி நவம்பர் 15ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடந்தது.

நிக‌ழ்ச்சியின் முத்தாய்ப்பாக, சிங்கப்பூர் எழுத்தாளரின் இரு சிறுகதைகளைத் தழுவி இளையர்கள் உருவாக்கிய இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டன. 

அவற்றில் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து, எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் பங்கேற்ற கலந்துரையாடலும் நடைபெற்றது.

“சிங்கப்பூரில் தரமான சிறுகதைகள் எழுதப்படுகின்றன. மறுபுறம் இளையர்கள் குறும்படங்களை இயக்குவதில் ஆர்வமாக உள்ளனர். இவ்விரு தளங்களையும் இணைக்கும் பாலமாகவே இந்நிகழ்ச்சியை நடத்தினோம். எழுத்தாளர்களின் வழிகாட்டுதலோடு ஒரு மாத காலத்திற்குள் இளையர்கள் இப்படங்களைத் தயாரித்தனர்,” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சாய் பாலாஜி கூறினார்.

“குறும்படமோ அல்லது சமூக ஊடகக் காணொளியோ, எதனை எடுத்தாலும் வலுவான உள்ளடக்கத்தை எழுத்தாளர்களால்தான் வழங்க முடியும். அடுத்த தலைமுறையிடம் தங்கள் கருத்துகளைக் கொண்டுசெல்ல வாசிப்பும் எழுத்தும் மிக அவசியம்,” என அதிபதி பன்னாட்டு நாடக அரங்கின் படைப்பாக்க இயக்குநர் புகழேந்தி வலியுறுத்தினார்.

கருத்தரங்கில் பங்கேற்ற கவிமாலைத் தலைவர் இன்பா, சமூக ஊடகங்களில் மூழ்கியுள்ள மாணவர்களை வாசிப்பின் பக்கம் ஈர்க்க உள்ளூர்க் கதைகளைக் குறும்படங்களாக்கும் உத்தி பொருத்தமானது எனப் பாராட்டினார்.

“இளைய இயக்குநர்கள் நல்ல வாசிப்பாளர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டால் தரமான படைப்புகளை உருவாக்க முடியும்,” என்றார் அவர்.

கலந்துரையாடலின் நெறியாளராகச் செயல்பட்ட நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி மோகன் ஹரிவர்த்னி, 21, “எழுத்தாளர்களின் கருத்தைச் சிதைக்காமல், இயக்குநர்களின் கற்பனையையும் இணைத்துப் படைப்புகளை உருவாக்குவது குறித்துப் பயனுள்ள தகவல்கள் பகிரப்பட்டன,” என்றார்.

அதே பல்கலைக்கழகத்தின் ர.மகாலெட்சுமி, 20, “ஹாரி பாட்டர் திரைப்படத்தைப் பார்த்த பிறகே அதன் புத்தகத்தைப் படிக்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதுபோல, தரமான குறும்படங்கள்மூலம் இளையர்களிடம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்ட முடியும்,” என்று சொன்னார்.

எழுத்தாளர்களின் அனுபவமும் இளையர்களின் நவீன தொழில்நுட்பப் பார்வையும் ஒன்றிணைந்தால், உள்ளூர்த் தமிழ் இலக்கியத்தை அடுத்த தலைமுறையிடம் எடுத்துச்செல்லலாம் என்ற நம்பிக்கை விதையை இந்நிகழ்ச்சி தூவியது.

குறிப்புச் சொற்கள்