உலகின் முக்கிய உணவு நடுவங்களில் ஒன்றாகத் திகழ விரும்பும் சிங்கப்பூருக்கு, மேலும் பெருமை சேர்க்க இளம் சமையற்கலை வல்லுநர்களான எம்.அனிஷாவும் சம்ரித் பில்லாவும் தயாராகி வருகின்றனர்.
இருவரும் ‘அட்-சன்ரைஸ் குளோபல்ஷெஃப் அகாடமியில் (At-Sunrice GlobalChef Academy) தங்களது 18 மாதகால பட்டயக் கல்வியை அண்மையில் முடித்தனர். சமையற்கலையை வர்த்தகத் திறன்களுடன் இணைக்க அவர்கள் ஆவலாய் உள்ளனர்.
சமையறையிலிருந்து வீசும் வெவ்வேறு மணங்களால் ஈர்க்கப்பட்ட அனிஷாவின் ஆர்வத்தை, தாயாரும் பாட்டியும் வளர்த்ததாகக் கூறினார். ஏழு வயதிலேயே இறைச்சியை நெருப்பில் வாட்டும் ‘பார்பெகியூ’ முறையைக் கற்றுக்கொண்டார். ஒன்பது வயதில், வறுக்கப்பட்ட உணவுப்பொருள்களை அனிஷா விருந்தினர்களுக்குப் பரிமாறினார்.
இந்த அனுபவங்களும் அவர் கலந்துகொண்ட உணவு விழாக்களும் சமையற்கலை வல்லுநராகும் அவரது ஆர்வத்தை மேலும் தூண்டின.
அனிஷாவைப் போல சமையற்கலை மேற்கொள்வதற்கான ஊக்கத்தைச் சம்ரித் தன் குடும்பத்தாரிடமிருந்து பெற்றார். தாயாரிடமிருந்து புதிய சமையல் உத்திகளைக் கற்றுக்கொண்ட சம்ரித், அவரிடமிருந்து உந்துதலையும் பெற்றதாகக் கூறினார்.
“ஒரு சமையற்கலை வல்லுநராகத் திகழ என் தாயார் ஆசைப்பட்டபோதும் அது நிறைவேறவில்லை. எனவே, இது எனக்காகவும் என் தாயாருக்காகவும் நான் மேற்கொண்ட ஒரு லட்சியப் பயணம்,” என்று அவர் கூறினார்.
ஹோட்டல், உணவகம் என வர்த்தக இடத்திலான சமையல் தொழிலில் உள்ள சவால்களை நன்கு அறிந்த இருவருமே, அந்தச் சவால்கள் தங்களுக்குப் படிப்பினை என்று கூறினர்.
சமையலையும் தாண்டி பல்வேறு திறன்கள் இந்தப் பணிக்குத் தேவைப்படுகின்றன. சமையலறை நடைமுறைகளைக் குறுகிய காலத்திலேயே கற்றுக்கொள்வது, நேர நிர்வாகம், அழுத்தம் நிறைந்த சூழலைச் சமாளிப்பது போன்ற திறன்களும் தேவைப்படுவதாக அனிஷா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பெரும்பாலான வேலைகளில் வழங்கப்படும் வாரயிறுதி ஓய்வு நாள்களையும் விடுமுறை நாள்களையும் அதிகம் பெறுவதில்லை என்பதைக் குறிப்பிட்ட சம்ரித், இந்த வேலைக்குக் கடப்பாடு அதிகம் தேவைப்படுவதாகவும் கூறினார்.
அனுபவ அறிவு பெற்றிருந்தபோதும் அனிஷாவும் சம்ரித்தும் மேற்கொண்டு பட்டக் கல்வி கற்க விரும்புகின்றனர்.
“இத்துறை சார்ந்த பட்டக் கல்வி எங்கள் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என நம்புகிறோம். சொந்த உணவகத் தொழில் செய்வதற்கான வர்த்தகத் திறன்களையும் பெறலாம்,” என்றார் அனிஷா.

