தயாமயி பாஸ்கரன்
ஊடகத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் உழைப்பையும் விடாமுயற்சியையும் நம்பி இளம் வயதிலேயே சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கின்றனர் இரு இளையர்கள்.
கனவைத் துரத்தும் துடிப்பு
கல்லூரிப் படிப்பைக் கைவிட்டு, தமது கனவைத் துரத்தத் தொடங்கிய ரோஹன் கிருஷ்ணா, 22 வயதில் வெற்றிகரமாகச் சொந்தமாக ஓர் ஊடக நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
தமது 15 வயதிலிருந்தே காணொளித் தொகுப்பில் ஆர்வம் கொண்ட இவர், முதன்முதலில் யூடியூப் தளத்தில் தமது தொகுப்புகளைப் பகிரத் தொடங்கினார். பெரிய எதிர்பார்ப்பின்றி வெளியான அவரது முதல் காணொளி, ஒரே இரவில் 50 ஆயிரம் பார்வைகளைப் பெற்றது.
அதனால் உற்சாகமடைந்த அவர், தொடர்ந்து காணொளிகளைப் படைக்கத் தொடங்கினார். ஆர்ச்சர்ட் சாலையை தமது கண்ணோட்டத்தில் அழகிய காணொளிகளாகப் பதிவு செய்து, தொகுத்து இணையத்தில் பகிர்ந்தார்.
அதனால் ஈர்க்கப்பட்ட ‘கார் பிரியர் குழு’ ஒன்று தங்களுக்குக் காணொளி ஒன்றைத் தயாரிக்கக் கோரினர். அதையடுத்து, அதே குழுவைச் சேர்ந்த ஒருவரின் திருமணத்திற்குக் காணொளி படைக்கும் வாய்ப்பும் ரோஹனுக்குக் கிட்டியது.
“குறைந்த விலையில் அதனைச் சிறப்பாகச் செய்து கொடுத்தேன்,” என்று சொன்ன ரோஹன், அதற்காகப் பெற்ற 180 வெள்ளிதான் தாம் முதன்முதலில் சம்பாதித்த ஊதியம் என்று புன்னகையுடன் கூறினார்.
பின்னர், தமது திறன்களை வளர்த்துக்கொள்வதற்காகவும் பிறருக்குத் தமது திறனை வெளிப்படுத்துவதற்காகவும் டிக்டாக் தளத்தில் காணொளிகள் வெளியிடத் தொடங்கினார். இவருக்கு உள்ளூர் பிரபலம் ஒருவருக்குக் காணொளி படைக்கும் வாய்ப்பு கிட்டியதை அடுத்து, அடுத்தடுத்த வாய்ப்புகள் வரத் தொடங்கின.
தொடர்புடைய செய்திகள்
ஊதியம் சற்றே உயர்ந்தாலும் தேசிய சேவையில் இருந்ததால் இவரால் பணியைத் தொடர முடியவில்லை. பின்னர், பெற்றோரின் பரிந்துரைப்படி, தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் சேர்ந்தார்.
பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் பணியாற்றும் வாய்ப்பு வரவே, மீண்டும் படத்தொகுப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
“பிரபலங்களுடன் பணியாற்றியபோது அவர்கள் இருக்கும் துறையில் என்னால் ஈடுபட முடியுமா என்ற தயக்கமும் ஏற்பட்டது. ஆனால், துணிந்து சிறப்பாகச் செய்ய முடிவெடுத்தேன்,” என்றார் ரோஹன்.
அவ்வாறே தமது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார் ரோஹன். கூடுதல் ஊதியமும் வரத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உள்ளூரிலும் மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வாய்ப்பு வரவே, பல்கலைக்கழகப் படிப்பிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார்.
“எனது ‘ரோஜாக் மீடியா’ பெருநிறுவனமாக உருவெடுக்க வேண்டும். நானும் திரைப்படத்தில் பணியாற்றும் விருப்பம் கொண்டுள்ளேன். அதற்கான உழைப்பைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன். என் கனவு நனவாகும்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் ரோஹன்.
படிப்புடன் படைப்பிலும் கவனம் செலுத்தும் ஆதித்யா
‘மொமென்டோ எஸ்ஜிபி’ என்னும் ஊடக நிறுவனத்தின் உரிமையாளர் ஆதித்யா மூலா, 22, சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழகத்தில் நிதித் துறையில் தமது பட்டப்படிப்பைப் படித்து வருகிறார்.
‘விஆர் புரோடக்ஷன்ஸ்’ எனும் ஊடக நிறுவனத்தில் படைப்பு இயக்குநராகப் பணியாற்றிய இவருக்கு சொந்தமாக ஓர் ஊடகத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
இந்த ஓராண்டுக் காலத்தில், பல இசை நிகழ்ச்சிகளுக்குக் காணொளிப் படம் எடுத்துள்ளார். ‘அசல் கோளாறு’, ‘சாஹி சிவா’ ஆகிய இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, ஷான் ரோல்டன் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கும் காணொளிப் படமெடுத்தார்.
“அந்த அனுபவங்களின்வழி கிடைத்த ஊக்கத்தால் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினேன்,” என்றார் ஆதித்யா.
தமது நிறுவனத்தில் தம்முடன் சேர்ந்து வேலை பார்ப்பவர்களுக்குப் படைப்பாக்கச் சுதந்திரம் தருவதால் அவர்களும் ஊக்கம் பெறுவதாக நம்புகிறார் ஆதித்யா.
தொடக்கத்தில் தம்மிடம் வந்த வாடிக்கையாளர்கள் இலவச சேவையை எதிர்பார்த்தாலும் தமது விடாமுயற்சியால் பல நிகழ்ச்சிகளில் திறமையை வெளிக்காட்டி இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தி உள்ளார் இவர்.
“நான் மிகவும் ரசிக்கும், பார்த்து வியக்கும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் பணியாற்றியது வாழ்வில் மறக்க முடியாதது,” என்று சொன்னார் ஆதித்யா.
அவர் தமது குழுவினருடன் அண்மையில் சிலம்பரசன் - யுவன் ஷங்கர் ராஜா படைத்த இசை நிகழ்ச்சி ஊடகக் குழுவில் பணிபுரிந்தார்.
தமது மொமென்டோ எஸ்ஜிபி நிறுவனத்தை எதிர்காலத்தில், முன்னணி இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் ஊடக நிறுவனமாக உருவாக்க வேண்டும் எனும் குறிக்கோளுடன் உழைத்து வருகிறார் ஆதித்யா.

