வெளிநாட்டிலும் தமிழ் அடையாளத்தை நிலைநிறுத்தும் இளம் கவிஞர் ஐஸ்வரியா

வெளிநாட்டிலும் தமிழ் அடையாளத்தை நிலைநிறுத்தும் இளம் கவிஞர் ஐஸ்வரியா

3 mins read
புதிய சூழலில் கலாசார அடையாளத்தை வலுவாகப் பேணுதல்
2ee28fa0-4350-402d-a27a-93d37feafde3
நியூயார்க்கின் ‘கிராண்ட் சென்ட்ரல்’ ரயில் நிலையத்தில் தமது புத்தகத்துடன் 31 வயது ச. ஐஸ்வரியா. - படம்: ச. ஐஸ்வரியா

இரு வேறுபட்ட நாடுகளுக்கு இடையே வாழ்வது பலருக்குக் கடினமாகத் தோன்றலாம். ஆனால், கவிஞரும் எழுத்தாளருமான 31 வயது ச. ஐஸ்வரியா அதை அரியதொரு வாய்ப்பாகக் கருதுகிறார்.

பழக்கமான சிங்கப்பூர் வாழ்க்கையிலிருந்து விடைபெற்று, நியூயார்க்கின் சுறுசுறுப்பான ‘குவின்ஸ்’ பகுதிக்குக் குடியேறியுள்ள அவர், எங்குச் சென்றாலும் தமது வேர்களைத் தம்முடன் எடுத்துச் செல்ல முடியும் என்று முழு மனத்துடன் நம்புகிறார்.

இந்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி வெளியான அவரது முதல் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு ‘வேர் மை ஃபீட் ஹேவ் கேரீட் மீ’ (Where My Feet Have Carried Me: Hunger, Heart, and Homes I Have Loved), அனைத்துலக ‘எமிலி டிக்கின்சன்’ விருதை வென்றது. ஐஸ்வரியாவின் இப்படைப்பு, காதல் முறிவு, கலாசார அடையாளம், புதிய வாழ்க்கையை உருவாக்குவதில் உள்ள சவால்கள் ஆகியவற்றைப் பதிவு செய்கிறது.

சிங்கப்பூர் தமிழ்க் கவிஞர் ச. ஐஸ்வரியாவின் ‘வேர் மை ஃபீட் ஹேவ் கேரீட் மீ’ (Where My Feet Have Carried Me) எனும் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு.
சிங்கப்பூர் தமிழ்க் கவிஞர் ச. ஐஸ்வரியாவின் ‘வேர் மை ஃபீட் ஹேவ் கேரீட் மீ’ (Where My Feet Have Carried Me) எனும் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு. - படம்: இணையம்

“பருவமடைதல், திருமணம், விவாகரத்து, மீண்டும் காதலில் விழுவது என ஒரு பெண்ணின் முழுமையான வாழ்க்கைச் சுழற்சியை இக்கவிதைகள் பிரதிபலிக்கின்றன,” என அவர் கூறினார்.

இந்தியர்களில் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கப்பூரின் நெருக்கமான சமூகச் சூழலிலிருந்து வெளியேறி, கடந்த 2025 செப்டம்பரில் அவர் நியூயார்க்கிற்கு இடம்பெயர்ந்தார்.

தமிழ் பேசுவோர் மிகவும் குறைவாகக் காணப்படும் அந்தப் பகுதியில், ஒருவரது கலாசார அடையாளம் எளிதில் நீர்த்துப்போக வாய்ப்புண்டு. இருப்பினும், தமது பாரம்பரியத்தை விட்டுக்கொடுத்துப் புதிய சூழலோடு ஒன்றிப்போக மறுத்துவிட்டதாக ஐஸ்வரியா கூறினார்.

“சுற்றுச்சூழலோடு ஒன்றிணைவதற்காக நீங்கள் நீங்களாக இருப்பதை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை,” என அவர் வலியுறுத்தினார்.

பல ஆண்டுகளாக அவருக்கு பிடித்த ‘ப்ரூ’ காபியை தினமும் அருந்துவதாக இருந்தாலும் சரி, நியூயார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் ‘தவு சம்பால்’ செய்வதற்காகக் கூடுதல் விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட ‘டோஃபு’ வாங்குவதாக இருந்தாலும் சரி, உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இருந்தாலும் சரி, அவரது அடையாளம் கொஞ்சமும் மாறாமல் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஐஸ்வரியாவின் கவிதைகள் அனைத்துலக வாசகர்களைச் சென்றடைவதற்கு முன்பாக, அவர் சிங்கப்பூரின் செய்தித்துறையில் பணியாற்றித் தமது எழுத்துத் திறனைச் செழுமைப்படுத்தினார்.

உள்ளூர் சமூகத்திற்காக ‘தமிழ் முரசு’, ‘தப்லா’ ஆகியவற்றில் அவர் பணியாற்றிய காலம், பாரம்பரியப் பதிப்புலகுக்கு அவரைத் தயார்படுத்துவதில் பங்காற்றியதாக அவர் கூறினார். அங்கு அவர் செய்தித் திருத்தும் பணிகளின் நுணுக்கங்களையும் நெறிமுறைகளையும் கற்றுக்கொண்டார்.

“தங்களை இழக்காமல் வெளிநாடுகளில் அற்புதமான சாதனைகளைப் படைத்த எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்களின் அறிமுகமும் எனக்கு அப்போது கிடைத்தது,” என்று அவர் கூறினார்.

நியூயார்க்கின் ‘கிராண்ட் சென்ட்ரல்’ ரயில் நிலையத்தில் தமது புத்தகத்துடன் 31 வயது ச. ஐஸ்வரியா.
நியூயார்க்கின் ‘கிராண்ட் சென்ட்ரல்’ ரயில் நிலையத்தில் தமது புத்தகத்துடன் 31 வயது ச. ஐஸ்வரியா. - படம்: ச. ஐஸ்வரியா

ஐஸ்வரியா தமது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில்தான் ‘வேர் மை ஃபீட் ஹேவ் கேரீட் மீ’ நூல் உருவானது என்றார்.

அந்த மாற்றங்களைப் பதிவுசெய்ய, தமது கவிதைகளை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் அணுகினார் ஐஸ்வரியா. இது, ஓர் அறையின் நடுவில் எவ்வித ஒளிவுமறைவுமின்றி நிற்பதற்கு இணையானது என்று அவர் ஒப்பிடுகிறார். மிக முக்கியமாக, சொந்த ஊரில் உள்ள தமது சமூகத்தின் விமர்சனங்களுக்கு அஞ்சி, தமது உண்மைகளை மறைக்க அவர் மறுத்ததாகக் கூறினார்.

“மக்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்து, அதன் காரணமாக நான் கலையைப் படைக்காமல் போயிருந்தால், அதுவே எனக்கு மிகவும் வேதனையானதாக இருந்திருக்கும்.

“மற்றவர்களுக்கு என்னைப் பிடிக்குமா, இல்லையா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனது கலையை உலகத்தின்முன் வைக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

ஐஸ்வரியாவின் இந்த வெளிப்படைத்தன்மை, பெருமளவில் அவரது வளர்ப்பு முறையிலிருந்தே வந்தது. குடும்பத்தின் மூத்த மகளாகவும் தமிழ்ப் பெண்ணாகவும் அவர்மீது சுமத்தப்பட்ட எதிர்பார்ப்புகளின் எடையை இக்கவிதைத் தொகுப்பு ஆழமாக ஆராய்கிறது.

தமது சொந்தத் தாய் உட்பட, தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையைக் காலங்காலமாக வடிவமைத்து வந்துள்ள ஆணாதிக்கக் கட்டமைப்புகளைப் பற்றிப் பேசத் தாம் சிறிதும் தயங்கவில்லை என ஐஸ்வரியா குறிப்பிட்டார்.

இது, தனிப்பட்ட நினைவுகளில் உருவான படைப்பு என்பதால், அனைத்துலக ‘எமிலி டிக்கின்சன்’ விருது கிடைத்ததை எதிர்பாராத ஒரு மைல்கல்லாகவும் இன்னும் தமக்கு முழுமையாக நம்பமுடியாத ஒன்றாகவும் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூரையும் தமிழ் சமூகத்தையும் உலக வரைபடத்தில் நிலைநிறுத்துவதில் தமது பங்கை ஆற்றியதற்குப் பெருமிதம் கொள்வதாக கூறினார்.

“ஐரோப்பா, இந்தியா என என் பாதங்கள் என்னை எங்கு அடுத்து அழைத்துச் செல்லும் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். என் வாழ்க்கையின் இந்தப் புதிய அத்தியாயங்களை எழுத்தின்வழி ஆராய உற்சாகமாக உள்ளேன்,” என்று கூறினார் ஐஸ்வரியா.

குறிப்புச் சொற்கள்