தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்க விருது பெற்ற இளம் கைதி

3 mins read
8f6df5bc-c89c-4620-9bc4-3cda26b44575
சிறைத்தண்டனை முடிவுறும் நேரத்தில் தொண்டூழியத்திற்காக விருது பெற்றுள்ளார் ‘விக்’. - படம்: பே. கார்த்திகேயன்

போதைப் புழக்கத்தால் தானா மேரா சிறைச்சாலையில் கைதியாக வாசம் செய்கிறார் 21 வயது ‘விக்’ ( உண்மைப் பெயரன்று).

இருந்தபோதும், திருந்தி வாழ்வதற்கு நேரம் பார்க்க வேண்டியதில்லை. சிறையில் உள்ளபோதே திருந்தி, நற்செயல்களில் ஈடுபடத் தொடங்கலாம் என்பதைச் செய்துகாட்டியுள்ளார் இந்த இளையர்.

சிறைக்கைதிகளுக்கான தேசிய இளையர் சாதனை விருது நிகழ்ச்சியில் தங்க விருது பெற்றோரில் விக்கும் ஒருவர்.

நேர்மறைச் சிந்தனைகளைப் பரப்பி, பரிவுக்குப் புத்துயிரூட்டுவது என்ற கருப்பொருளுடன் தொடங்கிய அந்த நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா கலந்துகொண்டார்.

இத்தகைய விருது ஒன்றைப் பெறுவது விக்குக்கு இதுவே முதல்முறை. ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாகச் சிறையில் இருந்த விக்கிற்கு இவ்விருது விடிவெள்ளியாக ஒளிர்கிறது.

பெற்றோர் இருவருமே மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் அக்காவுடன் மட்டும் விக் வளர்ந்தார். சில நேரங்களில் தந்தை தங்களைச் சித்திரவதை செய்வார் என்றார் அவர்.

சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் விக்கின் குடும்ப நிலையைக் கண்ட பிறகு, அப்போது 11 வயதான அவரைச் சிறார் இல்லம் ஒன்றில் சேர்த்தனர்.

17 வயதுவரை அங்கு வளர்ந்த விக்கின் வாழ்க்கை, பிற இளையர்களுடனான சண்டைகளாலும் மோதல்களாலும் கொந்தளிப்பானதாகவே இருந்தது. அதற்கு இடையிலும் தேசியத் தொழிற்கல்விக் கழகத்தில் இயந்திரவியல் துறையில் சான்றிதழ் பெற்றார் அவர்.

ஓரளவு முன்னேறி வந்த அந்த இளையரைத் தீய வழிக்குத் திசைதிருப்பினார் அவருடைய அக்காவின் கணவர்.

போதைப் புழக்கத்தை அவரிடம் கற்றுக்கொண்ட விக், அந்தப் பழக்கத்திற்கு அடிமையானார்.

ஒரு நாள், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர்.

அந்நேரத்தில் போதை மயக்கத்தில் இருந்த விக்கை அவர்கள் பிடித்துச் சென்றனர்.

அதைக் கண்டு தன் அக்கா இடிந்துபோனதை நினைவுகூர்ந்த விக், அதன்பிறகு தான் செய்ததை எண்ணி வருந்தத் தொடங்கினார்.

சிறையில் பார்க்கவந்தபோது அக்கா சொல்லிய அன்பு வார்த்தைகள், தம்பியின் மனத்தில் நல்ல எண்ணங்களை விதைத்தன.

“கவலைப்படாதே! உனக்கு நான் இருக்கிறேன், உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றெல்லாம் அக்கா கூறியபோது என் மனம் நெகிழ்ந்தது,” என்றார் விக்.

சிறையில் இருந்தபோது திருந்துவதில் குறியாக இருந்த விக், தொண்டூழியமாக வாழ்த்து அட்டைகளைச் செய்துவந்தார். ஒருமுறை அவர் செய்த அட்டை ஒன்று முதியோர் பராமரிப்பு அமைப்பைச் சேர்ந்த முதியோருக்குக் கொடுக்கப்பட்டதைக் காட்டும் காணொளி அவருக்கும் சக சிறைத் தொண்டூழியர்களுக்கும் காட்டப்பட்டது.

“காணொளி வழியாக முதியோரின் முகமலர்ச்சியைக் கண்டு அகமகிழ்ந்தேன். தொண்டூழியத்தின் உயர்வை அப்போது உணர்ந்தேன்,” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் விக்.

இன்னும் சில மாதங்களில் சிறையிலிருந்து விடுதலையாகவுள்ள விக், தாெடர்ந்து படிக்க விரும்புகிறார்; அதன்பின் ஒரு வேலையில் சேர்ந்து தன் அக்காவைப் பார்த்துக்கொள்ள ஆசைப்படுகிறார்.

கூடா நட்பையும் தீய பழக்கங்களையும் மீண்டும் நாடாமல் தூய்மையாக வாழ இந்த இளையர் விரும்புகிறார்.

“எனது கனவை நனவாக்க நான் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கப் போகிறேன். நல்லபடியாக வாழ நினைப்பவர்களுக்குக் கைகொடுக்க சிங்கப்பூரில் நல்ல அமைப்புகள் பல உள்ளன,” என்று விக் கூறினார்.

குற்றவாளியின் வாழ்க்கை அர்த்தமற்றது என உணர்ந்ததாகக் கூறும் விக், இனி குறிக்கோளுடன் வாழ முடிவெடுத்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்