செல்வராஜு ஆறுமுகம், 32, கடந்த 2007ஆம் ஆண்டில், தீபாவளிக்குச் சற்று முன்பு தனது அம்மாவை இழந்தார். திடீர் மாரடைப்பால் தாயார் மாண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வயிற்றுப் புற்றுநோயால் அவதியுற்ற தந்தையையும் இழந்தார்.
பதின்ம வயதில் தனித்து விடப்பட்ட செல்வராஜுக்கு, தனது பெற்றோரைப் பார்த்துக்கொண்ட அனுபவம் முதியோர் பராமரிப்பில் ஆர்வத்தை அளித்தது.
“மற்ற முதியவர்களுக்கும் நான் உதவி செய்ய விரும்பினேன்,” என்றார் செல்வராஜு.
இதன் விளைவாக, 2013ஆம் ஆண்டில் முதியோரைப் பராமரிக்கும் நோக்கில் ஒரு தன்னார்வத் தொண்டூழியராகத் தனது சேவையைத் தொடங்கினார்.
காலப்போக்கில், அவரது தொண்டூழியப் பணி வழிதவறிய இளையர்கள் மற்றும் சிறப்புத் தேவையுடையவர்களுக்கும் விரிவடைந்தது.
மூத்த சகோதரிகள் இருவரின் ஆதரவுடன் செல்வராஜு, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (ITE) கல்விப் பயணத்தைத் தொடர்ந்தார். அங்கு அவரது இணைப்பாட நடவடிக்கை ஆலோசகர், நைடெக் (NITEC) மற்றும் பலதுறைத் தொழிற்கல்லூரிப் படிப்பைத் தொடரும்படி அவரை ஊக்குவித்தார்.
“இதுவே எனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு திருப்புமுனை,” என்று செல்வராஜு குறிப்பிட்டார்.
அண்மையில், செல்வராஜு குயின்ஸ்லாந்துப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளநிலைப் பட்டம் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் சவால் 2025இன் புதிய வல்லுநர் திட்டத்தின்கீழ் உதவி பெறவுள்ள 12 பேரில் செல்வராஜும் ஒருவர். கடந்த நவம்பர் 2ஆம் தேதி வல்லுநராக அறிமுகம் கண்ட செல்வராஜு, இத்திட்டத்தின் உதவியால் உயிரியல் மருத்துவம் அல்லது சுகாதாரத் துறையில் நீடித்த நிலைத்தன்மைப் பராமரிப்பில் முதுநிலைப் பட்டம் பெறத் திட்டமிட்டுள்ளார்.
வழிதவறிச் செல்லப் பல சந்தர்ப்பங்கள் இருந்தபோதிலும், அவரது பெற்றோர் கற்றுக்கொடுத்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் செல்வராஜுக்குப் பேருதவியாக இருந்தது.
பெற்றோர் இல்லாத, இருள் சூழ்ந்த தருணங்களில் தமக்குக் கிடைத்த ‘நண்பர்களே பெருஞ்செல்வம்’ என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
“அவர்களின் பேராதரவு இன்றி நான் என் சவால்களைச் சமாளித்திருக்க மாட்டேன்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் முன்னேறப் பல வாய்ப்புகள் உள்ளன என்று கூறிய செல்வராஜு, “அந்த வாய்ப்புகளை இறுகப் பற்றுவது அவசியம்,” என்றும் அறிவுறுத்தினார்.

