சிங்கப்பூர் இளையர்கள் தேவையற்ற பொருள்களை விருப்பம்போல் வாங்குவோர் அல்லர்; தங்களின் சக்திக்கு ஏற்ப செலவு செய்கிறார்கள் என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
இருப்பினும், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்கு மகிழ்ச்சி தரும் பொருள்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது ஆய்வில் தெரியவந்தது.
கொள்கை ஆய்வுக் கழகமும் (ஐபிஎஸ்) சிஎன்ஏ நிறுவனமும் இணைந்து நடத்திய இணைய ஆய்வின்படி, பொதுவாக இளையர்கள் தங்களின் நிதி நிர்வாகத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
‘விரலுக்கேற்ற வீக்கம்’ என்ற சிந்தனையுடன் தங்களின் அன்றாடச் செலவுகளுக்கு அதிகப்படியாகப் பெரும்பாலான இளையர்கள் பணத்தை வாரியிறைப்பதில்லை.
அத்துடன், இவர்கள் யோசிக்காமல் கடன் வாங்கும் சாத்தியமும் குறைவு என்று ஆய்வு கூறியுள்ளது.
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட ஆய்வில் 21 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட 2,001 சிங்கப்பூரர்கள் பங்கேற்றனர். ஆய்வு முடிவுகள் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிடப்பட்டன.
ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் (88.8 விழுக்காட்டினர்), தங்களின் மாதாந்தர வருமானத்திற்கு மிகாமல் செலவு செய்வதாகக் கூறினர்.
உணவுக்கே அதிகம் செலவு செய்வதாக ஆய்வில் பங்கேற்ற கிட்டத்தட்ட பாதிப் பேர் அதாவது 46.2 விழுக்காட்டினர் கூறியிருந்தனர். கடன் தவணைக் கட்டணங்களுக்கு அதிகச் செலவாவதாக 25.5 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த படியாக ஆடைகள், காலணிகளுக்குச் செலவாவதாக 18.9 விழுக்காட்டினரும் பிள்ளைகள், பெற்றோர், அல்லது தங்களைச் சார்ந்திருப்போருக்காகச் செலவு செய்வதாக 17.4 விழுக்காட்டினரும் தெரிவித்திருந்தனர்.
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் குறித்து தனிப்பட்ட முறையில் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்தில் ஒன்பது பேர் தெரிவித்திருந்தனர். அதிக வருமானம் ஈட்டுவோர் இந்தப் பாதிப்பை அதிகம் உணரவில்லை.
செலவுகளை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் வைத்திருப்பதும் கட்டுப்படியான விலையில் பொருள்கள் கிடைக்கும்வரை காத்திருப்பதும் பாதிப்பைக் குறைக்க உதவும்.
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க, அதிக வருமானம் ஈட்டுபவர்கள் கடன் அட்டைகளை நாடும் சாத்தியம் அதிகம். அதே சமயம் குறைந்த வருமானம் ஈட்டுவோர் பொருள்கள் வாங்குவதைத் தள்ளிப்போடும் சாத்தியமும் அதிகம்.
தாங்கள் வரவுக்கு மீறிச் செலவு செய்வதை அறிந்தால், செலவுகளைக் குறைத்துக்கொள்வார்கள் என்று பத்தில் ஒன்பது பேர் தெரிவித்தனர்.
ஆனால், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களை மகிழ்விக்கும் பொருள்களை வாங்கத் தாங்கள் செலவு செய்ய விரும்புவதாகப் பத்தில் அறுவர் கூறியுள்ளனர்.
தாங்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை பத்தில் எண்மர் ஓரளவு அறிந்துள்ளனர். இருப்பினும், அதிகப்படியாகச் செலவு செய்கிறோமோ என்ற கவலையும் அவர்களிடத்தில் இருப்பதாக ஆய்வு கூறியது.
இளையர்கள் பொறுப்பற்ற முறையில் செலவு செய்கிறார்கள் என்று பொதுவாக நிலவும் கருத்துகளை ஆய்வு முடிவுகள் பொய்ப்பித்து உள்ளதாக கொள்கை ஆய்வுக் கழக ஆய்வாளர் டாக்டர் டியோ கே கீ சுட்டினார்.
இருப்பினும், மூன்றில் ஒருவர் மட்டுமே தங்களின் ஓய்வுக்காலச் சேமிப்புக்காக உறுதியான திட்டத்தை வகுத்துள்ளனர் என்றார் அவர்.
இதற்கிடையே, தற்போது தாங்கள் என்னென்ன கடன்களுக்குக் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என்றும் ஆய்வில் கேட்கப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் சொத்து தொடர்பில் 34 விழுக்காட்டினரும் கடன் அட்டை தொடர்பில் 22.1 விழுக்காட்டினரும் தற்போது கடன் வைத்திருப்பதாகக் கூறினர்.
கடன்கள் ஏதுமில்லை என்று 32.5 விழுக்காட்டினர் கூறியிருந்தனர்.
கடன் அட்டை இல்லை என்று மூன்றில் ஒருவர் தெரிவித்திருந்ததுடன் தங்களிடம் ஒன்று அல்லது இரண்டு கடன் அட்டைகள் உள்ளதாக 46 விழுக்காட்டினர் கூறினர்.
இருப்பினும், பொருளை முதலில் வாங்கிவிட்டு பின்னர் தவணைமுறையில் கட்டணம் செலுத்துவோரில் சுமார் 33.3 விழுக்காட்டினர், தாங்கள் இதனால் பிரச்சினையில் சிக்கியதாகத் தெரிவித்தனர்.
கடன்கள், கடன் அட்டைகள், தவணைமுறைக் கட்டணத் திட்டங்கள் போன்றவற்றை இளம் சிங்கப்பூரர்கள் பயன்படுத்தினாலும் அவற்றை எச்சரிக்கைக் கண்ணோட்டத்துடன் அணுகுவதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

