சிறுவயதில் அடிக்கடி நோய்வாய்ப்பட்டதால் எதிர்காலத்தில் தம்மைப் போன்றோருக்கு உதவ மருந்துகள் தயாரிக்க வேண்டுமென விரும்பிய சேது அனந்தகிருஷ்ணன் சஞ்சித், அக்கனவை நனவாக்கும் நோக்கத்துடன் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் தேசிய அறிவியல் உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார்.
அந்த உபகாரச் சம்பளம்வழி உயிர்மருத்துவ இளங்கலைப் பட்டத்திற்குப்பின் அவர் முனைவர் பட்டக்கல்வி பயில்வார்.
மருந்துகள் தயாரிப்பது மருத்துவர்களின் வேலையென்று எண்ணிவந்த சஞ்சித்துக்குச் சிங்கப்பூர் அறிவியல், தொழில்நுட்ப பள்ளியில் அவர் கற்ற உயிர்த்தொழில்நுட்பம், மருத்துவப் புத்தாக்கத்திற்கு அறிவியல் ஆராய்ச்சியே அடிப்படை என்பதை உணர்த்தியது.
சிறுவயது ஆர்வத்தை எதிர்கால வேலையாக மாற்ற வேண்டுமென்ற முனைப்புடன் இவர் நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரியில் உயிர்மருத்துவ அறிவியல் துறையில் பட்டயம் பெற்றார்.
அங்கு பயின்றுவந்த வேளையில் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் தொற்றுநோய்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் அவர் பயிற்சிபெறத் தொடங்கினார்.
அந்த அனுபவம் திரு சஞ்சித்திற்கு மருத்துவச் செயல்பாடுகளின்மீது ஆராய்ச்சி ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரியவைத்தது. அதனால், எதிர்காலத்தில் துல்லிய மருத்துவம், தொற்றுநோய்கள் ஆகிய இரு துறைகளிலும் மேலும் ஆழமான ஆராய்ச்சியை முன்னெடுக்க இவர் விழைகிறார்
ஆராய்ச்சியின்போது பலமுறை தோல்வியுற்றாலும் ஒவ்வொரு தோல்வியும் வெவ்வேறு பாடங்களைக் கற்பிப்பதாக அவர் கருதுகிறார்.
“சில நேரங்களில் பரிசோதனைகள் வெற்றி பெறாததற்கான சரியான காரணங்கள் புலப்படா. ஆனால், எவ்வாறேனும் ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்ற வேட்கை என்னை முன்னோக்கிச் செல்ல ஊக்குவிக்கும்,” என்றார் இவர்.
தற்போதுள்ள மருத்துவம் சிறப்பாக இருந்தாலும் துல்லிய மருத்துவம்வழி மருத்துவத்துறையை மேலும் மெருகேற்றலாம் என திரு சஞ்சித் நம்புகிறார். அதனால், சிங்கப்பூரில் முதியோர், குழந்தைகள் உடல்நலத்தைச் சிறப்பாக பேணி காக்க முடியுமென்றும் அவர் கருதுகிறார்.
ஆராய்ச்சித் துறையில் மட்டுமன்றி சமூக சேவையிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார் இந்த இளையர். தாமான் ஜூரோங் இளையர் அமைப்பில் இவர் பல்வேறு சமூக முயற்சிகளிலும் திட்டங்களிலும் பங்கேற்கிறார்.
“அத்திட்டங்களில் எனக்கு வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த இளையர்களை வழிநடத்தும் வாய்ப்பு கிட்டுகிறது. அந்த அனுபவங்கள் எதிர்காலத்தில் ஆராய்ச்சி தலைமைத்துவத்தில் நான் சிறந்து விளங்க உதவும் என நம்புகிறேன்,” என்றும் இவர் சொன்னார்.


