தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விளையாட்டாகத் தொடங்கியது விருது பெற்றுத் தந்தது

3 mins read
cdf15ad0-88b1-4c5d-b241-df0eef6b1654
ஒரே இடத்தில் அமர்ந்து சலிப்பூட்டும் செயலில் ஈடுபடாமல் ஏதேனும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் எனும் ஆசை நிறைவேறியுள்ளதாகக் கூறினார் ராம். - படம்: குணசேகரன் ராம்பிரவின்

சிறுவயதில் தற்செயலாகத் தன்னுடைய சகோதரரின் பழைய ‘கீபோர்டை’ வாசிக்க முயற்சி செய்தது குணசேகரன் ராம்பிரவினின் வாழ்க்கையை மாற்றியது.

“நடிப்பு, தயாரிப்பு, இப்படி ஏதேனும் ஒரு வகையில் படைப்பாளியாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், வாழ்க்கை என்னை இசைக்குள் தள்ளி ஓர் இசையமைப்பாளர் ஆக்கியதுடன், பணியாற்றிய முதல் படைப்பிலேயே விருதும் பெற வைத்தது,” என்று பெருமிதத்துடன் கூறினார் ராம், 20.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னிலக்கத் திரைப்படம், தொலைக்காட்சித் துறையில் பயின்ற ராம், தற்போது தேசிய சேவை புரிந்து வருகிறார்.

“பயன்படுத்தாமல் கிடந்த கீபோர்டை நான் வாசிக்க முயன்றேன். தொடர்ந்து ஆர்வம் ஏற்பட்டு ஒரு ‘பியானோ’வை வாங்கி வாசிக்கக் கற்றேன். அதுவே இசையுடனான எனது முதல் தொடர்பு,” என நினைவுகூர்ந்தார் ராம்.

அந்த பியானோவுடன் கிடைத்த சில இலவச இசையமைப்பு மென்பொருள்களைப் பயன்படுத்த முயன்ற அவர், அதிலும் தேர்ச்சிபெறத் தொடங்கினார்.

பின்னர், கணினிவழி பிற இசைக் கருவிகளின் வாசிப்புமுறை, அவற்றின் தாளம், அவை ஒன்றோடொன்று இணையும்போது ஏற்படும் தனித்துவமான இசை போன்றவை தன்னை இசைக்குள் மேலும் மூழ்கடித்ததாகச் சொன்னார் ராம்.

தனது படிப்புக்காக இயக்கும் குறும்படங்களுக்கு இசைக் கலவை, பிண்ணனி இசை ஆகியவற்றை அமைக்கத் தொடங்கினார் ராம். அவரது கல்லூரியை‌ச் சேர்ந்த மூத்த மாணவர்கள் சிலர் படம் எடுப்பதைப் பற்றித் தெரிய வர, தனது இசைப் படைப்புகளை அவர்களுக்கு அனுப்பி வாய்ப்பு கேட்டார்.

இவரது தனித்துவமான படைப்புகள் படக்குழுவினரை ஈர்க்கவே, ‘ராகங்கள் பதினாறு’ எனும் படைப்பு உருவானது. 2024ஆம் ஆண்டுக்கான ‘ஸ்கேப் சிங்கப்பூர் இளையர் திரைப்பட விழா’வில் (*SCAPE Singapore Youth Film Festival), தலைசிறந்த சொந்த இசைக்கான விருதையும் பெற்றுத் தந்துள்ளது.

“முதன்முறையாக பிறரது படைப்புக்கு இசையமைப்பது கடினமாக இருந்தது. அவர்களது எண்ணத்திற்குத் தகுந்தவாறு இசையமைக்க முடியுமா எனும் தயக்கமும் இருந்தது. ஆனாலும் கிடைத்த வாய்ப்பினைத் தவறவிடக்கூடாது என்பதால், இரண்டு மாதங்கள் கடுமையாக உழைத்து சிறந்த இசையைக் கொடுத்தேன். அதற்கு அங்கீகாரமும் கிடைத்துள்ளது,” என்றார்.

மேலும், “ஒருவர் தனக்குப் பிடித்தத்தைச் செய்ய அஞ்சக்கூடாது. நான் முழுநேரப் படைப்பாளியாகப் பணியாற்ற விழைவது முதலில் என் குடும்பத்தினருக்குத் தயக்கத்தைக் கொடுத்தது. என் ஆர்வமும் உழைப்பும் அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது,” என்றும் கூறினார்.

வாய்ப்புகள் நம் கதவைத் தட்டாது; நாம்தான் துரத்திப் பிடிக்க வேண்டும் என்று சொன்ன அவர், “எனக்கு இசை தெரியும் எனக்கூறி அறையில் அமராமல், முயன்று தேடிப்பெற்ற வாய்ப்பு இன்று அங்கீகாரமாக மாறியுள்ளது. இது மனநிறைவாக உள்ளது,” என்றார்.

“எனக்கு விருது கிடைத்தது என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் என நினைக்கிறன். எதிர்காலத்தில், என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி வித்தியாசமான படைப்புகளை உருவாக்க ஆசைப்படுகிறேன்,” என்றார்.

‘ஸ்கேப் சிங்கப்பூர் இளையர் படவிழா’

கடந்த 10 ஆண்டுகளாகத் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் சிங்கப்பூர் இளையர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து வரும் ஸ்கேப் தேசிய இளையர் திரைப்பட விழா, இவ்வாண்டு சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழாவுடன் இணைந்து இரண்டு வார சிங்கப்பூர் இளையர் திரைப்பட விழாவாக நடைபெற்றது.

மொத்தம் 254 திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இசை, இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு எனப் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் படைத்ததற்காக நவம்பர் 13ஆம் தேதியன்று 20 இளையர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்