‘எதிர்காலத் தலைவர்கள்’ பட்டியலில் இடம்பெற்ற விக்னேஷ்
சிறுவயதிலிருந்தே திரைப்படங்கள் வாழ்வில் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருந்ததால் அதனையே வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்டிருப்பவர் விக்னேஷ் கோபிநாதன், 36.
வரலாறு, நிரலாக்கம் எனத் திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் செயல்படும் விக்னேஷ், சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தின் ‘ஒளியுடன் ஓவியம் 2025’ (Painting with Light) விழாவில் தென்கிழக்கு ஆசிய குறும்படங்கள் திட்டத்தின் இணை வடிவமைப்பாளராகப் பங்காற்றியவர்.
ஹன்டி ரோட்டில் இருந்த அப்போதைய ‘கேத்தே சினிமா’ அவர் வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் இருந்ததாலும், வீட்டிலும் திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் இருந்ததாலும், சிறு வயதிலிருந்தே எத்தகைய படங்களில் தமக்கு ஆர்வம் உள்ளது என்பதில் அவருக்குத் தெளிவு இருந்தது.
‘ஸ்கிரீன் இன்டர்நேஷனல்’ அமைப்பின் ‘எதிர்காலத் தலைவர்கள்’ பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இவர், வீ கிம் வீ தொடர்பு, தகவல் கல்வி நிலையத்தில் திரைப்பட உருவாக்கத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் திரைப்படக் காப்பகம் (National Museum of Singapore Cinematheque), ‘தி சப்ஸ்டேஷன்’ ஆகியவற்றில் பங்களித்து திட்டமிடல் பணியின் நுணுக்கங்களை அறிந்தார். தொடர்ந்து ‘தி ப்ரொஜெக்டரில்’ திட்டமிடல் மேலாளராகப் பணியாற்றிய அவர், அத்துறையில் தமது திறனை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் லண்டனில் திரைத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அதன் பின்னர் ஆசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்தில் முழு நேரத் திட்டமிடல் பணியை மேற்கொண்ட அவர், “அங்கு பணியாற்றியது மிகவும் நிறைவானது. புதிய உத்திகளை வடிவமைப்பது சவால்மிக்கதாக இருந்தாலும், எனக்குக் கிடைத்த சுதந்திரமும் படைப்பாற்றலும் மிகவும் உற்சாகமூட்டி அதனைச் சாத்தியப்படுத்தியது,” என்றார் அவர்.
தற்போது சுயதொழிலில் ஈடுபட்டுள்ள விக்னேஷ், “திரைப்படங்களைத் தாண்டி, என் படைப்பற்றலை வெளிப்படுத்தவும், பலருடன் இணைந்து பழகவும் வாய்ப்பளிக்கும் பணிகளில் ஈடுபட விழைகிறேன்,” என்றார்.
டிஸ்க் ஜாக்கி பணிக்காகத் திறனை வளர்த்துக்கொண்டுள்ள விக்னேஷ், தமக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்குக் கற்பிக்கவும் ஆர்வத்துடன் உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கலை வழி பண்பாட்டை ஆராயும் ஆனந்த்
சிறுவயதில் கதை சொல்லலில் இருந்த ஈர்ப்பும், திரைப்படம் பார்ப்பதில் அவரது குடும்பத்தினருக்கு இருந்த ஈடுபாடும் 32 வயது கதாசிரியரும், இயக்குநருமான ஆனந்த் சுப்பிரமணியத்தை முழுநேரமாகத் திரைத்துறையில் ஈடுபட ஊக்குவித்தது.
மலேசியரான ஆனந்தின் குறும்படமான ‘தி ஹவுஸ் ஆஃப் பிரிக் அண்ட் ஸ்டோன்’, சிங்கப்பூரில் நடக்கும் ஒளியுடன் ஓவியம் 2025ல் திரையிடப்படவுள்ளது.
நிதி மோசடியைச் சுற்றியுள்ள நிகழ்வுகள், நிலையற்ற உலகில் அர்த்தத்தைத் தேடும் இளையர்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ள அவர், தொடர்ந்து தமது தமிழ் மொழி, மூதாதையர்கள், பண்பாடு ஆகிய அடையாளங்களை ஆராயும் திரைப்படங்களைப் படைத்து வருகிறார்.
இவ்வாண்டு அவர் எடுத்த ‘கத்து’ குறும்படம் மலேசியாவிலிருந்து கான்ஸ் விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திரைப்படமெனும் பெருமையைப் பெற்றது. அதற்கு முன்னர் அவர் எடுத்த ‘லையர் லேண்ட்’ குறும்படம் லோகார்னோ திரைப்பட விழாவில் சிறப்புப் பாராட்டைப் பெற்றது.
பள்ளிக்காலத்திலேயே திரைத்துறையில் நுழைய வேண்டும் என முடிவெடுத்திருந்தார். ஆனால், அது நிலையான பணி வாழ்வை அமைத்துத் தராது எனும் கருத்து பரவலாக இருந்ததால் முதலில் கட்டடக் கலைத் துறையில் இளங்கலைப் பட்டம் பயின்றார். தொடர்ந்து திரைப்படத்துறையில் முதுகலைப் பட்டம் பயின்றார்.
ஆவணப்படத்துக்கும் புனைகதைக்கும் இடைப்பட்ட வகையில் அமைந்துள்ள அவரது ‘தி ஹவுஸ் ஆஃப் பிரிக் அண்டுட் ஸ்டோன்’ படம், அரசியல், குடும்பம், அடையாளம்குறித்த உரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் விழாவில் அப்படம் திரையிடப்படுவது அர்த்தமுள்ளதாகவும், அங்கீகாரமளிப்பதாகவும் இருப்பதாகக் கூறினார் ஆனந்த்.
தமது அடையாளத்தைத் தேடும் தமிழ் இசைக்கலைஞரின் கதையைச் சொல்லும் முழுநீளத் திரைப்படத்தில் தற்போது பணியாற்றி வருகிறார் ஆனந்த்.
‘இடியோ சின்க்’ (Idio Sync Inc) எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவியுள்ள இவர், எதிர்காலத்தில் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து தமிழ்ப் பண்பாடு சார்ந்த கதைகளை வளர்க்கும் பணிகளிலும் ஈடுபட விழைவதாகத் தெரிவித்தார்.

