பாட்டெழுதி உதவ முற்படும் இளையர்

பாட்டெழுதி உதவ முற்படும் இளையர்

படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

21 Sep 2026 - 6:30 am

2 mins read

இளையர் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதில் கலையின் பங்குமீது மிகுந்த நம்பிக்கை கொண்ட 29 வயது எஸ்.ஆர்.ஷிவாணி இவ்வாண்டின் ‘நம்பிக்கைக்கான பாட்டெழுதுதல்’ (Songwriting for Hope) நிகழ்ச்சியில் வழிகாட்டியாக இணைந்துள்ளார்.

2016லிருந்து சிங்கப்பூர் சிறுமியர் இல்லத்தை நடத்திவரும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் இளையர் இல்லப் பிரிவு, எஸ்பிளனேடுடன் இணைந்து ‘நம்பிக்கைக்கான பாட்டெழுதுதல்’ எனும் வருடாந்தரக் கலை, நல்வாழ்வுத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

சென்ற ஆண்டின் நிகழ்ச்சியை எஸ்பிளனேட் ஊழியராகக் கண்டு ரசித்த ஷிவாணி, இளையர்கள் தங்கள் பாடல்களில் வெளிப்படுத்திய உணர்வுகளையும் துணிச்சலையும் கண்டு நெகிழ்ந்தார்.

அதனால், இவ்வாண்டிற்கான நிகழ்ச்சியில் சிங்கப்பூர் சிறுமியர் இல்லவாசி, மைசாராவிற்கு (உண்மைப் பெயரன்று) தொண்டூழிய வழிகாட்டியாக உதவினார்.

“முதல் அமர்விலிருந்தே, மைசாரா இத்திட்டத்தின் நன்மைகளை ஆழமாக நம்பினார். சுயபரிசீலனை செய்வதற்கும் எதிர்காலக் கனவுகளை வளர்த்துக்கொள்வதற்கும் இத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள ஆவலுடன் இருந்தார்,” என ஷிவாணி கூறினார்.

ஒவ்வொரு வார நடவடிக்கையிலும் மைசாரா கவனமாக இருந்ததோடு சக இளையர்களுக்கு உதவி செய்வதற்கும், அவர்கள் சவால்களை எதிர்கொண்டபோது அவற்றைச் செவிமடுக்கவும் அவர் ஒருபோதும் சலித்துக்கொள்ளவில்லை என்று ஷிவாணி குறிப்பிட்டார்.

“2024ஆம் ஆண்டிலும் மைசாரா இத்திட்டத்தில் பங்கெடுத்திருந்தார். குழுவிலிருந்த மூத்த இளையர்களில் அவரும் ஒருவராக இருந்தார். தன் தோழர்களை ஆழமாகச் சிந்திக்கும்படி ஊக்குவிக்கவும் அவரால் முடிந்தது,” என்றும் ஷிவாணி சொன்னார்.

ஷிவாணியிடம் தொடக்கத்தில் மனந்திறந்து பேசுவது கடினமாக இருந்தாலும் அவர் பாதுகாப்பான சூழலைத் தமக்காக உருவாக்கிக் கொடுத்தது உதவியாக இருந்ததென மைசாரா கூறினார்.

“நான் பாடல்கள், இசைக்கருவிகள் வழியாகத்தான் என் வலியையும் உணர்வுகளையும் முதன்மையாக வெளிப்படுத்துவேன். அதற்கு ஷிவாணி உறுதுணையாக இருந்தார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

மைசாராவின் ‘ஷைனிங் லைக் எ சன்’ எனும் பாடலை எழுதுவதற்கும் ஷிவாணி அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

மைசாராவின்  ‘ஷைனிங் லைக் எ சன்’ பாடல் வரிகள்.
மைசாராவின் ‘ஷைனிங் லைக் எ சன்’ பாடல் வரிகள். - படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

“இத்திட்டத்தில் இளையர்களுக்கு உதவ மனவுறுதி பெரிதும் அவசியம். அதனால், தொடக்கத்தில் வழிகாட்டியாகச் செயல்படத் தயங்கினேன். சக ஊழியர்களின் ஆதரவால் வழிகாட்டியாக முன்வந்தது நிறைவான அனுபவமாக அமைந்தது,” என்றார் ஷிவாணி.

அந்த அனுபவம் தமக்கு வாழ்வில் எதையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதையும் மனவுறுதி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வழிகளில் வெளிப்படும் என்பதையும் உணர்த்தியதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்களின் இறுதிப் படைப்பு எஸ்பிளனேடு ரிசைட்டல் அரங்கில் செப்டம்பர் 9ஆம் தேதி நடந்தேறியது. நிகழ்ச்சியில் சிங்கப்பூர் சிறுமியர் இல்லவாசிகள் 13 பேர் ‘தங்கள் எதிர்காலத்திற்கான தன்னம்பிக்கை’ என்ற கருப்பொருளில் தங்கள் பாடல்களைப் படைத்தனர்.

அத்திட்டத்தின்கீழ் இளையர்கள் 10 அமர்வுகளில் பங்கெடுத்து இசைவழியாக, தங்களின் கடந்தகால அனுபவங்களை ஆக்ககரமாகக் கையாளவும், எதிர்கால ஆசைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு நல்வழியைக் கண்டறிந்தனர்.

இத்திட்டம் அவர்களின் தன்மதிப்பை உயர்த்துவதோடு தங்களைச் சுற்றியுள்ள சக இளையர்களுக்கு முன்மாதிரிகளாகத் தங்களைப் பார்க்கவும் ஊக்குவித்தது. மேலும், கலைச் சமூகத்துடன் அர்த்தமுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் அவர்களுக்கு அத்திட்டம் வாய்ப்பளித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்