நல்லிணக்கத்திற்குக் குரல் கொடுக்கும் நான்கு இளையர்கள்

நல்லிணக்கத்திற்குக் குரல் கொடுக்கும் நான்கு இளையர்கள்

2 mins read
fe091721-938e-4b71-985b-f9b5be4c39dc
‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ நல்லிணக்கத் தூதர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் நான்கு இளையர்கள். - படம்: சக்திவேல் சிவாணி

சிங்கப்பூரின் பல்லின, பல சமயக் கட்டமைப்பை மேலோட்டமாக எடுத்துக்கொள்ளாமல் அதில் உள்ள சவால்களைப் பற்றி வெளிப்படையாகக் கலந்துபேசத் தொடங்கியுள்ளனர் இன்றைய இளையர்கள். 

அலங்கார மேடைப் பேச்சுகள், சமூக ஊடகப் பதிவுகள் ஆகியவற்றுடன் சமூக நல்லிணக்கத்தைப் பேணிவளர்க்கும் பணி நின்றுவிடுவதில்லை என்று ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ நல்லிணக்க அமைப்பைச் சேர்ந்த இளையர்கள் கூறுகின்றனர்.

‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ நல்லிணக்க அமைப்பு, சென்ற மாதம் (மே) 24ஆம் தேதி நடத்திய நல்லிணக்கத் தூதர்கள் நிகழ்ச்சியில் 45 இளையர்கள் பேராளர்களாக நியமிக்கப்பட்டனர்.

சிங்கப்பூரின் மக்கள்தொகையில் பெரும்பான்மை, சிறுபான்மைச் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் இந்த இளையர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இவர்களில் ஒருவரான அபிசா ஃபர்சீன், உரையாடல்வழி நல்லிணக்கம் உண்மையாக எட்டப்படும் என்பதைப் புரிந்துகொண்டார்.

நல்லிணக்கத் தூதர் என்ற முறையில் இந்தியர்களுக்கு இடையிலான பன்முகத்தன்மையைப் பற்றிப் பிறர்க்கு எடுத்துக்காட்ட அவர் விரும்புகிறார்.

தாம் இந்திய முஸ்லிமாக இருந்தபோதும் பள்ளிப்பருவத்தில் முக்காடு அணியாதிருந்ததால் போதிய விழிப்புணர்வில்லாத சிலர் தம்மை ஓர் இந்துவாகக் கருதியதாக அபிசா தெரிவித்தார்.

ஹலால் உணவு எனக்குத் தேவைப்படும் என்பதையும் தொழுகைக்கான நேரத்தின் அவசியத்தையும் மற்றவர்களுக்குப் புரியவைக்க சிறுவயதிலிருந்தே போராட்டமாக இருந்தது என்று அவர் கூறினார்.

வெவ்வேறு பண்பாடுகளைப் பற்றி உண்மையாகப் புரிந்துகொள்ளக் கேள்விகள் கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதை இதுபோன்ற நல்லிணக்கத் திட்டங்கள் உணர்த்துவதாக அபிசா கூறினார்.

இந்தக் கருத்திற்கு உடன்படுவதாகக் கூறும் பல்கலைக்கழக மாணவி கார்த்திகா பூவேந்திரன், வேறுபாடுகளைப் பற்றிய உரையாடல்கள் போதிய அளவில் இல்லை என்பதால் புரிந்துணர்வின்மையும் சில நேரங்களில் மனக்கசப்புகளும் ஏற்படுவதாகக் கூறுகிறார்.

இத்தகைய கலந்துரையாடல்களை வழிநடத்தும் வாய்ப்புகளைத் தூதர் பொறுப்பு வழங்குவதாக அவர் சொன்னார். 

தொடக்கக் கல்லூரியில் பள்ளி நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் சேர்ந்து சீன மொழிச் சங்கத்தைத் தொடங்கியதாகக் கூறினார் கார்த்திகா. இந்நிலையில், தமிழ் மொழிச் சங்கத்தை மாணவர்களே உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.  

இதேபோல, சிங்கப்பூரில் வெவ்வேறு இனங்களுக்கான பண்டிகைகள் பொது நிகழ்ச்சிகளில் மொழிப் பிரதிநிதித்துவம் குறித்த ஆழமான கேள்விகளைத் தொடர்ந்து முன்வைக்க விரும்புவதாக சக்திஸ்வரன் முருகையா தெரிவித்தார்.

இதற்காக வேற்றுமைகளைப் பற்றிப் பேசுவதன் அவசியத்தை வலியுறுத்துவதுடன் நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகப் பொதுமக்களுக்கு ரோஜாக்களையும் வெவ்வேறு சமய நம்பிக்கைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய சீட்டுகளையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்