தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகச் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வுகள் வழங்கிய இளையர்

5 mins read
d57ec5d0-b362-4ae8-a87b-f6d721a78b10
தமது அணியினருடன் பிரத்னியா (வலமிருந்து மூன்றாவது). - படம்: மக்கள் கழகம்

‘ஸ்பார்க்ஸ்’ சமூகப் புத்தாக்க இயக்கமும் ‘ஓப்பன் கவர்ன்மென்ட் புராடக்ட்ஸ்’ நிறுவனத்தின் நன்மைக்கான வடிவமைப்புகளை ஊக்குவிக்கும் திட்டமும் இணைந்து நடத்திய சமூக ‘ஹேக்கத்தான்’ நடைபெற்றது.

தொழில்நுட்ப ஆர்வலர்கள், சமூக மாற்றத்தை ஏற்படுத்த உழைப்போரை இணைத்த இந்நிகழ்ச்சியில் 21 அணிகள் பங்கேற்று பல்வேறு சிக்கல்களுக்கான தீர்வுகளை வடிவமைத்தனர்.

மொத்தம் 90 பேர் குழுக்களாகப் பிரிந்து பங்கேற்ற நிகழ்ச்சியின் முடிவில் சிறந்த ஐந்து அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேம்பட்ட திட்டத்தில் பங்கேற்கவுள்ளன. அணியினருக்கு திட்டங்களைச் செயல்படுத்த நிதியாதரவும் வழிகாட்டுதலும் வழங்கப்படும்.

இந்தச் சமூக ஹேக்கத்தானில் சமூகத்தில் நிலவும் சவால்களைக் கண்டறிந்து, அதற்கானத் தொழில்நுட்பத் தீர்வுகளை அவர்கள் வழங்கியுள்ளனர்.

மூத்தோருக்கு மின்னிலக்கச் சேவைகளை எளிதாக்கும் திட்டம்

உலகம் மின்னிலக்க மயமாகி வரும் நிலையில், சிங்கப்பூரில் உள்ள மூத்தோருக்கு அதனை அணுகக்கூடியதாக மாற்றும் பணியில் ஈடுபடுவது முக்கியம் என நினைப்பவர் பிரத்னியா ஸ்ரீரங் நிர்குண், 29.

அடிப்படையில் பயனர் அனுபவ வடிவமைப்பாளரான இவர், மூத்தோர், உடற்குறையுள்ளோர் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய திட்டங்களை வடிவமைப்பதில் பேரார்வம் கொண்டவர்.

அதன் நீட்சியாக, சமூக ‘ஹேக்கத்தான்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், தமது அணியினருடன் இணைந்து உரையாடல்மூலம் ‘சீனியர் சேய்ஸ்’ (Senior Says) மின்னிலக்கப் படிவங்களை நிரப்பும் கருவியை வடிவமைத்துள்ளார்.

இத்திட்டத்திற்காக, ‘ஃபெய் யூ’ சமூக சேவை அமைப்பிடம் நடத்திய கலந்துரையாடல்மூலம், அமைப்பின் முன்னெடுப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க உழைக்கும் மூத்த தொண்டூழியர்கள், தங்கள் குறிப்புகளைக் காகித வடிவிலேயே சம்ர்ப்பித்து வருவதை அணியினர் அறிந்துகொண்டனர்.

இதனால், அமைப்பின் நிர்வாக ஊழியர்களுக்குத் தரவுகளைக் காட்சிப்படுத்துவதிலும் பகுப்பாய்வு செய்வதிலும் சிரமம் நிலவுகிறது.

இதனைச் சரிசெய்ய, உரையாடல்களை எழுத்து வடிவமாக்கி, அதனைத் தொகுத்து, தயாரிக்கப்பட்ட கேள்விகள் கொண்ட படிவங்களில் உரிய பதில்களை நிரப்ப உதவும் கருவியை வடிவமைத்ததாக பிரத்னியா கூறினார்.

கையெழுத்தைத் தட்டச்சுத் தரவுகளாக மாற்றுவது, படங்கள் இணைப்பது எனக் குறிப்புகளுக்கு வடிவம் தரும் பணியை இக்கருவி மேற்கொள்கிறது.

தற்போது ஆங்கிலத்தில் குறிப்புகளை ஏற்றும் இக்கருவியில், தொடர்ந்து பிற மொழிகளையும் இணைக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறினார் பிரத்னியா.

இவை தவிர, வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களின் மனநலனை மேம்படுத்தும் இணையவழி ‘ஜர்னலிங்க்’ கருவி வடிவமைப்பிலும் இவர் பங்காற்றியுள்ளார்.

நீடித்த நிலைத்தன்மையின் மீது ஆர்வம் கொண்ட இவர், சிங்கப்பூர்ச் சமூகம் மறுசுழற்சியை எவ்வாறு அணுகுகிறது, அதன் தாக்கங்கள், சுழற்சிப் பொருளியல், சிங்கப்பூர்ச் சமூகத்திற்கு ஏற்ற நீடித்த நிலைத்தன்மை கொண்ட சிப்பமிடுதல் (Packaging) முறைகள் எனப் பல்வேறு அம்சங்கள் தொடர்பான ஆய்வுகளில் பங்காற்றியுள்ளார்.

“இணைய வழி அணுகலை எளிதாக்கவும், இயற்கையைப் பாதுகாக்கவும் தொடர்ந்து உழைக்க திட்டமிட்டுள்ளேன்,” என நம்பிக்கையுடன் சொன்னார் பிரத்னியா.

சமூக மன்றங்களில் இளையர் பங்களிப்பை ஊக்குவிக்கும் தொழில்நுட்பம்

தமது அணியினருடன் ஹர்‌ஷிதா (இடமிருந்து இரண்டாவது)
தமது அணியினருடன் ஹர்‌ஷிதா (இடமிருந்து இரண்டாவது) - படம்: மக்கள் கழகம்

சமூகத்தில் பங்களிக்க இளையர்களுக்குப் பெரிய அளவில் ஆர்வம் இருந்தாலும், தகவல் இடைவெளி, வழிமுறைகளில் தெளிவின்மை, ஆர்வத்துக்கும் கிடைக்கும் வாய்ப்புகளுக்குமிடையே இருக்கும் இடைவெளி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளதாகக் கருதுகிறார் இளையர் ஹர்‌ஷிதா, 21.

இளையர்களின் அர்த்தமுள்ள ஈடுபாட்டை ஊக்குவிப்பதன் மூலம் இந்நிலையை மேம்படுத்த ஒன்றிணைந்த தளத்தை வடிவமைத்துள்ளார் ஹர்‌ஷிதா.

அடிப்படையில் உயிர் மருத்துவத் துறை மாணவியான ஹர்‌ஷிதா புத்தாக்க வடிவமைப்புத் துறையை இரண்டாம் துறையாகத் தேர்ந்தெடுத்துப் பயின்று வருகிறார்.

“முற்றிலுமாகத் தொழில்நுட்பம் சார்ந்த துறையில் வேலை செய்வதை விட, அதன் மூலம் ஏற்படும் மனிதத் தாக்கம், அதற்குச் சமூகத்தில், மக்களிடையே கிடைக்கும் மதிப்பு ஆகியவை எமக்கு முக்கியம்,” என்ற அவர் அதனைச் செயல்படுத்தும் வாய்ப்பாக அண்மைய ‘ஹேக்கத்தான்’ அமைந்ததாகக் சொன்னார்.

தமது அணியினருடன் இணைந்து வாய்ப்புகளையும் இளையர்களை இணைக்கும் தளத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க உள்ளூர் சமூகப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இத்தளத்தில் இளையர்கள் தங்களுக்கு அருகில் உள்ள வட்டாரத்தைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள சமூக மன்றத்தின் தேவைகள், சிரமங்கள் குறித்து அறியலாம்.

இணை தேடும் செயலிபோல வடிவமைக்கப்பட்டுள்ள இத்தளத்தில் ஆர்வமுள்ள வாய்ப்புகளைச் சிறு வடிவத் தகவலாகப் பெற முடியும். நிலவும் சிக்கலுக்கேற்ப இளையர்கள் தங்கள் தீர்வுத் திட்டங்களையும் உள்ளீடு செய்யலாம்.

இந்தத் தளம் இளையர்களைத் தொண்டூழியர் என்பதைத் தாண்டி, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவோராக மாற்ற ஊக்குவிப்பதாகக் கூறினார் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக மாணவி ஹர்‌ஷிதா.

“பல்கலைக்கழகத்தில் ‘சமூகப் புத்தாக்கம்’ எனும் குழுவில் பங்காற்றி வருகிறேன். பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிவெடுக்கும் திறனைக் கற்றுத்தரும் தளம், மூத்தோருக்கும் பல் மருத்துவருக்கும் இடையிலான தொடர்பு மேம்பாடு எனப் பல்வேறு திட்டங்களில் பங்காற்றியுள்ளேன்,” என்றார் அவர்.

“எமது பங்களிப்பால் சமூகத்தில் ஏற்படும் அர்த்தமுள்ள மாற்றங்களைக் காண்பதில் எழும் மகிழ்ச்சிதான் அலாதியானது. அதில் தொடர்ந்து செயல்படுவேன்,” என்றார் ஹர்‌ஷிதா.

சமூகத் தோட்டங்களுக்கான வள நிர்வாகக் கருவி

தமது அணியினருடன் விஜய் (வலது).
தமது அணியினருடன் விஜய் (வலது). - படம்: மக்கள் கழகம்

பல்வேறு துறைகளில் நிலவும் சிக்கலைக் குறித்து அறிவதும் பயன்படுத்தக்கூடிய எளிய தீர்வுகளை வழங்குவதும் மிகவும் சுவாரசியமானது எனக் கருதுகிறார் விஜய் கெவின் சாலமன், 29.

தமது நண்பர்களுடன் இணைந்து சமூக ‘ஹேக்கத்தான்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம் என்ற அவர், சுகாதாரத் துறையில் நிலவும் சிக்கலைத் தீர்க்கும் வழிகளையும் தமது அணியினருடன் இணைந்து வடிவமைத்துள்ளார்.

“இது வழக்கமாக நாங்கள் மேற்கொள்ளும் பணியிலிருந்து மாறுபட்ட முறையில் செயல்பட தேவையான சுதந்திரத்தை அளிக்கிறது,” என்றும் இம்முறை சமூகத் தோட்டங்கள் தொடர்பான தொழில்நுட்பத் தீர்வை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் சொன்னார் விஜய்.

சமூகப் பிணைப்பை உருவாக்குவது, துடிப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது எனச் சமூகத் தோட்டம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது எனக் கருதிய விஜய், அவற்றை நிர்வகிக்கும் வசிப்போர் தொடர்புக் கட்டமைப்புக்கு உதவும் தளத்தை வடிவமைத்துள்ளார்.

சிங்கப்பூரின் முதல் பசுமை வட்டாரமான தெங்காவில் பசுமையான வாழ்வியல், சமூகத் தொடர்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் தோட்டத்துக்கான இடங்கள் ஒதுக்கப்படுவதை அறிந்த அவர், அது நிர்வாகச் சுமையை அதிகரிக்கும் என்பதையும் கண்டறிந்தார்.

குடியிருப்பாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் நிர்வாக அமைப்பை மேம்படுத்தவும் ஏதுவாக அமைந்த தளத்தை இவர் வடிவமைத்துள்ளார்.

இதில் வட்டாரத்தின் வரைபடத்துடன் அதன் பராமரிப்பு, வழிகாட்டுதல்கள் என அனைத்துத் தகவல்களும் இருக்கும். அதில் ஆர்வத்தைப் பதிவு செய்யும் படிவம், வந்து சேர்ந்துள்ள விண்ணப்பங்கள், ஒவ்வொரு தோட்டத்துக்கும் தேவையான வளங்கள் என அனைத்துத் தகவல்களும் இருக்கும்.

அனைத்துத் தோட்டங்களுக்கும் சமமான வளங்களையும், ஆர்வமுள்ளோர்க்கு வாய்ப்புகளையும் அளிப்பதன் மூலம் அவற்றுக்கு வலுசேர்க்க முடியும் என விஜய் நம்புவதாகக் கூறினார்.

“சமூகத் திட்டங்கள் மக்களிடையே ஏற்படுத்தும் தாக்கம், வடிவமைப்புச் சிந்தனையில் தொடர்ந்து ஈடுபட ஊக்குவிக்கிறது,” என்றார் விஜய்.

இளையர் மனநலன் காக்கும் தளம்

தமது அணியினருடன் ஜஸ்பிரித்பால் (இடது)
தமது அணியினருடன் ஜஸ்பிரித்பால் (இடது) - படம்: மக்கள் கழகம்

இளையர்களிடையே மனநலன் தொடர்பான சிக்கல் அதிகரித்து வருவதாகவும் அதனை விரைவாகக் கண்டறிந்து ஆதரவளிப்பது அவசியம் எனவும் ஜஸ்பிரித்பால் கவுர் சித்து எண்ணுகிறார்.

உளவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் சமூக சேவைத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்ற இவர், தமது அணியினருடன் இணைந்து மனநலச் சேவை, சமூக ஆதரவுகள், செயல்பாட்டு மையங்கள், அவற்றைப் பயன்படுத்துவோரின் கருத்துகள் என அனைத்தும் கொண்ட ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.

“மனநல ஆதரவை நாடுவதில் உள்ள தயக்கத்தைப் போக்குவதால், இளையர்கள் உரிய நேரத்தில் உதவி பெறுவது அதிகரிக்கும்,” என்றார் அவர்.

அடித்தள அமைப்புகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் இவர், தொடர்ந்து இதற்காகப் பணியாற்றியுள்ளதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்