கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம் போன்ற துறைகளில் மாற்றத்தை வழிநடத்த ஆர்வமுள்ள இளையர்கள் அடுத்த 9 மாதங்களுக்கு தேசிய இளம் தலைமைத்துவத் திட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்தப் பயணத்தைத் தொடங்க ஓர் அறிமுக நிகழ்ச்சி இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.
இந்த ஆண்டு 400க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் 42 பேர் தலைமைத்துவ திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் பயணத்தின் தொடக்கத்தை அங்கீகரிக்கும் விதமாகக் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி ஓர் ஆலோசனைக் குழு அங்கமும் விருது நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாடு, சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஆலோசனைக் குழு அங்கத்தில், தொண்டுமூலம் சமூகத்திற்குப் பங்களிப்பது எப்போதுமே தமது நோக்கமாக இருந்து வருகிறது என்று தெரிவித்தார் திருவாட்டி ரஹாயு.
“அரசியலில் நுழைந்தது தற்செயலான ஒன்று,” என்று கூறிய அவர், “இருப்பினும் என்னால் நாடாளுமன்றத்தில் முக்கியமான பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்க முடிந்தது,” என்றார்.
விருது பெற்ற இளையர்களில் ஒருவரான ஜோசஃப் எட்வின் செல்வகுமார் ஜோய் மெர்வின், 18, வசதி குறைந்த மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தை இந்தத் தலைமைத்துவத் திட்டத்தில் முன்வைக்கப்போவதாகக் கூறினார்.
தன் அம்மாவும் சகோதரியும் கல்வித் துறையில் இருப்பதால் அதன் முக்கியத்துவத்தைச் சிறு வயதிலிருந்தே அறிந்தவர் ஜோய்.
“கல்வி எப்போதும் பரிணமித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் வசதி குறைந்த மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நான் அவர்களுக்கு உதவ முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசியப் பல்கலைக்கழகக் கணிதம் மற்றும் அறிவியல் பள்ளியில் பயிலும் கிருத்திக்கா செல்வப்பெருமாள், 17, இந்தத் தலைமைத்துவத் திட்டம் மூலம் பொதுச் சுகாதாரத் துறையில் கூடுதல் விழிப்புணர்வை உருவாக்க விரும்புகிறார்.
“சுகாதாரப் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்துச் சிங்கப்பூரர்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்,” என்றார் அவர்.
குறிப்பாக, வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பொதுச் சுகாதாரம் சார்ந்த கல்வி அவசியம் என்று கருதுவதாக அவர் சொன்னார்.
“வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பல சமூகங்களுடன் உரையாடுவதால் அவர்களுடைய தேவைகளை நன்கு அறிந்துகொள்ள முடிந்தது,” என்று கூறினார் கிருத்திக்கா.

