தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறிமுறையாக்கத்தில் சாதனை படைத்துவரும் இளையர்

2 mins read
f42eb332-9fa0-42d4-8b32-1474e8f8d199
அமெரிக்காவில் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் ஜட்டின். - படம்: ஆப்பிள்

தொடக்கப்பள்ளிக் காலத்திலிருந்தே வித்தியாசமான ஓர் உலகில் திளைத்திருப்பவர் ஜட்டின் ராகேஷ். கணினியின் செயல்பாடுகளை அறிவதில் அவருக்கு ஆர்வம் மிகுதி.

குறிமுறையாக்கம் (Coding) குறித்து 11 வயதில் கற்கத் தொடங்கிய ஜட்டின், 16 வயதில் அதில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.

தகவல் தொழிநுட்பத் துறையில் பணியாற்றி வரும் ஜட்டினின் தாயார் உமா ராகேஷ், 42, அவருக்கு வழிகாட்டி.

தாயின் உந்துதலால் இணையத்தில் குறிமுறையாக்கம் குறித்து கற்கத் தொடங்கிய ஜட்டின், தொடக்கத்தில் அது நேரத்தை வீணடிப்பதாகக் கருதினார்.

ஓராண்டு காலம் குறிமுறையாக்க வகுப்புகளுக்குச் சென்ற பின்னர் அவரது ஈடுபாடு அதிகரித்தது. பள்ளியிலும் குறிமுறையாக்கத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் ஜட்டின்.

செயிண்ட் ஜோசப்ஸ் கல்விநிலையத்தில் உயர்நிலை நான்காம் வகுப்பில் பயிலும் ஜட்டின், அங்கு மாணவர்கள் தலைமையிலான குறிமுறையாக்கத் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், நிஜ வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தவும் குறிமுறையாக்கத்தில் விருப்பம் கொண்ட திறமையாளர்களை மேம்படுத்தவும் பள்ளியில் ஒரு திட்டத்தை ஜட்டின் தொடங்கினார்.

திறனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதமாக ஜட்டின் ‘ஸ்விஃப்ட் ஆக்சிலேட்டர் புரோகிராம்’ எனும் திட்டத்துக்குப் பதிவு செய்தார்.

ஒரு செயலியை உருவாக்கி அதை ஆப் ஸ்டோரில் வெளியிடுவது அதன் நோக்கமாகும்.

குறிமுறையாக்கத்தில் இன்னும் திறம்படச் செயல்பட, ஆப்பிள் நிறுவனம் நடத்திய ஸ்விஃப்ட் மாணவர் சவாலில் ஜட்டின் பங்கேற்றார். அந்தச் சவால் குறிமுறையாக்கத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் படைப்பாற்றல், குறிமுறையாக்கத் திறன்களை வெளிப்படுத்தவும் உலகத் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பளித்து வருகிறது.

உலகெமெங்கும் இருந்தும் பல மாணவர்கள் அப்போட்டியில் கலந்துகொள்வர். மூன்று தடவை அப்போட்டியில் பங்கேற்ற ஜட்டின், மூன்றாவது முறை வாகை சூடியதுடன், புகழ்பெற்ற வெற்றியாளர் எனும் பட்டத்தையும் வென்றார்.

அந்தச் சவாலில் ஒரு செயலியை உருவாக்கிய ஜட்டின் தனது தங்கையை நோக்கமாகக் கொண்டு அதை வடிவமைத்துள்ளார்.

“என் தங்கையும் இக்காலத்து இளையர்கள் பலரும் எந்த ஓர் அம்சத்திலும் ஒருமித்த கவனத்தைச் செலுத்த மிகவும் சிரமப்படுகின்றனர். போதிய கவனம் செலுத்தாமை எவ்வாறான பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை கருத்தில்கொண்டு செயலியை உருவாக்கினேன்,” என்றார் ஜட்டின்.

வெற்றி பெற்ற ஜட்டினுக்கு அமெரிக்காவில் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தைக் காணும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.

“ஆப்பிள் பார்க்கிற்குச் சென்றபோது அங்குள்ள பல பொறியாளர்களுடன் பேசி பலவற்றைக் கற்றுக்கொண்டேன். எனது அனுபவத்தை மெருகூட்டும் வகையில் மாணவர்களுடனும் பல கலந்துரையாடல்களை நடத்தினேன். அந்த அனுபவம் தொழில்நுட்பத்தின் மீதான எனது கண்ணோட்டத்தையும் விரிவுபடுத்தியது,” என்றார் ஜட்டின்.

ஆப்பிள் பார்க்கில் மாணவர்களுடன் ஜட்டின்.
ஆப்பிள் பார்க்கில் மாணவர்களுடன் ஜட்டின். - படம்: ஆப்பிள்

ஜட்டினின் வளர்ச்சியில் பெருமை கொள்ளும் அவரது தாயார் உமா ராகேஷ், “குறிமுறையாக்கத்தின் முக்கியத்துவத்தை ஜட்டினுக்கு சிறுவயதில் கூறினேன். அதைப் புரிந்துகொண்டு இவ்வளவு தூரம் வளர்ச்சியடைவான் என்று எதிர்பார்க்கவில்லை,” என்று பெருமிதத்துடன் அவர் சொன்னார் .

குறிப்புச் சொற்கள்