இன, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திய இளையர் விழா

இன, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திய இளையர் விழா

படம்: ஹார்மனி சர்க்கிள்

28 Sep 2026 - 6:00 am

2 mins read

பல்கலைக்கழக மாணவர்களிடையே இன, சமய நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்குடன் ‘கம்யூனிட்டி ஆன் கேம்பஸ்’ என்ற இளையர் விழா முதன்முறையாகச் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறியுள்ளது.

செப்டம்பர் 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடந்த விழாவை ‘ஹார்மனி சர்க்கிள்’ அமைப்பைச் சேர்ந்த 80 இளைய தலைவர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர்.

கலாசார, சமூக, இளையர் அமைச்சின் ஆதரவுடன் நடந்த விழாவில் நான்கு உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் நடத்தும் 15 பண்பாட்டு, சமய அமைப்புகளுடன் பிற சமய அமைப்புகளின் இளையர் பிரிவுகளும் பங்கேற்றன.

விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலாசார, சமூக, இளையர்துறை, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் கலந்துகொண்டார்.

“சிங்கப்பூரின் நல்லிணக்கம் தானியக்க முறையில் இயங்கும் ஓர் அம்சம் என எண்ணி மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. அதனை எதிர்காலத் தலைமுறையினர் பேணிக் காப்பது மிகவும் அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் அனைத்து அங்கங்களும் மனிதர்களின் ஐம்புலன்களை மையமாகக் கொண்டு அமைந்திருந்தன.

விழாவின் அனைத்து அங்கங்களும் மனிதர்களின் ஐம்புலன்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.
விழாவின் அனைத்து அங்கங்களும் மனிதர்களின் ஐம்புலன்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன. - படம்: ஹார்மனி சர்க்கிள்

விழாவை ஏற்பாடு செய்யும் வேளையில் அனைவருக்கும் பொருத்தமான கருப்பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது முக்கியக் குறிக்கோளாக இருந்ததென ஏற்பாட்டுக் குழு இணைத் தலைவர் இஸ்மாயில் மீரா பேகம் கூறினார்.

“மாணவர்கள் தங்களின் அன்றாட வாழ்வில் பார்க்கும், கேட்கும், நுகரும், சுவைக்கும், தொட்டுணரும் பண்பாட்டுக் கூறுகளை அவர்கள் நினைவுகூரும் வகையில் விழாவை வடிவமைக்க எண்ணினோம்.

“பள்ளி, குடும்பம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் இருப்பதில்லை. தானாகச் சிந்திக்கும் திறனை அவர்கள் அவ்வயதில் கொண்டிருப்பதால் இன, சமய நல்லிணக்கக் கூறுகளை அவர்களுக்கு அக்கட்டத்தில் புகட்டுவது ஆக்ககரமாக இருக்குமென நம்புகிறோம்,” என்றார் அவர்.

ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான இளஞ்சீக்கியர் சங்கத் தலைவர் ஹரிஷ்பால் சிங் இவ்விழா சீக்கியப் பண்பாட்டைச் சிங்கப்பூர் இளையர்களுக்கு அறிமுகப்படுத்த உதவியாக இருந்ததெனக் கூறினார்.

“பண்பாட்டை ஆழமாகப் புரிந்துகொள்ள சீக்கிய இளையர்க்கும் இத்தகைய விழாக்கள் உதவுகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.

விழாவில் வெவ்வேறு கலாசாரங்களின் உணவுவகைகள், வாசனைப் பொருள்கள், நடவடிக்கைகள், பயிலரங்குகள் என்று பலதரப்பட்ட அங்கங்கள் இடம்பெற்று மாணவர்களுக்குப் பண்பாட்டு விருந்தாக அமைந்தன.

நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக ‘த வில்லேஜ் வி பில்ட்’ என்ற இளையர் கருத்துரையாடலும் இடம்பெற்றது.

இளையர் தனிமை உணர்வையும் மனிதர்களிடையேயான வித்தியாசங்களையும் கடந்து எவ்வாறு பிணைப்புகளை ஏற்படுத்த முடியுமென்ற தலைப்பில்  ‘தி வில்லேஜ் வி பில்ட்’ கருத்துரையாடல் நடைபெற்றது.
இளையர் தனிமை உணர்வையும் மனிதர்களிடையேயான வித்தியாசங்களையும் கடந்து எவ்வாறு பிணைப்புகளை ஏற்படுத்த முடியுமென்ற தலைப்பில் ‘தி வில்லேஜ் வி பில்ட்’ கருத்துரையாடல் நடைபெற்றது. - படம்: யுகேஷ் கண்ணன்

இளையரிடையே தனிமை உணர்வும் சமூகத் தனிமைப்படுத்தலும் அதிகமாக இருக்கும் வேளையில் மனிதர்களுக்கு இடையேயான வித்தியாசங்களைக் கடந்து பிணைப்புகளை ஏற்படுத்தக்கூடிய வழிமுறைகள் கலந்துரையாடப்பட்டன.

சமய அமைப்புகளிலும் சமயம் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டுள்ள ஃபெலிசியா சின் ஃபூங் லிங், உஸ்தாஜா லியானா முஸ்ஃபிரா, மாஸ்டர் பெஞ்சமின் டான், ஐஸ்வரியா ஸ்ரீ ஆகிய நால்வரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இவ்விழா இனி ஈராண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு பல்கலைக்கழக வளாகங்களில் ஏற்பாடு செய்யப்படுமென ‘ஹார்மனி சர்க்கிள்’ அமைப்பு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்