பழைய புதிர் விளையாட்டுகளுக்கு மறுவாழ்வளிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது ‘புரோஜெக்ட் எனிக்மா’ எனும் சமூக நோக்கு நிறுவனம்.
“சிறுவயதிலிருந்தே பெற்றோர், ஆசிரியர்கள் எனக்கு அளிக்கும் புதிர்விளையாட்டுகளைச் சேகரித்து வந்தேன். ராணுவத்துக்கான தேர்வுச் சுற்றில் புதிர் அங்கத்தில் ஈடுபட்டபோதுதான் இதில் முழு மூச்சாக இறங்கும் எண்ணம் வந்தது,” என்றார் ‘புரோஜெக்ட் எனிக்மா’வை அமைத்த வயிரவன் இராமநாதன், 30.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் ‘மீள்திறன், வளர்ச்சி, முனைப்பு’ (Resilience and Growth initiative), ‘என்யுஎஸ் என்டர்பிரைஸ்’ ஆகியவற்றின் ஆதரவில் ‘பசுல்டோப்பியா’ எனும் புதிர்க் கண்காட்சி-நூலகத்தை அவர் முதன்முதலில் கிச்சனர் சாலையில் 2023ஆம் ஆண்டில் திறந்தார்.
தற்போது அது சிட்டி ஸ்குவேர் மால் கடைத்தொகுதியின் நான்காம் தளத்தில் உள்ளது. விதவிதமான கையடக்கப் புதிர்களை இரவல் பெறவும் விளையாடிப் பார்க்கவும் அந்நூலகம் வாய்ப்பளித்து வருகிறது.
புத்தாக்கத்தில் இரட்டிப்பு
போட்டித்தன்மைமிக்க வணிகச் சூழலில் ஒரு நிறுவனத்தைத் தனி ஆளாக நடத்துவது சுலபமல்ல.
“சவால்கள் என்பது ஏராளம். ஒவ்வொன்றைக் கடப்பதும் ஒரு புதிர்போலத்தான். இடம் அமைவது, புதிதாக ஒன்றை விளையாடிப் பார்க்க மக்களை ஊக்குவிப்பது, நிறுவனத்தைப் பிரபலப்படுத்துவது போன்ற சவால்களைச் சந்திக்க வேண்டும்,” என்றார் இராமநாதன்.
மக்களைக் கவர்வதற்காகத் தன் நிறுவனத்தைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கும் இராமநாதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அனுபவங்களைச் சென்ற மாதம் இரட்டிப்பாக்கினார். சைன்ஸ்டோப்பியா’ (Sciencetopia) எனும் புதிய அறிவியல் புதிர் நூலகத்தையும் ‘பசுல்டோப்பியா’வின் அருகிலேயே அவர் மார்ச் 16ஆம் தேதி திறந்தார்.
சைன்ஸ்டோப்பியாவில் அறிவியல் சார்ந்த ஏறக்குறைய 600 விளையாட்டுகள் உள்ளன. ‘பசுல்டோப்பியா’வையும் சேர்த்து 30 நாடுகளிலிருந்து 3,000 விளையாட்டுகள் உள்ளன. அவற்றில் 1,000 நன்கொடையாகக் கிடைத்தவை.
தொடர்புடைய செய்திகள்
தேசிய இளையர் மன்றத்தின் இளையர் நடவடிக்கை சவாலின் (Youth Action Challenge Season 4) நான்காம் அத்தியாயத்தில், இளையர் கோ:லேப் (Youth Co:Lab) வெற்றியாளராகி பெற்ற $25,000 பரிசுத் தொகை ‘சைன்ஸ்டோப்பியா’வை அமைக்க உதவியது.
“இதில் நீடித்த நிலைத்தன்மை அம்சம் முக்கியமானது. ஒருமுறை விளையாடியபின் ஆர்வம் குறையும் விளையாட்டுகளையே இங்கு வைத்திருக்கிறோம். பலருக்கும் இரவல் அளிப்பதால் அவற்றுக்கு மறுவாழ்வளிக்கிறோம். சில விளையாட்டுகளை மறுசீரமைத்தும் அவற்றின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரிக்கிறோம்,” என்றார் இராமநாதன்.
வெளிநாடுகளிலிருந்து வாங்கும் விளையாட்டுகளோடு, தம் குழுவினர் உருவாக்கிய விளையாட்டுகளும் நூலகத்தில் இருப்பதாகக் கூறினார் இராமநாதன்.
“இங்கு வந்து விளையாடிய சிலர் பின்பு தாங்களே புதிர்களை உருவாக்கியுள்ளனர். அவற்றையும் இங்கு காணலாம்,” என அவர் பெருமையோடு கூறினார்.
மேல்விவரங்களுக்கு https://www.projectenigma.org/ இணையத்தளத்தை நாடலாம்.