உள்ளூர், வெளிநாட்டுக் கலைஞர்களின் கைவண்ணத்தில் அமைந்த ஏறத்தாழ 70 ஒளி வடிவமைப்புகளும் நிகழ்வுகளும் இடம்பெறும் சிங்கப்பூர் ‘லைட் டு நைட்’ திருவிழாவில் இளையர்கள் கபிலன் நாயுடு, வைகேஸ் மோகன் இருவரும் பெரும் பங்காற்றியுள்ளனர்.
தொழில்நுட்பம் சார்ந்த கலையைக் கையிலெடுத்தல்
கபிலனுக்கு மூன்று வயதாக இருந்தபோது, யதார்த்த உலகிலிருந்து தப்பித்து கற்பனை உலகில் ஒளிந்துகொள்ள ஓவியத்தைக் கையிலெடுத்தார். தற்போது அதை முழுநேரப் பணியாக மேற்கொண்டு வருகிறார் 32 வயது கபிலன்.
சிங்கப்பூரில் பெரிதும் வரவேற்கப்படும் ஒளித் திருவிழாவில் இவ்வாண்டு இவரது படைப்பு இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தின் வட்ட வடிவ நூலகக் கட்டடத்தில், ‘காலச் சக்கரம்’ எனும் கருப்பொருளில் அமைந்த இவரது மின்னிலக்க ஓவியம் இடம்பெற்றுள்ளது.
“பள்ளிப் பருவத்தின்போது வகுப்பில் பாடம் ஒருபுறம் நடக்க, புத்தகத்தில் படம் வரைவதே எனது வழக்கமாக இருந்தது. நான் புத்தகத்தில் படித்ததைவிட வரைந்ததே அதிகம்,” என்று சொல்லிச் சிரித்தார்.
“பொதுவாக, இந்தியச் சமூகத்தில் கலைத் துறையில் முழுநேரமாக ஈடுபடுவதைப் பெற்றோர் விரும்புவதில்லை. ஆனால், என் ஆர்வத்தினால் என் பெற்றோர் தடைபோடாது என்னை அனுமதித்தனர்,” என்றார் அவர்.
ஓவியங்கள், கலை, வடிவமைப்பு மீதான ஆர்வத்தால் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கலை, வடிவமைப்பு, ஊடகப் பள்ளியில் கபிலன் பயின்றார். 2016ஆம் ஆண்டு முதல் தமது படைப்புகளைக் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தத் தொடங்கினார்.
“பல்வேறு கண்காட்சிகளில் பங்கெடுத்திருந்தாலும் இதுவரை அதிகமானோர் என் படைப்புகளைப் பார்க்க இந்த ஒளித்திருவிழாதான் வாய்ப்பு அளித்துள்ளது,” என்றார்.
“முதலில் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளித்தாலும், கட்டடத்தின் மட்டங்களிலுள்ள வேறுபாடுகள், அதன் அளவு, நுணுக்கங்களைப் புரிந்து அதற்கேற்ற கலை வடிவமைப்பைச் செய்வது எனக்கே மலைப்பாக இருந்தது,” என்று சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இடத்திற்கேற்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுக்க ஆய்வு செய்ததாகக் கூறிய கபிலன், காலத்தைக் கண்முன் காட்டும் கருவி போன்றது அரும்பொருளகம் என்பதாலும், அதில் உள்ள பொருள்கள் சமூகத்தில் மதிப்புமிக்கவை என்பதாலும், அதனைக் காட்டும் வகையில் ‘காலச் சக்கரம்’ எனும் கருப்பொருளைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்டார்.
ஏறத்தாழ அனைத்துச் சமயங்களிலும் இனங்களிலும் வெவ்வேறு வகைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்பு, இறப்பு கண்ணோட்டத்தை அடிப்படையாக வைத்து இந்த மின்னிலக்க வடிவமைப்பைச் செய்துள்ளார் கபிலன்.
“கலையைப் படிக்கவோ தொழிலாகச் செய்யவோ இந்தியச் சமூகத்தில் தயக்கம் இருப்பதை உணர்கிறேன்,” என்று சொன்ன கபிலன், நேரடியாக இல்லை என்றாலும், இணைய விளையாட்டு வடிவமைப்பு, தொழில்நுட்பத் துறை எனப் பல்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதால், ஆர்வமுள்ளவர்கள் முன்வருமாறு ஊக்குவிக்கிறார்.
கலை ஆர்வத்தை ஊக்குவிக்க விருப்பம்
கருப்பொருளைத் தேர்ந்தெடுத்தல், கலைஞர்களை ஒருங்கிணைத்தல், நிறுவல்களைக் கையாளுதல் எனப் பம்பரமாகச் சுழன்று ஒளித் திருவிழாவை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார் வைகேஸ் மோகன், 32.
“எனக்குத் தெரிந்ததெல்லாம் கலை நிர்வாகம் மட்டுமே. அத்துறையில் முன்னேறுவதும் ஒளித் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்கும் பொறுப்பு கிடைத்ததும் மகிழ்ச்சி,” என்றார்.
வானொலியில் பணியாற்றியதிலிருந்து கலை, ஊடகத் துறையில் தயாரிப்பு, நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஈடுபட இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அத்துறையில் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனம் ஒன்றில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை இறுகப்பற்றிய இவர், திறனை வளர்த்துக்கொள்ள சான்றிதழ் படிப்புகளையும் மேற்கொள்ளத் தொடங்கினார். பின்னர், சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில் பணிக்குச் சேர்ந்த இவர், நான்கு ஆண்டுகளில் விழாத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
“ஏறத்தாழ 70 நிறுவல்கள், நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இத்திருவிழாவிற்கு, அனைத்துலக அளவில் கலைஞர்கள், நிறுவல் பணிகளை மேற்கொள்வோர் உள்ளிட்ட பலருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் குழுவினரின் ஆதரவுடன் இது சாத்தியமானது,” என்றார்.
எதிர்காலம் குறித்த பெருங்கனவுகள் எதுவும் இல்லை என்றாலும், தொடர்ந்து கலை குறித்த புரிதலைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும் இளையர்களை இத்துறைக்கு வர ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் விழைகிறார் வைகேஸ்.

