துணிவுடன் திறன்பெற்று துடிப்புடன் சிறக்கலாம்

துணிவுடன் திறன்பெற்று துடிப்புடன் சிறக்கலாம்

7 mins read
பொருத்தமான அறிவுரையையும் துல்லியமான பரிந்துரையையும் நாடும் இளையர்கள்
ba0cc560-04f5-45b2-9644-a7bee0657343
செயற்கை நுண்ணறிவின் விளைவுகளை எதிர்கொள்ளும் நோக்கில் சிங்கப்பூரின் பல்வேறு துறைகளிலும் நிறுவனங்களிலும் நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் அமைக்கப்பட இருப்பதாகப் பிரதமர் லான்ஸ் வோங் தமது மே தினப் பேரணி உரையில் தெரிவித்தார். - படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தொழிற்துறைகளிலும் வேலையிடங்களிலும் அதிகரிக்கும் நிலையில், அரசாங்கம் ஒவ்வோர் ஊழியரையும் பாதுகாக்கக் கடப்பாடு தெரிவித்துள்ளது.

நமது காலத்தின் மாபெரும் தொழில்நுட்ப மாற்றமாகத் திகழும் செயற்கை நுண்ணறிவால் வேலைகள் மாறும். சில வேலைகள் முற்றிலும் இல்லாமற்போகும். மாற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் ஏற்படும் என்று கடந்த வெள்ளிக்கிழமை (மே 1) ஆற்றிய மே தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார். 

“ஆனால் சிங்கப்பூரர்கள் செயற்கை நுண்ணறிவைக் கற்க முன்வரவேண்டும். பதற்றமோ, உறுதியின்மையோ நம்மைத் தடுக்கவிடக்கூடாது,” என்றார் பிரதமர் வோங்.

மத்திய கிழக்குப் பூசல், தொழில்நுட்பப் பெருநிறுவனங்களின் உலகளாவிய ஆட்குறைப்பு உள்ளிட்டவற்றால் பணியாளர்களுக்குப் பதற்றம் ஏற்பட்டு வருவதை, தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைவர் இங் சீ மெங் தமது மே தின உரையில் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இளம் ஊழியர்களின் வேலைகளும் முக்கியமான அடிப்படைத் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளும் பறிபோகும் ஆபத்து உள்ளது என்றார் திரு இங். 

சிங்கப்பூரர்கள் செயற்கை நுண்ணறிவைக் கற்க முன்வரவேண்டும். பதற்றமோ உறுதியின்மையோ உங்களைத் தடுக்க விடாதீர்கள்.
பிரதமர் லாரன்ஸ் வோங்

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவப்படவுள்ள சிங்கப்பூர் ஊழியரணி, திறன் மேம்பாட்டு அமைப்பு (Workforce and Skills Singapore), வாழ்க்கைத் தொழிலுக்கான பயிற்சியையும் வழிகாட்டுதலையும் இளையர்களுக்குக் கூடுதலாக வழங்க முற்படும்.

புதிய அமைப்பின் மேம்பட்ட தேடுதளம் வழி இளையர்கள் பயனடையலாம்.

அத்துடன், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான முத்தரப்பு மன்றம் (Tripartite Jobs Council) ஊழியர்களுக்குத் திறனளிக்க, துறைவாரியான அணுகுமுறையைக் கையாளும். 

இந்நிலையில், இளையர்கள் தங்கள் பங்குக்கு மாற்றங்களுக்கு எப்படித் தயாராகின்றனர் என்று தமிழ் முரசு அறிந்து வந்தது.

ஒருபுறம், நிச்சயமில்லாத வருங்காலத்தைப் பற்றிய கவலை இருந்தாலும் மறுபுறம் மாற்றங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களைத் தகவமைக்கும் முயற்சியில் இளையர்கள் நம்பிக்கையுடன் ஈடுபடுகின்றனர்.

இருந்தபோதும், எண்ணற்ற ‘ஏஐ’ வகுப்புகளில் எதைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்ற குழப்பம் நிலவுகையில் இது சார்ந்த வழிகாட்டுதல் மேலும் அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் 29 வயது ஹஷ்வின்.
மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் 29 வயது ஹஷ்வின். - படம்: ஹஷ்வின்

அந்தோணி ஹஷ்வின், 29.

“மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் எனக்கு, அன்றாட வேலைகளில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு புதிதன்று. தற்போதைக்கு செயற்கை நுண்ணறிவின் அறிவு விரிவானது என்றாலும் ஆழமற்றது. இதில் பலருக்குத் தெரியாத பல அபாயங்கள் ஒளிந்துள்ளன. இன்று செயற்கை நுண்ணறிவு நம் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

“அது இங்கே நிலைத்து நிற்கப்போகிறது. அரசு இதற்குப் பரவலான அணுகலை வழங்குவது வரவேற்கத்தக்கது. வேலைத்திறனை அதிகரிக்க இது உதவினாலும், தேவையில்லாத இடங்களிலும் இதைத் திணிப்பதால் பல அபாயங்கள் நேரிடலாம். எனவே, ஒரு பொதுவான அணுகுமுறைக்குப் பதிலாக, குறிப்பிட்ட துறைகளை இலக்காகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகளை வழங்கலாம்.”

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தொழில் பகுப்பாய்வு பயிலும் மாணவி, போளூரு மது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தொழில் பகுப்பாய்வு பயிலும் மாணவி, போளூரு மது. - படம்: போளூரு மது

போளூரு மது

“எதிர்காலத்தில் உற்பத்தித் திறன் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்தே இருக்கப்போகிறது. செயற்கை நுண்ணறிவைச் சிறப்பாகக் கையாளத் தெரிந்த ஒருவருக்கு, வேலைவாய்ப்புகளில் கூடுதல் முன்னுரிமை நிச்சயம் கிடைக்கும்.

“இருப்பினும், நிறுவனங்களின் தரப்பில் பார்த்தால், தற்போதைய சூழலில் செயற்கை நுண்ணறிவின் தரவுகள் செயல்படும் விதம் தொடர்பில் தெளிவான வெளிப்படைத்தன்மை இல்லாததால் நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் இதனை அணுகுகின்றன. தரவுப் பாதுகாப்பு, ரகசியத்தன்மை ஆகியவற்றைக் குறித்த கவலைகள் அதிகமாக உள்ளன. இது செயற்கை நுண்ணறிவின் முழுமையான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தக்கூடும்.

“இருப்பினும் வருங்காலத்தில், இதன் அம்சங்களைப் பற்றிய தகவல்கள் தெளிவடைந்தால் இந்நிலை மாறக்கூடும். அந்தக் கண்ணோட்டத்தில், மக்கள் செயற்கை நுண்ணறிவை மட்டும் சார்ந்து இருக்காமல், தம் பணி சார்ந்த அடிப்படை நுணுக்கங்களை அலட்சியமின்றிக் கற்றுக்கொள்வது அவசியம். பல நிறுவனங்கள் இன்றும் அந்த அடிப்படைத் திறன்களையே பெரிதும் எதிர்பார்க்கின்றன.”

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயிலும் 24 வயது மாணவர் சுப்பிரமணியன் கார்த்திகேயன்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயிலும் 24 வயது மாணவர் சுப்பிரமணியன் கார்த்திகேயன். - படம்: சுப்பிரமணியன் கார்த்திகேயன்

சுப்பிரமணியன் கார்த்திகேயன், 24.

“பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு குறித்த முறையான பயிற்சிகள் தற்போது முழுமையாகச் சேர்க்கப்படவில்லை. ஆனால், வேலைக்குச் செல்லும்போது, நிறுவனங்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுப் புலமையை எதிர்பார்க்கின்றன. இந்த இடைவெளியை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். எனவே, தற்போது எனது துறைக்கு ஏற்ற, எனது வேலைத்திறனை மேம்படுத்தக்கூடிய ‘ஏஐ’ படிப்புகளைத் தேடி வருகிறேன்.

“பொதுவான ‘ஏஐ’ அறிவைவிட, குறிப்பிட்ட வேலைகளுக்கு எந்த மாதிரியான கருவிகள் உதவும் என்பதைக் கண்டறிந்து, கற்பதில் ஆர்வமாக உள்ளேன். அப்போதுதான், வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்ப உலகில் என்னால் தனித்து நிற்க முடியும். எனவே செயற்கை நுண்ணறிவு பற்றிய மேலோட்டமான பயிற்சிகளை மட்டும் வழங்காமல், தனிப்பட்ட துறைகளில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தும் முறைகளைக் கற்பித்தால் அது மேலும் பயனுள்ளதாக இருக்கும்.”

கட்டட வடிவமைப்புப் பொறியாளராகப் பணிபுரியும் சதாசிவம் கிருஷ்ணரேகா, 25.
கட்டட வடிவமைப்புப் பொறியாளராகப் பணிபுரியும் சதாசிவம் கிருஷ்ணரேகா, 25. - படம்: சதாசிவம் கிருஷ்ணரேகா

சதாசிவம் கிருஷ்ணரேகா, 25.

“நிறுவனங்கள் தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மிக அதிகமாக வலியுறுத்தி வருகின்றன. கணினி நிரல் எழுதுவது முதல் அன்றாட அடிப்படைப் பணிகளைச் செய்வது வரை, செயற்கை நுண்ணறிவு நம் வாழ்க்கையை மிகவும் எளிதாக்குகிறது என்று கூறப்பட்டாலும், இதன் பயன்பாட்டில் பல்வேறு கவலைகளும் சவால்களும் உள்ளன. குறிப்பாக, கட்டுமானத் துறை, தரவு மையங்களை (Data Centres) அடிப்படையாகக் கொண்ட திட்டங்களில் இதன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதகமாக அமையக்கூடும். அதிகரித்து வரும் ‘ஏஐ’ பயன்பாடு சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுக்கும் என்பதால், சிலர் இதன் பயன்பாட்டை எதிர்க்கும் வாய்ப்பும் உள்ளது.

“மேலும், செயற்கை நுண்ணறிவு பரவலான வளர்ச்சி கண்டிருந்தாலும் அதன் தன்மைகள் முழுமை பெற்றவையல்ல. இதனால், மருத்துவம், கட்டுமானம் ஆகிய துறைகளில் அதனை அதிகமாகச் சார்ந்து பணிகளை மேற்கொண்டால், திருத்த முடியாத தவறுகள் நேரிடக்கூடும். ஆகையால் மனிதர்கள் பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் இதனைப் பயன்படுத்த வேண்டும்”.

த மில்லெனியல் லீடர் எழுத்தாளரான 38 வயது விவேக் இயாணி.
த மில்லெனியல் லீடர் எழுத்தாளரான 38 வயது விவேக் இயாணி. - படம்: விவேக் இயாணி

விவேக் இயாணி, வயது 38.

“செயற்கை நுண்ணறிவு என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு கருவியாகும். புத்தகங்களைக் காணொளிகளாக மாற்றுவது, நீண்ட நேரமெடுக்கும் ஆழமான ஆராய்ச்சிகளைச் செய்வது போன்ற பணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் பயிற்சிப் பயிலரங்குகளை நடத்திவருகிறேன். செயற்கை நுண்ணறிவு புதிய கருவிகளை உருவாக்கவும் வேலையை எளிதாக்கவும் எனக்குப் பெரிதும் உதவுகிறது.

“இது ஒரு பயனுள்ள கருவியாக இருந்தாலும், தகவல்கள் அனைத்தும் எளிதாகக் கிடைப்பதால் அனைவரும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினால் தங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் பலரிடத்தில் எழுகிறது.

“தொழில்நுட்பத் திறன்கள் அனைவரையும் சென்றடைய வகைசெய்யப்பட்டுள்ளது. அனைவரும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தத் தொடங்கினால், அதுவே கடுமையான போட்டியை உருவாக்கும். ‘ஏஐ’யைப் பயன்படுத்திப் பணத்தைச் சேமிக்க முடியுமா அல்லது சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி மக்களிடம் உள்ளது. நம் வேலையைப் பறிக்காமல் இது நம்மை மிகவும் திறமையாகச் செயல்பட வைக்கிறது என்பதே இக்கேள்விக்கான விடையாகும். எனவே, இதனை அரசாங்கம் மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும்.”

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயிலும் மதன் சிதம்பரநாதன்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயிலும் மதன் சிதம்பரநாதன். - படம்: மதன் சிதம்பரநாதன்

மதன் சிதம்பரநாதன்

‘ஆட்டோகேட்’ போன்ற மென்பொருள்களில் மொழிபெயர்ப்பு தேவைப்படும் அனைத்துப் பணிகளுக்கும் உதவும் ஒரு கருவியை நான் உருவாக்கி வருகிறேன். இதில் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், மக்கள் அளவுக்கதிகமாகச் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருக்கத் தொடங்கிவிட்டால் ‘ஏஐ’ இல்லாமல் அவர்களால் தங்கள் பணிகளைச் செய்ய முடியாமல் போகும்.

“செயற்கை நுண்ணறிவு நேரத்தைச் சேமித்தாலும், இதில் ஆழமான புரிதலோ அறிவோ இருப்பதில்லை. மனிதர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

“ஆழமான துறைசார் அறிவு உள்ள ஒருவர், செயற்கை நுண்ணறிவை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். அவர்களால் செயற்கை நுண்ணறிவிற்குச் சரியான குறிப்புகளை வழங்கவும், அது செய்யும் பிழைகளைத் திருத்தவும் முடியும். அது நமது திறனை உயர்த்தும் ஒரு கருவி மட்டுமே என்பதை நாம் உணரவேண்டும்.”

உற்பத்திப் பொறியாளராகப் பணிபுரியும் 29 வயது ஶ்ரீ ராகேஷ்.
உற்பத்திப் பொறியாளராகப் பணிபுரியும் 29 வயது ஶ்ரீ ராகேஷ். - படம்: ஶ்ரீ ராகேஷ்

ஶ்ரீ ராகேஷ், 29.

“உற்பத்தித் துறையில் நான் உற்பத்திப் பொறியாளராகப் பணிபுரிகிறேன். தரவுப் பகுப்பாய்வுக்காக, குறிப்பாக, தரம் சார்ந்த போக்குகளைக் கண்டறியவும் செயல்முறைகளை மேம்படுத்தவும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யவும் நான் முதன்மையாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறேன்.

“பகுப்பாய்வு, முடிவெடுக்கும் செயல்முறைகளை விரைவுபடுத்துவது ஆகியவற்றில் ‘ஏஐ’ எனது உற்பத்தித் திறனை மேம்படுத்தியுள்ளது என்பது உண்மையே என்றாலும், பணியிடத்தில் கிடைக்கும் அங்கீகாரம் அதை நாம் எவ்வளவு திறம்படப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது. தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி முறைகளை இன்னும் சிறப்பாக மாற்றியமைக்க முடியும். வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்திக்கொள்ள, களம் சார்ந்த நேரடிப் பயிற்சித் திட்டங்கள் பெரிதும் உதவும்.

“செயற்கை நுண்ணறிவின் அதிவேகமான வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து எவ்வாறு விரைவாக மேம்படுவது என்பதுதான் எனது முக்கியக் கவலையாக உள்ளது. தொடர்ச்சியான கற்றல் அவசியமாக இருந்தாலும், சரியான திறன்களைக் கண்டறிந்து அவற்றைக் குறுகிய காலத்தில் திறம்படப் பயன்படுத்துவது சவாலாக உள்ளது.”

வர்த்தக நிர்வாகி பிரியா ரவி.
வர்த்தக நிர்வாகி பிரியா ரவி. - படம்: பிரியா ரவி

பிரியா ரவி, 28.

“திட்ட மேலாண்மைப் பணிகளில், ஒருங்கிணைப்பு, நிர்வாகப் பணிகள், திட்ட முன்னேற்றத்தைக் கண்காணித்தல், ஆவணங்களைத் தயார் செய்தல் போன்ற பல்வேறு பணிகளுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை நான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். புதிய யோசனைகளை உருவாக்கச் செயற்கை நுண்ணறிவு ஒரு சிறந்த கருவியாக உள்ளது.

“இருப்பினும், இந்தத் தொழில்நுட்பம் வேலைத் திறனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மதிப்பிடுவது தற்போதைய நிலையில் மிகவும் கடினமாக உள்ளது. சமூகச் சேவைத் துறை மனிதர்களை மையமாகக் கொண்ட ஒரு துறையாகும். எனவே, தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்தாலும், மனிதர்களின் பங்களிப்பிற்கும் முயற்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது.

“அளவுக்கு அதிகமாக ‘ஏஐ’யைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, மனிதர்கள் தாங்கள் செய்யும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இறுதியாக, ஒவ்வொரு துறைக்கும் ஏற்றவாறு அரசாங்கம் எந்த வகையான ‘ஏஐ’ கருவிகளை உருவாக்க வேண்டும் என்ற தெளிவு தேவைப்படுகிறது.”

குறிப்புச் சொற்கள்