நூல்களை வாசிக்கும் ஆர்வம் 18 வயது ஷாலிபத் டிஃபனியை சமூகத்தில் பங்காற்றத் தூண்டியுள்ளது.
சிறுவயதிலிருந்து நூல்களோடு வளர்ந்த ஷாலிபத் ஆறு வயதிலேயே எழுத்தாளராகி விட்டார். ஆறு வயதிலும் பத்து வயதிலும் சிறுவர் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் ஷாலிபத்.
அவருக்கென ஒரு தனி நூலகத்தைப் பெற்றோர் அமைத்துக்கொடுத்திருந்தபோதும், நூலகங்களிலும் நூல்களைத் தேடித் தேடி படிப்பவர் ஷாலிபத்.
‘பெர்சி ஜேக்சன்’, ‘தியா ஸ்டில்டன்’ போன்ற கற்பனை நாவல்களில் தொடங்கி அரசியல் வரலாறு, பொருளியல் நூல்களையும் விரும்பிப் படிக்கிறார் ஷாலிபத்.
நூலகங்களில் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் நூல்களை இரவல் பெற முடியும் என்பதால் விருப்பமான நூல்களை ஷாலிபத்தால் முடிக்க முடியாமல் அடிக்கடி நூலகங்களுக்கு அபராதம் கட்டினார்.
“ஒரு நாள் வீட்டிலிருந்த ஒரு நூலை நண்பரிடம் இரவல் கொடுத்தேன். நெடுநாள்கள் ஆசைப்பட்டும் கிடைக்காத அந்த நூலைப் பார்த்ததும் நண்பரின் முகத்தில் மகிழ்ச்சி பூத்ததை மறக்கமுடியாது,” என்றார் ஷாலிபத்.
அப்போதுதான் சக மாணவர்களும் நூல்களை இரவல் பெற்று வாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டதை ஷாலிபத் அறிந்தார். அப்போது பிறந்தது ‘மிட்டல்டன் ரீட்ஸ்’ (middletonreads.com) என்ற இணையத்தளம்.
ஷாலிபத் படிக்கும் மிட்டல்டன் அனைத்துலகப் பள்ளியின் மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் நூல்களைப் பகிர்ந்துகொள்ள ‘மிட்டல்டன் ரீட்ஸ்’ இணையத்தளம் உதவுகிறது.
மாணவர்கள் பெற விரும்பும் நூல்களைத் தளத்தில் பதிவுசெய்யலாம். அதே நூலை வைத்திருக்கும் மற்ற மாணவர்கள் பதிவுசெய்த மாணவருக்கு அதைக் கொடுக்கலாம்.
“இதன்வழி ஏற்கெனவே படித்த நூல்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது,” என்றார் ஷாலிபத்.
மிட்டல்டன் அனைத்துலகப் பள்ளி ஆசிரியர்களும் ஷாலிபத்தின் பெற்றோரும் குடும்ப நண்பரும் ஷாலிபத்தை ஊக்குவித்தனர். இணையத்தளத்தை மேலும் பெரியளவில் கொண்டுசெல்ல அவர்கள் ஆலோசனை வழங்கினர்.
அவர்களின் வழிகாட்டுதலோடு ஷாலிபத்தின் ‘மிட்டல்டன் ரீட்ஸ்’ தளம் ஜனவரியில் தயாரானது. ஏப்ரல் மாதம் பள்ளியில் நடக்கவுள்ள வாசிப்பு வாரத்தில் அத்தளம் பள்ளியின் 400க்கும் மேற்பட்ட உயர்நிலை மாணவர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிமுகமாகும்.
சிங்கப்பூர் முழுவதும் இம்முயற்சியை விரிவுபடுத்த ஷாலிபத் விரும்புகிறார். அதற்காக ‘ஸ்கூல் ரீட்ஸ்’ (schoolreads.com), ‘எஸ்ஜி ரீட்ஸ்’ (sgreads.com) ஆகிய இரண்டு தளங்களையும் அவர் உருவாக்கியுள்ளார்.
‘ஸ்கூல் ரீட்ஸ்’ தளம் வழி ஒவ்வொரு பள்ளியிலும் தமது முயற்சியை ஷாலிபத் அறிமுகப்படுத்த விரும்புகிறார்.
‘எஸ்ஜி ரீட்ஸ்’ தளம் வழி வட்டார அளவில் பொதுமக்கள் நூல்களைப் பகிரலாம். அதன் முதற்படியாக ஷாலிபத் சமூக மன்றங்களுக்குச் சென்று தளத்தைப் பற்றிப் பகிரத் திட்டமிட்டுள்ளார்.

