சிங்கப்பூர் எதிர்காலத்தில் வாழ்வதற்கு உகந்த நாடாக இருப்பதற்கான வழிகளைத் தேட 18 வயதாகும் இளையர் சுகுமார் ரிஷிவந்த் எப்போதும் முனைப்புடன் இருப்பவர்.
குறிப்பாக, ரிஷிவந்துக்கு நீடித்த நிலைத்தன்மைமீது மிகுந்த ஆர்வம்.
இம்மாதம் 15ஆம் தேதியன்று சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ‘பலதுறைத் தொழிற்கல்லூரி கருத்தரங்கு 2025’ நடைபெற்றது.
கருத்தரங்கின் தொடக்க விழாவில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார். அமைச்சர் லீ மாணவர்கள் சிங்கப்பூரின் எதிர்காலத்தைத் துணிவுடனும் புத்தாக்கத்துடனும் கற்பனை செய்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறத்தாழ 500 மாணவர்களில் ரிஷிவந்தும் ஒருவர்.
இக்கருத்தரங்கின் மூலம் சிங்கப்பூரின் எதிர்காலத்தை நன்கு வடிவமைப்பதற்கான உந்துதல் தனக்குக் கிடைத்ததாக சொன்ன ரிஷிவந்த், அவ்வாய்ப்பை நினைத்து மகிழ்ந்தார்.
நீடித்த நிலைத்தன்மைமிக்க சிங்கப்பூரை உருவாக்க ரிஷிவந்த் ‘கிராஸ்ரோட்ஸ்’ எனும் விளையாட்டை விளையாடினார்.
அந்த விளையாட்டில் மக்கள், பொருளியல், சுற்றுச்சூழல் என மூன்று முக்கியக் கூறுகளில் கவனம் செலுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“அந்த மூன்று கூறுகளையும் ஒரே நேரத்தில் நிர்வகிப்பது சவாலாக இருந்தது. நிச்சயமற்ற சூழலில் சிங்கப்பூரின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகப் பெரும்பாலான மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் அறிவார்ந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்,” என்று ரிஷிவந்த் கூறினார்.
இரண்டாவதாக சிறந்த யோசனைகள் எனும் சவாலில் அவர் குழு உறுப்பினர்களுடன் இணைந்து சிங்கப்பூரின் பசுமையான, மீள்திறனுடன் கூடிய எதிர்காலத்தை உறுதிசெய்வதற்காக ஒரு புதிய திட்டத்தைப் பரிந்துரைக்கும் ஒரு நிமிடக் காணொளியை உருவாக்க வேண்டியிருந்தது.
அதில் ரிஷிவந்தின் குழுவினர் உலக வெப்பமயமாதல் போன்ற இன்றைய சவால்களை எவ்வாறு ஆக்கவழியில் எதிர்கொள்ளலாம் என்பதை ஆராய்ந்தனர்.
“எதிர்காலச் சவால்களை நிர்வகிக்க என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க இந்தச் செயல்பாடு வடிவமைக்கப்பட்டது,” என்று சொன்னார் ரிஷிவந்த்.
சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030 போன்ற தேசிய இலக்குகளைச் சந்திக்க எத்தகைய தீர்வுகளைக் கொண்டுவரலாம் என்பதை ஒட்டியும் அவர்கள் கலந்துரையாடினர்.
2030க்குள் சிங்கப்பூரின் ஊட்டச்சத்துத் தேவைகளில் 30 விழுக்காட்டை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் இலக்கை அடைய, பயன்படுத்தப்படாத இடங்களைப் பயன்படுத்தும் ஒரு முறையை ரிஷிவந்தும் அவரது குழுவினரும் முன்மொழிந்தனர்.
“தாவர வண்டி வடிவமைப்பு ஒன்றை உருவாக்கினோம். அதில் ஒரு நடமாடும் விவசாய வண்டி சிங்கப்பூரைச் சுற்றி வரும். கடினமான சூழ்நிலைகளின்போது நமது சொந்த வளங்களை நம்பியிருக்க முடியும் என்பதால் சுதந்திரமாக இருப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அது முற்படும்,” என்று ரிஷிவந்த் விளக்கினார்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வேதிப்பொறியியலில் பட்டயப் படிப்பு மேற்கொண்டு வரும் ரிஷிவந்த், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நீடித்த நிலைத்தன்மை வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நிலையான வழிகளைத் தான் எப்போதும் தேடுவதால் கருத்தரங்கின் கருப்பொருளுடன் தனக்கு வலுவான பிணைப்பு இருந்ததாகக் கருதுகிறார்.
மேலும், வீட்டிலேயே நீடித்த நிலைத்தன்மை வழிகளைப் பின்பற்றி வரும் இவர், நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது, உணவு விரயத்தைக் குறைப்பது போன்றவற்றையும் கருத்தில்கொண்டு செயல்படுகிறார்.