தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடந்துவந்த பாதையே வாழ்க்கையை வடிவமைத்தது

3 mins read
e1f4740d-ce80-45c5-9fe6-60d2895b3f6d
(இடமிருந்து) 19 வயது அச்சாரகர் ஓம் நித்தினும் அவரது மூத்த சகோதரரும். - படம்: அச்சாரகர் ஓம் நித்தின்

பலவீனமான சமூகங்களுக்கு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதியான எண்ணமே 19 வயது அச்சாரகர் ஓம் நித்தினின் வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்துள்ளது.

தற்போது தேசிய சேவையில் சார்ஜென்டாகப் பயிற்சிபெற்று வருகிற ஓம், சமூகத் தாக்கம், நிதி உள்ளடக்கம் (financial inclusion) ஆகிய துறைகளிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து வருகிறார்.

அண்மையில், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) 34வது உன்னத விருது விழாவில், அனைத்துலக இளங்கலை (IB) பிரிவில் தமது சாதனைகளுக்காக ஒம் அங்கீகாரம் பெற்றார்.

‘ஏஞ்சல்மேன் சிண்ட்ரம்’ என்ற நரம்புக் கோளாறு காரணமாக சிறப்புத் தேவையுடைய மூத்த சகோதரருடன் வளர்ந்த ஓமின் குழந்தைப் பருவம் சற்றே வித்தியாசமானது.

அன்றாட பராமரிப்புப் பணிகள் அவருக்குப் பொறுமையையும், சூழ்நிலைக்கேற்ப தம்மை தகவமைத்துக்கொள்ளும் திறன், மனித பன்முகத்தன்மையைப் பற்றிய ஆழ்ந்த புரிதலையும் அவருக்கு வழங்கின.

அச்சாரகர் ஓம் நித்தினும் அவரது குடும்பத்தினரும்.
அச்சாரகர் ஓம் நித்தினும் அவரது குடும்பத்தினரும். - படம்: அச்சாரகர் ஓம் நித்தின்

“அந்தக் காலத்தில் நான் கற்ற மிகப் பெரிய பாடம் பொறுமைதான். சில சமயங்களில் என் அண்ணணிடம் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் விளக்க வேண்டியிருக்கும். அவர் முழுமையாகப் புரிந்துகொண்டாரா என்பதை உறுதிப்படுத்திய பிறகே அடுத்ததற்கு செல்ல முடியும்,” என்றார் ஓம்.

சிறப்புத் தேவையுடைய குழந்தைகளும் அவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சிறு வயதிலிருந்தே கண்டறிந்த இந்த அனுபவம், அவரின் உலகக் கண்ணோட்டத்தையும் எதிர்காலக் கனவுகளையும் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.

பின்னர், சமூகத்தில் பின்தங்கியவர்களையும் சிறப்புத் தேவையுடையோரையும் ஆதரிக்கும் ‘புராஜக்ட் டிக்னிட்டி’ நிறுவனத்தில் வேலைப்பயிற்சிக்காக சேர்ந்தபோது, ஓமின் பச்சாதாபம் செயல்பாடாக உருமாற்றமடைந்தது.

பயிற்சிக்காலத்தில், அந்தச் சமூகத்தினருக்கு உணவு, சுகாதாரப் பராமரிப்பு ஆதரவுகளில் காணப்பட்ட இடைவெளிகளை நேரடியாகக் கண்டறிந்ததோடு, நிறுவனம் அதன் செயல்பாடுகளையும் தொடர்பாடல்களையும் மேம்படுத்துவதிலும் அவர் பங்களித்தார்.

இந்த அனுபவத்தால் ஊக்கமடைந்த ஓம், 2023ல் ‘தொழில்முனைவோர் அனுபவம்’ (Project Dignity Entrepreneurship Experience - PDEE) எனும் திட்டத்தைத் நிறுவினார். 13 முதல் 14 வயது மாணவர்களை ஈடுபடுத்திய இந்தத் திட்டம், கற்றல் அறிவை நடைமுறை அனுபவத்துடன் இணைத்து, அவர்கள் சொந்தமாக வர்த்தக முயற்சிகளை உருவாக்க வழிநடத்தியது.

ஒம், மற்ற புராஜக்ட் டிக்னிட்டி ஊழியர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலும் ஆரம்ப மூலதனமும் (seed funding) ஒவ்வொரு குழுவிற்கும் வழங்கப்பட்டது. பொருளாதாரக் கோட்பாடுகளை நடைமுறைச் சூழலில் பயன்படுத்தும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றனர்.

இந்தத் திட்டம் ஈட்டிய $600 லாபம் பலவீனமான சமூகத்தினருக்கு 80 உணவு உணவுப் பொட்டலங்களை வழங்கவும், அந்நிறுவனத்தின் ‘பே-இட்-ஃபார்வர்ட்’ (Pay-It-Forward) திட்டத்திற்கு ஆதரவாகவும் பயன்படுத்தப்பட்டது.

“மாணவர்கள் வர்த்தக அறிவையும், நடைமுறை அனுபவத்தையும் பெற உதவிய அதே நேரத்தில் நாங்கள் சமூகத்திற்கும் ஆதரவளித்தோம்,” என்று ஒம் கூறினார்.

இதற்கிடையே, ‘ஒய்எம்சிஏ’ (YMCA) உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்களிலும் அவர் தொண்டூழியராக சேவையாற்றினார்.

“ஒவ்வொருவரும் தனித்துவம் பெற்றவர்கள். யாரும் யாரையும் விடக் குறைவானவர்கள் அல்ல,” என்று அவர் வலியுறுத்தினார்.

சிண்டாவின் 34வது உன்னத விருது விழாவில் பெற்ற அங்கீகாரம் குறித்து அவர், “ஒருவரின் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படுவது எப்போதும் மகிழ்ச்சிகரமான ஒன்றுதான்,” என்றார்.

சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் அச்சாரகர் ஓம் நித்தினுக்கு விருதை வழங்கினார்.
சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் அச்சாரகர் ஓம் நித்தினுக்கு விருதை வழங்கினார். - படம்: சிண்டா

“ஆனால், நான் இவ்வளவு தூரம் வந்துவிட்டேன், அதனால் நிறுத்திவிடலாம் என்ற எண்ணம் ஏற்படக்கூடாது என்பதற்கும் இது ஒரு நினைவூட்டல். தொடர்ந்து முன்னேறி, இன்னும் சிறப்பாக சாதிக்க வேண்டும்,” என்று உறுதிபூண்டார்.

எதிர்காலத்தில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்க திட்டமிட்டுள்ள ஒம், பின்தங்கிய குடும்பங்களுக்கும் சிறப்பு தேவையுடையோருக்கும் நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் நிதி அமைப்புகளை வடிவமைப்பதை இலக்காக கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்